தேவமாதாவுக்கு மனித அறிவைப் பயன்படுத்த நிறைய சந்தர்ப்பங்களை கடவுள் கொடுத்தார்.. அதைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்..
“ அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்”
லூக்காஸ் 1 : 32
மேலே உள்ள வார்த்தையின் பொருள் என்ன? தாவீதின் அரியணையை கடவுள் அவருக்கு கொடுப்பார் என்றால் என்ன அர்த்தம் ? ஒரு அரசரின் அரியணை இயேசு சுவாமிக்கு கொடுக்கப்படுகிறது என்றால் இயேசு சுவாமியும் அரசர்தானே !
மாதா என்ன நினைத்திருப்பார் நம் வயிற்றில் இருப்பது ஒரு அரசர். அதுவும் மூவுலகுக்கும் அரசர். ஒரு அரசர் எங்கே எப்படிப் பிறக்க வேண்டும்?
ஆனால் நடந்தது என்ன ?
“ ஏனெனில் சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை”
லூக்காஸ் 2 : 7
மாட்டுத்தொழுவம்.. ஒரு தீவனத்தொட்டி.. தாவீதின் அரியணையையும், ஒரு தீவனத்தொட்டியையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
மேலும் ஆண்டவர் பிறப்பதற்கு முன், புனித சூசையப்பர் இடம் தேடி எங்கெல்லாம் அலைந்திருப்பார், எத்தனைச் சத்திரத்திரத்தின் கதவுகளைத் தட்டியிருப்பார், எத்தனை வீடுகளின் கதவுகளைத் தட்டியிருப்பார்.. ஏனென்றால் அவருக்கும் தெரியுமே ? மாதாவின் வயிற்றில் இருப்பது கடவுள் என்று.. எங்குமே இடம் கிடைக்காத சூழலில் அவரும் ஒரு வார்த்தைகூட முனுமுனுக்காமல் கிடைத்த மாட்டுத்தொழுவத்தையும் சுத்தம் செய்து ஆண்டவர் இயேசு பிறக்க அந்த தொழுவத்தில் ஒரு இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார்..
அவர்கள் எந்த சந்தேகமோ.. முனுமுப்போ செய்யவில்லை..
அந்த அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.. ஒப்புக்கொடுத்தார்கள்.. ஆண்டவருடைய திருவுளத்திற்கு முழுவதும் ஒத்துழைத்தார்கள்..
அப்போது மாதா தன்னுடைய மனித அறிவைப் பயன்படுத்தியிருந்தால் என்ன சிந்தித்திருக்க வேண்டும்..
“ அன்றைக்கு கபரியேல் தூதர் என்னுடைய வயிற்றில் பிறக்கப்போகும் குழைந்தையை குறித்து எவ்வளவோ பெருமையாக சொன்னார்.. அப்படி இருப்பார் இப்படி இருப்பார் என்று சொன்னார்.. ஆனால் நடப்பது எல்லாம் எதிர்மறையாக இருக்கிறதே”
இதே இடத்தில் நம் தாய்மார்கள் இருந்திருந்தால் இன்னும் அதிகமாக மனித அறிவைப்பயன்படுத்தியிருப்பார்கள்..
“ என்னடா இது? நாம என்னமோ அரசர் பிறப்பார்னு பார்த்தா? இங்கே ஒரு ஆண்டி பிறந்திருக்கிறார். கபரியேல் தூதர்… கடவுள்ட்ட இருந்து புளுகு மூட்டையா கொண்டு வந்தார். அப்படி இருக்காதே… ஒரு வேளை கபரியேல் தூதர் உருவத்தில் வந்தது பிசாசாக இருக்குமோ ? “ என்று யோசித்திருப்பார்கள்..
அவர்கள் யோசித்ததில் ஒரு உண்மை இருக்கிறது.. பரலோகத்தையும், பூலோகத்தையும், மூவுலகத்தையும் ஆட்சி செய்யும் ஆண்டவர்தான் ஒரு ஆண்டியாக நமக்காக ஒரு ஏழையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்..
மாதாவின் தேவ ஞான தியானத்திற்கு வருவோம்..
மாதா அன்று மனித அறிவைப் பயன்படுத்தவில்லை…. ஞானத்தையே பயன்படுத்தினார்.. மாதா என்ன சிந்தித்திருப்பார்..
“ இதோ ! ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் “ என்றார்.
லூக்காஸ் 1 : 38
“ நாமதான் கடவுளுக்கு அடிமை “ என்று வாக்குறுதி கொடுத்துவிட்டோமே.. அப்புறம் நமக்கு என்ன நடந்தால் என்ன? கடவுளுக்கு என்ன சித்தமோ.. அதுவே நடக்கட்டும்.. நாம அதற்கு ஒத்துழைத்தால் போதும் “
இதுதான் ஞான சிந்தனை.. நம் தாயின் சிந்தனை..
“ இப்போது தெறிகிறதா? எங்கம்மா யார் என்று “ என்கிறார் நம் இயேசு ஆண்டவர்..
அவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால்..
“ யார் என் தாய்? “ என்று உங்களுக்கு புரிகிறதா?
ஆண்டவரே! மரமண்டைகளுக்கு புரிய ரொம்ப கஷ்டம்தான்.. ஆண்டவரே !
மாதாவை நினைத்துப்பார்த்தால் நமக்கு அவ்வளவு சந்தோசம்.. பெருமை.. ஓரு நிம்மதி..
எப்படிம்மா உங்களால் முடிஞ்சது?
மாதாவுக்கு வந்த அடுத்த சோதனை என்ன?
கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..
பரிசுத்த ஆவியானார் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !