“ நரிகளுக்கு வலைகள் உண்டு. வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளுண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை “
மத்தேயு 8 : 20, லூக்காஸ் 9 : 58
இயேசு நாதர் சுவாமி ஓய்வெடுத்ததாக பைபிளில் எங்கேயும் பார்க்க முடியாது ஒரு இடத்தைத் தவிர அந்த இடத்திற்கு போகும் முன்..
மேலே உள்ள அவர் உயிருள்ள வார்த்தைகளைப் பாருங்கள்..
நரிகளுக்கு வலைகள் உண்டு; வானத்துப் பறவைகளுக்கு கூடுகள் உண்டு; ஆனால் மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை..
இதை இரண்டு கோணத்தில் பார்க்கலாம்..
ஆண்டவர் கொடுத்த ஒப்புமையும் இரண்டும் சிறியதே..
நரியின் வலைகளும், வானத்துப்பறவைகளும் கூடும் சிறிய அளவே..
அவர் சிங்கத்தின் குகையோ, யானை தங்கும் இடத்தையோ அல்லது அளவில் பெரிதான எந்த உயிரினங்களின் கூட்டையோ நம் ஆண்டவர் குறிப்பிடவில்லை..
இவைகளின் அளவை வைத்தே திருக்குடும்பம் வாழ்ந்த வீட்டின் அளவைக் கணக்கிட முடியும்..
இப்போது கூட இருக்கிறது என்று நினைக்கிறேன்.. அது ஒரு மிகச்சிறிய வீடு..
தேவமாதா, புனித சூசையப்பர் நம் ஆண்டவர் இயேசு மூவரும் அங்கே தங்க வேண்டும்..
அங்கே மாதா புனித சூசையப்பருக்கும், நம் சேசுவுக்கும் சமையல் செய்ய வேண்டும்.. நம் சூசையப்பர் தச்சுத் தொழில் செய்ய வேண்டும்..
அதிலே அவர்கள் தூங்கவும் வேண்டும்.. பெரும்பாலும் புனித சூசையப்பர் வெளியேதான் தூங்கியிருக்க வேண்டும்..
மிகக் குறைவான நேரமே தூங்கும் மாதா ( ஒன்றரை மணி நேரம்தான் மாதா தூங்குவார்கள் என்கிறது கடவுள் மனிதன் காவியம்). மாதா தூங்கி புனித சூசையப்பர் பார்த்ததே இல்லை என்றும் சொல்கிறது கடவுள் மனிதன் காவியம்..
அப்படியானால் முதல் துறவற சபையான திருக்குடும்பம் எந்த அளவுக்கு ஒறுத்தல் மற்றும் தவத்தை செய்திருக்கிறது என்று பாருங்கள்..
இப்போது சேசு சுவாமி பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார்.. இரவு எங்கே தங்கினார் என்று கடந்த இரண்டு பதிவுகளில் பார்த்தோம்..
எப்போதும் மக்கள் அவரைத் தேடியவண்ணம் இருந்தது.. நோயாளிகள் எத்தனையோ ஊர்களிலிருந்து வந்தவண்ணம் இருந்தார்கள்.. அவர்கள் ஓய்வு எடுக்கக் கூட தனிமையான இடத்தைத் தேட வேண்டியிருந்தது..
ஆனால் அதையும் கண்டுபிடித்து அங்கே வந்துவிடுகிறார்கள் என்று பார்க்கிறோம்.. எப்போதும் ஜனத்திரள் அவரை சூழ்ந்தே இருந்தது.
“ ஆதலால் அவர்கள் சாப்பிடவும் முடியவில்லை “
மாற்கு 3 : 20
சாப்பிடக் கூட முடியாமல் இறைப்பணி செய்வதும் தவமே..
ஒரு சில நேரத்தில் ஆண்டவர் இயேசு சீடர்களுக்கு ஓய்வு தருகிறார். அவர் ஓய்வெடுக்கவில்லை..
“ அப்போஸ்தலர் திரும்பி வந்து தாங்கள் செய்ததெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர். அவர் அவர்களை அழைத்துக் கொண்டு தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் ஊருக்குச் சென்றார் “
லூக்காஸ் 9 : 10
அங்கே கூட சீடர்களுக்கு மட்டும்தான் ஓய்வு.. ஆண்டவருக்கு அல்ல..
