ஆகஸ்ட் 13 மாதாவின் நான்காம் காட்சி நடைபெறவில்லை..ஏன்? – தொடர்ச்சி..
ஆகஸ்ட் மாதம் 12-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை. அல்யுஸ்திரலிலும், அந்த வட்டாரத்திலுள்ள எல்லா ஊர்களிலும் குக்கிராமங்களிலும் ஒரு விதமான எதிர்ப்பார்ப்பு உணர்வு தோன்றியிருந்தது. மறுநாள் 13-ம் தேதி. அன்று என்ன நடக்க இருக்கிறதோ? காட்சி வருமோ? வந்து என்ன செய்தி தருமோ? ஆட்சி பீடம் இடர் செய்யுமோ என்று பல வகையான பேச்சுக்கள் நடந்தன.
காலை புலர்ந்தது. ஆகஸ்ட் 13- நாள். மார்ட்டோ தன் வீட்டுப் பக்கத்திலிருந்த தன் வயலில் சிறு வேலையொன்று செய்துவிட்டு திரும்பியதும், அங்கே ஆர்ட்டுரோ மீண்டும் வந்தார் ( சென்ற பகுதியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவ்ரம் ஆட்சி மன்ற தலைவர், கத்தோலிக்கர்தான் இந்த ஆர்ட்டுரோ. லூசியாவை மன்றத்துக்கு வர வைத்து கடுமையாக விசாரித்தும், லூசியா இரகசியத்தை சொல்லாத்தால் இறுதியாக சிறுமி லூசியாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தார்)
“ நானும் அந்த அற்புத காட்சியை பார்க்க விரும்புகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து போகலாம் அங்கே. குழந்தைகளை நானே வண்டியில் ஏற்றிச் செல்கிறேன். அங்கு வந்து நான் தோமையாரைப் போல கண்டு விசுவசிக்க வேண்டும்.. ஆமாம் குழந்தைகள் எங்கே? “ என்று நயவஞ்சகமாக பேசினார். குழந்தைகள் அவரோடு செல்ல விரும்பவில்லை..
வலுக்கட்டாயமாக குழந்தைகளையும்.. அவர்கள் தந்தையரோடு அழைத்துச்சென்றார். அவர்கள் தந்தையர் வேறு வண்டியில் வந்தார்கள்.. வண்டி நேரே பங்குத்தந்தையின் இல்லத்திற்கு சென்றது.
பங்குத்தந்தையின் மனதில் சலிப்பும், எதிர்ப்பும் நிரம்பியிருந்தது.ஏற்கனவே திருச்சபைக்கு எதிர்ப்பும், ஆட்சியாளர்களால் துன்பமும் அதிகரித்து வரும் வேளையில் இப்படி காட்சி காட்சி என்று ஒரு சிறுமி கூறித்திரிவதை அந்த குரு விரும்பவில்லை. லூசியாவைக் கண்டதும் கோபத்துடன்,
“ உனக்கு இவைகளையெல்லாம் யார் சொல்லிக்கொடுத்தார்கள். நீ சொல்லிக்கொண்டு அலைகிறாயே, இவைகளை ?”
“ கோவா தா ஈரியாவில் நான் பார்த்த அந்த அம்மா “ இதுதான் லூசியாவின் அமைதியான பதில்..
“ நீ சொல்வது போன்ற மோசமான பொய்களை பரப்புகிறவர்கள் அது உண்மையாக இல்லாவிட்டால் தண்டனை பெற்று நரகத்திற்கே செல்வார்கள். மேலும் மேலும் மக்கள் உன்னால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்” என்றார் குரு மீண்டும் ஆத்திரத்துடன்..
“பொய் சொல்கிறவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்றால் நான் அங்கு போக மாட்டேன்”. என்று நிதானத்துடன் பதில் அளித்தாள், அந்த பத்து வயது சிறுமி. மேலும் அவள் தொடர்ந்து கூறினாள்,
“ ஏனென்றால் நான் பொய் பேசவில்லை. நான் பார்த்ததையும் அந்த அம்மா என்னிடம் கூறியதையும் தான் சொன்னேன். அங்கு வரும்படி நாங்கள் யாரையும் கூப்பிடவில்லை. அவர்கள் விருப்பப்பட்டுதான் அங்கு கூட்டம் போகிறது”.
“ அந்த அம்ம உன்னிடம் இரகசியம் கூறியது உண்மைதானா? “
“ ஆம்.. சுவாமி.. “
“ அதைச்சொல்லு “
“ அதை நான் சொல்லக்கூடாது. நீங்கள் அதை அறிய விரும்பினால், நான் அந்த அம்மாவிடம் கேட்கிறேன். அவர்கள் உத்தரவு அளித்தால் சொல்கிறேன்.”
“ சரி..சரி.. இதெல்லாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்கள் “ என்று இடைமறித்த ஆட்சித்தலைவர், “ நாம் புறப்படலாம் “ என்றார்.
லூசியா வண்டியில் ஏறவும் ஆர்ட்டுரோ வண்டியில் தாவி ஏறி சாட்டையை சுழற்றினார். வண்டி வேகமாக ஓடியது. மார்ட்டோவும், அந்தோணி சாந்தோஸும் வண்டியுடன் நடந்து செல்ல முடியவில்லை.. வண்டி வேகமாக சென்று கோவா தா ஈரியாவை நோக்கிப்போகாமல் வேறொரு பாதையில் திரும்பியது.
வண்டியில் இருந்தபடியே. “ இது தப்பான பாதை “ என்று கூச்சலிட்டாள் லூசியா. குழந்தைகள் லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா மூவரையும் நகராட்சித் தலைவர் கடத்திக்கொண்டுபோய் தன் வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்தார்.
குழந்தைகள் மூவரும் கலங்கிய கண்களுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு என்ன செய்வது.. என்ன பேசுவது என்று தெறியாமல் இருந்தனர். கலக்கமும் பயமும் அவர்களிடம் அதிகரித்தன.
பிரான்சிஸ் அங்கு நிலவிய மவுனத்தினூடே, “ நம் அம்மா ஒருவேளை இங்கே தோன்றுவார்களோ..” என்றான்.ஆனால் அங்கு எந்தவித அறிகுறியும் அங்கு காணப்படவில்லை. ஜஸிந்தாவிற்கு அழுகை வந்தது..பிரான்சிஸ் கண்களும் நிரம்பத்தொடங்கின..அவன் லூசியாவிடம்,
“ நாம் கோவா த ஈரியாவுக்கு போகாததால் நம் அம்மா வருத்தப்படுவார்கள் என்ன? இனி அவர்கள் வரமாட்டார்களோ?” லூசியா.. அவர்கள் வருவார்களா?” என்று கேட்டான்..
“ ஒன்றும் தெறியவில்லையே “ என்ற லூசியா மீண்டும் சற்று திடத்துடன், “ அவர்கள் வருவார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களைப் பார்க்க எப்படி விரும்புகிறேன் ! “ என்றாள். இதைக் கேட்டதிலிருந்து பிரான்சிஸ் சற்று திடமடைந்ததாக லூசியா கூறுகிறாள். ஜஸிந்தாவால் அழுகையை அடக்க முடியவில்லை. பாவம் ஏழு வயதுதனே ! “ நம் அப்பா அம்மா இனி நம்மைக் காண மாட்டார்கள். நம்மைப் பற்றி ஒன்றும் அவர்கள் அறிய மாட்டார்கள் “ என்றாள் கண்ணீருடன்.
“ ஜஸிந்தா, அழாதே நம் அம்மா கூறியபடி நாம் பாவிகளுக்காக இவைகளை ஒப்புக்கொடுப்போம்” என்று கூறிய பிரான்சிஸ் மேலே பார்த்துக்கொண்டு, “ என் சேசுவே, இதெல்லாம் உமது அன்பிற்காகவும், பாவிகள் மனம் திரும்பவும் ஏற்கிறேன் “ என்றான். உடனே ஜஸிந்தா தன் கண்ணீரை வழித்துக்கொண்டே.., “பாப்பரசருக்காகவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிரான பாவங்களுக்கு பரிகாரமாகவும் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறினாள்..
தொடரும்....பிஞ்சுக்குழந்தைகள் கடவுளுக்காக வேத சாட்சியாக மரிக்கவும் தயாராக இருந்தார்கள்.... அடுத்த பகுதியில்...
நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, 9894398144
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !