அன்னையின் பாத்திமா காட்சிகளால் நமக்கு கிடைத்த ஜெபங்கள்.
வானதூதர் கற்றுக்கொடுத்த ஜெபங்கள்: ( திவ்ய நற்கருணை நாதருக்கு முன் சொல்லப்பட வேண்டிய ஜெபங்கள். குறிப்பாக நற்கருணை உட்கொண்டபின் சொல்ல வேண்டிய ஜெபங்கள்)
“ என் தேவனே! உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்க்காகவும், உம்மை ஆராதிக்காதவர்க்காகவும், உம்மை நம்பாதவர்காகவும் உம்மை நேசியாதவர்க்காகவும் மன்னிப்பு கேட்கிறேன் “
“ மகா பரிசுத்த தமத்திரித்துவமே, பிதாவே, சுதனே, இஸ்பிரிஸ்துசாந்துவே (பரிசுத்த ஆவி) உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகமெல்லாம் திவ்ய நற்கருணைப் பேழையில் இருக்கும் சேசுகிறிஸ்துநாதருடைய விலை மதிக்கப்படாத திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்துக்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திவ்ய இருதயத்தினுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்தினுடயவும் அளவற்ற பேறு பலன்களைப்பார்த்து, நிர்ப்பாக்கிய பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன்.
மாதா கற்றுக்கொடுத்த ஜெபங்கள்,
“ ஓ மிகவும் பரிசுத்த திருத்துவமே, உம்மை ஆராதிக்கிறேன். என் தேவனே ! என் தேவனே மிகவும் பரிசுத்த திவ்ய நற்கருணையில் உம்மை நேசிக்கிறேன்
“ ஓ என் சேசுவே, எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆன்மாக்களையும், விசேசமாய் யார் அதிக தேவையிலிருக்கிறார்களோ அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்தருளும் “
நாம் பரித்தியாகங்கள் செய்யும் போது சொல்லக்கூடிய ஜெபம். ( பாவிகளுக்காக உங்களை பலியாக்குங்கள் என்று அன்னை கூறியது இச்செபத்தின் முன்தான் )
“ ஓ சேசுவே ! உமது அன்பிற்காகவும், பாவிகள் மனம் திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இதைச்செய்கிறேன்”
நம் தேவமாதாவின் வேண்டுகோள் :
பாவிகளுக்காக உங்களை பலியாக்குங்கள். ஜெபியுங்கள், அதிகமாக ஜெபியுங்கள், ஏனென்றால் தங்களுக்காக ஜெபிக்கவும் ஒறுத்தல் முயற்சிகள் செய்யவும் ஒருவரும் இல்லாததால் அநேக ஆன்மாக்கள் நரகத்திற்கு செல்கிறார்கள்.
வானதூதரின் வேண்டுகோள் :
என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?. ஜெபியுங்கள்; மிக அதிகமாக ஜெபியுங்கள். சேசு மரியாயின் இருதயங்கள் இரக்கமுள்ள திட்டங்களை உங்களுக்கென வைத்துள்ளார்கள். ஜெபங்களையும், பரித்தியாகங்களையும் உன்னதருக்கு ஒப்புக்கொடுங்கள்.
“ நீங்கள் செய்யும் யாவற்றையும் ஒறுத்தல் முயற்சி ஆக்குங்கள். கடவுளை நோகச்செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனம்திரும்பும்படி மன்றாட்டாகவும் அவற்றை ஒப்புக்கொடுங்கள். இவ்விதம் உங்கள் நாட்டில் சமாதானத்தை கொண்டு வாருங்கள். நானே அதன் காவல்தூதன். போர்த்துக்கல்லின் தூதன். யாவற்றிக்கும் மேலாக நமதாண்டவர் உங்களுக்கு அனுப்பும் துன்பங்களை அமைந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள் “