“ அதை அறிந்த மக்கள் கூட்டமாக அவரைப் பின் தொடர்ந்தனர். அவர் அவர்களை வரவேற்றுக் கடவுளின் அரசைப்பற்றி அவர்களுக்குப் போதித்து, குணமாக வேண்டியவர்களைக் குணமாக்கினார்.”
லூக்காஸ் 9 : 11
ஆக இயேசுவுக்கு ஓய்வே இல்லை..
இப்போது இதே வசனத்தை இரண்டாவது கோணத்தில் பாருங்கள்..
“ நரிகளுக்கு வலைகள் உண்டு. வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளுண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை “
பொதுப்பணிக்கு வந்தபின் தலைசாய்க்கவும் இடமுமில்லை… நேரமுமில்லை..
பிறந்தது மாட்டுத்தொழுவம்..
வளர்ந்தது சிறிய வீடு..
பொதுப்பணியிலோ தலை சாய்க்கவும் இடமில்லை…
ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆண்டவர் நிம்மதியாக தூங்குவார்..
இப்போது அந்தப்பகுதிக்கு போகலாம்..
மத்தேயு, மாற்கு மற்றும் லூக்காஸ் இந்த மூன்று பேரும் அந்த சம்பவத்தைச் சொல்லுகிறார்கள்.. இதில் அதிக விளக்கமாக சொல்லுவது மாற்குதான்..
எல்லோருக்கும் தெரிந்த சம்பவம்தான்..
படகின் பின் புறத்தில் நிம்மதியாக ஆண்டவர் தூங்குவார்..
எப்படித் தூங்குகிறார்…
“ அவர் பின்னயத்தில் தலையனை மீது தூங்கிக்கொண்டிருந்தார் “
மாற்கு 4 : 38
அதுவும் எத்தகைய சூழ்நிலையில் தூங்குகிறார்..
புயல்காற்று வீசுகிறது.. அலைகள் படகில் மோதுகின்றன.. படகுக்குள் நீர் வருகிறது.. படகு அங்கும் இங்கும் அசைந்து அல்லோல கல்லோலப்படுகிறது..
இவை எதுவும் ஆண்டவரின் தூக்கத்தை பாதிக்கவில்லையென்றால்..
அவர் எத்தகைய அலுப்பில் இருந்திருந்தால்.. அவர் அப்படி தூங்கியிருப்பார்..
ஆண்டவருடைய தூக்கம்..
அவர் ஆற்றிய நற்செய்திப்பணியை பறைசாற்றுகிறது..
நற்செய்திக்காக அவர் எத்தனைக் கிலோமீட்டர் நடந்திருப்பார் அதைக் காட்டுகிறது.
அவர் மக்கள் மேல் அன்புகொண்டு ஓய்வே எடுக்காமல் அவர்களுக்குப் போதித்ததையும் அவர்களை குணமாக்கியதையும் காட்டுகிறது..
இரவெல்லாம் கண் விழித்து அவர் நேச பிதாவிடம் நமக்காக ஜெபித்ததைக் காட்டுகிறது..
இந்த அவர் உறக்கம் அவர் செய்த தவத்தைப் பறைசாற்றுகிறது..
அதுதான் இயேசு ஆண்டவர்.. நாம் ஆண்டவரைப் புரிந்துகொண்டால் நாமும் அவருக்காக கொடுக்க ஆரம்பித்துவிடுவோம்..
எப்போதும் நாம் அவரிடமிருந்து வாங்குவதையே நோக்காமல் நம் ஆண்டவருக்கு நாம் என்ன கொடுக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்..
ஆண்டவரின் உறக்கம் இன்னொன்றையும் பறைசாற்றுகிறது.. அது என்ன?
குறிப்பு : முன்பொரு பகுதியில் ஆண்டவர் தலையனை பயன்படுத்தியதே இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன்..
இப்போது அவர் பயன்படுத்தியது அவர் தலையனை இல்லை… அதுவும் இல்லாமல் அவரிடம் இருந்த களைப்புதான் இப்படி அவரை சிறிது நேரம் தூங்க வைத்திருக்கிறது.. அதுவும் அவர் உறங்கியது பயண நேரத்தில்தான். அதைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்..
எப்படிப்பார்த்தாலும் ஆண்டவரின் தவம்.. ஒப்பற்றது; நிகரில்லாதது..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !