அறிஞரே கடவுளைக் கண்டடைந்த மற்றொரு வகுப்பினர். இவர்கள் அரசர்கள் அல்ல, அரசர்களுக்கு அறிவுறுத்தும் ஆசிரியர்கள். அறிவில் ஊன்றிய வெறும் விற்பன்னர் மட்டு மல்ல, ஆனால் வான்வெளியையும் விண்மீன்களையும் துருவி ஆராயும் ஆராச்சியாளர்கள்; விஞ்ஞானத்திலும் மெய்ஞ் ஞானத்திலும் முதலிடம் வகுத்தவர்கள்.
போரிடு முன்னர் அரசரும், உழுதிடு முன்னர் உழவரும் இவர்களைக் கலந்து பேசி தொழில் தொடங்குவது வழக்கம். ஓரிரவு ஒரு புதிய விண்மீன் வானுலகில் தோன்றிற்று. இம் முப்பேரறிஞர் மட்டுமன்றி ஆயிரமாயிரம் பேர் இந்நட்சத்திரத்தின் பேரொளியைக் கண்டனர். அந்த ஆயிரம் பேரும் இந்த முப்பேரறிஞரின் கூரறிவை ஒத்த அறிஞர் அல்லர். அவர்களின் தற்பெருமைக்கு அவர்களே நிகர்.
அவர்கள் வெறும் விண்மீன் ஒன்றையே கண்டனர். ஆனால் கிறீஸ்து சகாப்தத்தின் முதல் விஞ்ஞானிகளாகிய இவர்களோ விண்மீனைக் கண்டு அதில் கடவுளையும் கண்டனர். தற்பெருமையாளனுக்கு இவ் விண்மீன் ஒரு வெறும் விண்மீனே. ஆனால் அறிவாளனுக்கோ அது கடவுளின் ஒரு கைவேலைப்பாடு - இயற்கைக்கு அப்பால் உள்ள ஒன்றினை வெளிப்படுத்தும் உண்மை விளம்பி. எனவே இவர்கள் விண்மீன் காட்டிய ஒளி வழியைப் பின்பற்றினர்.
அவ்விண்மீன் இவர்களை மலைகளின் உச்சிகளுக்கு அழைத்துச் செல்ல வில்லை; சூரியனுக்கும் விண்மீன் ஒளிவிளக்குகளுக்கும் அப்பால் வானுலகில் மறைந்து கிடக்கும் போர்க்களங்களுக்கும் அழைத்துச் செல்லவில்லை. ஆனால் உலகின் பாலைநிலங்களின் வழியே பொன்னிற விண்மீனினுடைய பாட்டையின் முடிவுக்கு அழைத்துச் சென்றது. அங்கே உண்மையை அறியும் பயணத்தில் முனைந்து நின்ற இவ்வறிஞர் பேருண்மையாகிய கடவுளைக் கண்டனர்.
இந்த அறிவாற்றலும் கல்வி பயனும் மிகுந்த மக்கள், வைக்கோல் படுக்கையில் கேள்வி கேட்கவோ
பதிலுரைக்கவோ இயலாது கிடந்த ஒரு குழந்தை முன்னர்
தங்கள் குருகுல ஆடைகளுடன் முழந்தாளிட்டனர். தங்களையும், தாங்கள் சுமந்துவந்த பரிசில்களையும் முழு உலகமும்
கீழ்ப்படிகின்றது என்பதற்கு அடையாளமாக வழங்கினார்.
அவர்கள் வழங்கிய சன்மானங்கள் மூன்று. பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம். பொன் வழங்கியதற்குக் காரணம் அவர் அரசராக செங்கோலோச்சுவார் என்பது; சாம்பிராணி அளித்ததற்குக் காரணம் அவர் குருவாக பணியாற்றுவார் என்பது; வெள்ளைப் போளம் தந்ததற்குக் காரணம் அவர் மனிதனைப் போன்று உயிர் நீப்பார் என்பது. இறுதியில் இப் பேரறிஞரும் பேரறிவைக் கண்டுவிட்டனர்
தொடரும்...