இயேசு சுவாமிக்காக உடலை உருக்கியவர்..
புனித சந்தியாகப்பர் செய்த புதுமைகள், அவரின் சிறப்புக்கள் மற்றும் அவருக்கு ஆண்டவர் இயேசு கொடுத்த வல்லமைகள் எல்லாம் பார்த்தோம்.. இவ்வளவு சிறப்புகள் அவர் பெற காரணம் என்ன?
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பிக்கு பின் அவர் செய்த நற்செய்திப்பணியே அதாவது உடலாலும், உள்ளத்தாலும், ஆன்மாவாலும், செயலாலும்..
செயல்.. “ செயல் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம் “ – என்று சொல்கிறார் புனித சின்ன யாகப்பர்..
அப்படி என்னதான் செய்தார்.. பரித்தியாகங்கள்… பரிகாரங்கள்..
கடலோடு போராடி கடலில் மீன் பிடிக்கும் ஒரு மீனவனின் உடல்வாகு எப்படி இருக்கும் என்று எல்லாருக்கும் தெரியும்.. அதுவும் ஒரு இளைஞனின் உடல்வாகு எப்படி இருக்கும் ?
இயேசு சுவாமி அழைக்கும்போது அப்படித்தான் இருந்தார்.. ஆனால் ஆண்டவர் இயேசுவின் உயிர்பிற்கு பின் “ ஆண்டவர் இயேசுவின் கிண்ணத்தில் குடிப்பேன் “ என்ற வாக்குறுதியின் பொருள் ஆண்டவரின் மிகக்கொடிய சிலுவை மரணத்திற்குப் பின்தான் அவருக்குப் புரிந்தது..
அதை செயல்படுத்தும் செயல் வீரராக மாறிவிட்டார்.. ஜெருசலேம், யூதேயா, சமாரியா, இத்தாலி தேசத்தில் நற்செய்தி அறிவித்தபின் அங்கிருந்து கிட்டத்தட்ட 5400 கி. மீ நடை பயணம் செய்து உலகின் கடை எல்லை என்று அழைக்கப்பட்ட ஸ்பெயின் தேசம் சென்றார் என்று பார்த்தோம்..
இங்கே நம் யாகப்பரின் நற்செய்திப்பணியில் தன் உடலை இயேசு சுவாமியின் உடலாக மாற்றியதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.. பகுதி ஒன்றில் தூய ஆவியைப் பெற்ற பின் யாகப்பர் எவ்வளவு சுறுசுறுப்பாகவும் ஆர்வமாகவும் கடவுளுக்காக உழைத்தார் என்று பார்த்தோம்..
அப்படி உழைத்த அவர் செய்த பரித்தியாகங்கள் அளவிடமுடியாதது..
பசி, பட்டினி, தவம், ஒறுத்தல்கள், நிறைய நேரங்களில் தண்ணீர் மட்டுமே உணவு, வெயில், மழை, காடுகளில் உறக்கம், கடுமையான பயணம் இயேசு சுவாமிக்காக கிட்டதட்ட ஒரு பரதேசிகோலம் பூண்டு சென்று நற்செய்திப் பணி ஆற்றினார். அதன் மத்தியில் ஜெபம்.. ஜெபம்.. ஜெபம்..
நீங்கள் St.James the greater images என்று டைப் செய்தால் அவருடைய நிறைய கம்பீரமான தோற்றமுள்ள படங்களைப் பார்க்கலாம்.. அதன் மத்தியில் அவர் இயேசுவுக்காக உருகி, உடல் மெலிந்து, நலிந்து, குருகி அமர்ந்திருக்கும் படங்களையும் பார்க்க முடியும்.. அப்படி இருந்தவரா இப்படி மாறிவிட்டார்.. என்று வியப்பு மேலிடும்..
இயேசு சுவாமியின் கிண்ணத்தில் பருகுவது என்றால் அது சாதாரண விசயமா? அதற்கு எத்தனை அசாத்திய செயல்கள் செய்ய வேண்டும்..
ஆண்டவருக்காக மரிப்பதற்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை விட இத்தகையை ஜெப, தவ, பரிகார வாழ்க்கையை வாழ்ந்து கொண்டும் ஆண்டவர் இயேசுவுக்காக எதையும், எப்போதும் செய்ய தயாராக இருந்து கொண்டும் அவருக்காக மரிக்க மகிழ்ச்சியோடும், ஆர்வமோடும் இருந்தார் என்று சொல்வதுதான் மிகச் சரியாக இருக்கும்..
அவருடைய நேரம் வந்த போது.. உறுதியோடும், திடத்தோடும், ஆர்வத்தோடும்,அதே மகிழ்ச்சியோடும், வீரத்தோடும் பருகிய போது ஒரு நிறைவான உள்ளத்தோடு, குருதி சிந்தி ஆண்டவர் இயேசுவுக்காக அப்போஸ்தலர்களில் முதல் வேத சாட்சியாக மரித்தார்..
அதுதான் அவருடைய இத்தனை சிறப்பிற்கும், மகிமைக்கும் காரணம்..
ஜெபம் : செயல் வீரராக, உயிருள்ள விசுவாசம் உள்ளவராக, தன்னையே தன் தலைவருக்காக பலிப்பொருளாக, பலி ஆன்மாவாக மாற்றி மகிழ்ச்சியோடு நற்செய்திப் பணி உடலாலும், உள்ளதாலும், ஆன்மாவாலும் செய்த செயல் வீரரே.. படை வீரரே ! அத்தகைய மனதை எங்களுக்கும் தாரும் அய்யா..
அதை நாங்களும் பெற.. ஆண்டவர் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்- ஆமென்.
கடல் தொழில் செய்பவர்களின் திடகாத்திரமான உடல் அமைப்பு எல்லாரும் அறிந்ததே.. ஆனால் அப்படி இருந்த யாகப்பர் உடல் மெலிந்து குறுகலான உடலோடு நிறைய படங்களில் காணப்படுகிறார். ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும், திடமாகவும் இருந்தாலும் ஆண்டவர் இயேசுவின் சிலுவைகளை தன்னுடலில் சுமந்திருக்கிறார். அவர் சுரூபங்களில் அவர் ஒரு கோல் வைத்திருப்பதையும், அதில் ஒரு தண்ணீர்க் குடுவை மாட்டப்பட்டிருப்பதையும் பார்த்திருக்கிறோம். புனித சந்தியாகப்பர் பல வேளைகளில் உணவுக்குப்பதிலாக நீர் மட்டுமே பருகியிருக்கிறார். அவர் செய்த தரைப்பயணம் அதிகம்.. அவரை நிறைய படங்களில் அவர் ஒரு யாத்ரீகர் போல காணப்படுகிறார்.. நற்செய்தி பணி நேரம் போக எந்த நேரமும் ஜெபமும், தவமும், பரிகாரமும்தான் அன்னையின் அன்பைப் பெற்ற புனிதராயிற்றே.. அன்னை சொல்லிக்கொடுப்பாமல் இருந்திருப்பாரா என்ன? மாதா சென்ற நூற்றாண்டு கூட வலியுறுத்திய ஜெபம், தவம், பரிகாரத்தை தன் வாழ்நாளில் முற்றும் கடைப்பிடித்திருக்கிறார் நம் சந்தியாகப்பர்...
"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.”
மத்தேயு 16 : 24
“ தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.”
லூக்காஸ் 14 : 27
சொன்னவர் யார் தன் தலைவராயிற்றே.. கடைப்பிடிக்காமல் இருப்பாரா என்ன ?
ஜெபம் : எங்கள் பாசமிகு பாதுகாவலரே.. நீர் நம் தலைவர் சேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கியது போலவும், நம் தாயை தேவ மாதாவை நேசித்தது போல நாங்களும் நம் அன்புத்தாயை நேசிக்கவும், கடவுளிடமிருந்து கட்டளைப் பெற்று நம் தாய் நமக்கு அறிவித்த “ ஜெபம், தவம், பரிகாரத்தை “ வாழ்க்கையில் கடைபிடித்து உம்மைப்போல எங்கள் உடலை சேசுவின் திருஉடலாக மாற்ற வரம் தாரும்- ஆமென்.
கடவுளுக்குச் சித்தமானால் மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !