“ அந்நாட்களில் அவர் செபிக்கும்படி மலைக்குச் சென்று, கடவுளை வேண்டுவதில் இரவெல்லாம் கழித்தார் “
லூக்காஸ் 6 : 12
சேசு செய்த முழு இரவு ஜெபம்..
அதற்கு முன்
சென்ற பகுதியில் அத்தகைய சூழ்நிலையில் இயேசு சுவாமி கண் விழிக்காமல் நிம்மதியாக தூங்கியதற்கு மூன்றாவது காரணம் என்ன என்று பார்த்தோம்..
அது அவர் தன் பிதாவின் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் விசுவாசமுமே..
அதாவது தேவ பராமரிப்பை முழுமையாக நம்பினார்.. அதற்கு தன்னை விட்டுக்கொடுத்தார்..
புயல் அடித்தால் என்ன? பேரலைகள் மோதினால் என்ன ? படகு அங்கும் இங்கும் ஆடினால் என்ன?
அதனால்தான் அவ்வளவு இரச்சல்களுக்கு மத்தியிலும் நிம்மதியாக உறங்கினார்..
ஆண்டவர் கோபப்பட்ட இடத்தில் இதுவும் ஒன்று..
“குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம்?“
மத்தேயு 8 : 26
நமக்கும்தான் எவ்வளவு பயம்?
சிறிய துன்பம் வந்தாலும் கலங்குகிறோம்; பெரிய துன்பங்கள் வந்தாலும் கலங்குகிறோம்.. அதேபோல் எதற்கெடுத்தாலும் பயம்..
“நமக்கு அது செய்து விடுமோ? இது செய்து விடுமோ ? அது வந்து விடுமோ? அது நடந்து விடுமோ?” என்று
எப்போதாவது தேவபராமரிப்பைப் பற்றி நாம் யோசித்துப்பார்க்கிறோமா?
தேவ பராமரிப்பிற்கு நம்மையும், நம் குடும்பத்தையும் ஒப்புக்கொடுக்கிறோமா?
நம்மைப் படைத்தவர் நம்மைப் பராமரிக்க மாட்டாரா என்ன?
வானத்துப் பறவைகளுக்கும், வயல்வழி மலருக்கும் உடுத்துபவர் தன் சாயலாகவும் பாவனையாகவும் படைக்கப்பட்ட நம்மை உடுத்தமாட்டாரா என்ன?
ஏன் நாம் ஒரு சிறிய சோதனைக்குக் கூட தாக்குப்பிடிப்பதில்லை..
இது ஒரு புறம் இருக்கட்டும்..
இப்போது நம் சேசு சுவாமி இதே கேள்வியை நம்மைப் பார்த்து இன்னொரு விசயத்திற்காகவும் கேட்பார்?
என்ன விசயம்? எல்லாம் உங்களுக்குத் தெரிந்த விசயம்தாம்..
திவ்ய நற்கருணை ஆண்டவரை ஏதோ நோயைப் பரப்புபவரைப்போல அவரைப் பார்த்து, பயந்து, அரைகுறை விசுவாசத்தோடு அர்ச்சிக்கப்படாத, தகுதியில்லாத உங்கள் கரங்களில் வாங்குகிறீர்களே உங்களைப்பார்த்தும் ஆண்டவர் கேட்பார்..
“குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம்?“
அதற்கு என்ன பதில் சொல்லுவீர்கள்..
முகக்கவசமும், சானிடைசராலும் நம்மைக் காப்பாற்ற முடியும் ஆனால் நம்மைப் படைத்தவரால் நம்மைக் காப்பாற்ற முடியாது.. அப்படித்தானே?
சரி இப்போது சேசு சுவாமி செய்த முழுஇரவு ஜெபத்திற்கு வருவோம்..
எத்தனையோ முறை இரவெல்லாம் அவர் இரவெல்லாம் கண்விழித்து ஜெபித்திருப்பார் ஆனால் இயேசு சுவாமி செய்த இரண்டு முழு இரவு ஜெபங்கள் வேதாகமத்தில் இருக்கிறது..
ஒன்று மேலே பார்த்த பகுதி.. இரண்டாவது கெத்சமெனித் தோட்டம்..
இரண்டுமே கடவுளின் திட்டம் நிறைவேறத்தான் ஜெபிக்கிறார்..
மேலே உள்ள பகுதி மீட்பின் திட்டம் நிறைவேற நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.. அந்த நற்செய்தியை ஒவ்வொரு ஊர்களுக்கும், இடங்களுக்கும் சென்று அறிவிக்க.. அவரோடு உழைக்க அப்போஸ்தலர்கள் தேவை.. அதனால் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதற்காக ஜெபிக்கிறார்..
அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜெபிக்கிறார்..
ஆக ஆண்டவர் சேசு ஒவ்வொரு முறையும் ஜெபிக்கத் தவறியது இல்லை..
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கத் தவறியது இல்லை..
கடவுளும் மனிதருமான.. அமல உற்பவரான.. பாவமே அறியாதவரான கடவுளுக்கே ஜெபமும், தவமும் தேவைப்பட்டது என்றால் அது நமக்கு எந்த அளவுக்கு தேவைப்படும்..
மூன்றாவது ஒன்றான பரிகாரத்தை நமது பாவங்களுக்காக செய்தார்..
அப்படியானால் பாவிகளான நமக்கு ஜெபம், தவம், பரிகாரம் தேவைப்படுமா? படாதா?
நமக்கும், நம் குடும்பத்திற்கும் ஜெபம் தேவைப்படுமா? படாதா?
அப்படியானால் நாம் குடும்பத்தோடு அமர்ந்து ஜெபிக்க வேண்டும்தானே?
குறிப்பாக குடும்ப ஜெபமாலை சொல்ல வேண்டும்தானே..
டி.வி. சீரியல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் குடும்ப ஜெபமாலைக்குக் கொடுப்பதில்லை..
எதையும் தியாகம் செய்ய மனது தயாராக இல்லை.. அதனால் குடும்ப ஜெபமாலையை தியாகம் செய்து விடுகிறோம்..
கடவுளுடைய ஆசீர்வாதம் நம் குடும்பத்திற்குள் நுழைய விடாமல் நாமே தடுத்துவிட்டு..
அப்படி ஆயிப்போச்சே? இப்படி ஆயிப்போச்சே? அது வந்துட்டே ? இது வந்துட்டே? அவன்(ள்) என் பேச்சைக் கேட்க மாட்டேங்கிறானே? எங்க குடும்பத்திலே நிம்மதியே இல்லையே? எதற்கெடுத்தாலும் பயமா வேற இருக்கே? என்றால் இதற்கு யார் காரணம்?
சிந்திப்போம்..
ஜெபம் செய்த இயேசு… தவம் செய்த இயேசு… பரிகாரம் செய்த இயேசு..
எல்லாம் அவருக்கு மட்டும்தானா? நமக்கு கிடையாதா?
அவர் நமக்காக எல்லாம் செய்வார்? ஆனால் அவருக்காக நாம் ஒன்றுமே செய்ய மாட்டோம்..
இது என்ன நியாயம்..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !