மாதா மேல் கடவுள் எப்போதிருந்து நம்பிக்கை வைத்தார்?
“ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்திற்கும் அவள் வித்திற்கும் பகையை ஏற்படுத்துவோம். அவள் உன் தலையை நசுக்குவாள்“
ஆதியாகமம் 3 : 15
இந்த முதல் ஏவாளை என் சாயலாகவும், பாவனையாகவும் படைத்தேன். அவளை ‘ முதல் அமல உற்பவமாக ‘ படைத்தேன். அவளுக்கு எண்ணற்ற ஆசீர்வாதங்களை கொடுத்திருந்தேன். ஏன் அளவற்ற அதிகாரங்களையும் கொடுத்திருந்தேன். அவளை முழுவதும் மகிழ்ச்சியால் நிரப்பியிருந்தேன். இன்று இந்த உலகம் மகிழ்ச்சி, சந்தோசம் என்று நினைக்கிறதை விட 1000 மடங்கு அதிகமான அளவற்ற சந்தோசமும், நிறைவும் தரும் ஆனால் பரிசுத்த நிரந்தரமான மகிழ்ச்சியையும், செல்வங்களையும் கொடுத்திருந்தேன்.
எல்லாம் அவளுக்கு நான் பார்த்து பார்த்து செய்திருந்தும் அவள் என்னை நம்பாமல் பிசாசை நம்பி என்னோடு அவளுக்கு இருந்த பிரமாணிக்கத்தை உதறி தள்ளி விட்டு எனக்கு மகளாய் இருக்க வேண்டியவள் என் எதிரி பிசாசுக்கு அடிமையாகிவிட்டாள். எனது சாயலாக படைக்கப்பட்டிருந்த ஆன்மாவை பிசாசுக்கு விற்றுவிட்டாள்.
ஆனால் இவளுக்கு மாற்றாக இன்னொரு ஏவாளை நான் படைப்பேன். அவளையும் இவளைப் படைத்ததைப் போல “ அமல உற்பவமாகவே “ படைப்பேன். எல்லா ஆசீர்வாதங்களையும், ஏன் என்னுடையை அருளை அவளுக்கு முழுமையாக, நிறைவாக நான் கொடுத்தும் அவளை நான் மிக எளியவளாக அவளைப் படைப்பேன். பழைய ஏவாளைப்போல் செல்வ சீமாட்டியாக இருக்க மாட்டாள். ஏழையாக இருப்பாள். அவள் அவளை முழுவதும் எனக்குத் தருவாள். எனக்கு மட்டுமே பிரமாணிக்கமாக இருப்பாள். நான் தங்கும் என்னுடைய ஆலயமாக விளங்குவாள். அவளை நான் பொன்னை நெருப்பில் புடமிடுவதைப்போல் அவளுக்கு எண்ணற்ற சோதனைகள் கொடுத்தாலும் அவள் என் மீது உள்ள நம்பிக்கையை இழக்க மாட்டாள். ஆம் அவள்தான் என் செல்வ, செல்ல மகள். அவளுக்கு நீ கால் தூசி கூட பெற மாட்டாய். அவளே இனி புதிய ஏவாள்.
உன்னை உயிர் வாழ்வோர் எல்லோருக்கும் தாயாக உன்னை நான் நியமித்திருந்தும் அந்த தகுதியை.. நீ இழந்துவிட்டாய். நீ பரிசுத்தமான பிள்ளைகளைப் பெற்றுப்போட உனக்கு நான் தகுதி கொடுத்திருந்தும் அதை நீ இழந்துவிட்டதால் இனி நீ பாவமான பிள்ளைகளைத்தான் பெற்றுப்போடுவாய். ஆனால் அவளோ பரிசுத்தமான பரலோக பிள்ளைகளையே பெற்றுப்போடுவாள்.. அதற்கு முன்,
என்னோடே எப்போதும் இருக்கும், எனக்குள் இருக்கும், என்னில் இருக்கும் இன்னொரு ஆளான சுதனை, என் ஏக மகனை, என் வார்த்தையான சர்வேசுவரனை அவளுக்கு மகனாக, அவள் உதிரத்தில் அவளுக்குள் ஜெனிப்பவனாக, அவள் கருவரையில் உருவாகி, அவள் பத்துமாதங்கள் வயிற்றில் தங்கி அவளுக்கு மகனாக பிறக்க வைப்பேன். அவளிடம் என் ஏக சுதனை மானிட மகனாக அவள் கையில் ஒப்படைப்பேன். அவள் என் மகனுக்கே தாயானாலும் அகந்தை கொள்ளமாட்டாள். தாழ்ச்சியோடு அவரைத் தாங்குவாள்..
ஏவாளே உன் அகந்தைக்கு தன்னுடைய அளவற்ற தாழ்ச்சியால் அவள் ஈடுசெய்வாள்.. இப்படி நீ செய்த முதல் பாவத்திற்கு ஈடு கட்டும் அவளின் முதல் செயல்தான் “ ஆழ்ந்த தாழ்ச்சி” என்னும் புண்ணியம்.
“ அடே பாம்பே ! பிசாசே ! உனக்கும் அவளுக்கும் நித்தியத்திற்கும் பகைதான் இதை நானே ஏற்படுத்துவேன். பழைய ஏவாள் உனக்கு நண்பனாகிப்போனாள். அவளோ உனக்கு எதிரி. நித்தியத்திற்கும் உனக்கு எதிரியாக இருப்பாள். அவளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.
உன் தலையை அவள்தான் மிதிப்பாள்.. மிதிப்பது மட்டுமல்ல உன் தலையை அடித்து உடைப்பாள்.. உன் அகங்காரத்தை தரை மட்டமாக்குவாள். அவளே என் மகள்.. என் பிரிய மகள்”
மேலே உள்ள பிதாவின் இரண்டு வரியில், முதல் தீர்க்க தரிசனத்தின் போது மேலே உள்ளவை மட்டுமல்ல இன்னும் 1000 எண்ணங்கள் நம் நேச பிதாவின் சிந்தையில் எழுந்திருக்கும். அதை இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்..
நம் நேசப் பிதாவின் 100% நம்பிக்கை நட்சத்திரமே நம் தேவமாதா..
எல்லாம் கொடுத்தும் தவறியவள் முதல் ஏவாள்.. அமல உற்பவமும், முழுமையையான அருளும், ஆண்டவரும் தவிர எதுவுமே கொடுக்காமல்.. இருந்ததும் (உலக செல்வம்) எடுக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு, அல்லோலப்பட்டும் அசைக்க முடியாத விசுவாசத்தோடு வாழ்ந்து காட்டியவர் புதிய ஏவாள்.. நம் தாய் மாமரி.
மங்கள் வார்த்தையின் போது கபரியேல் தூதர் சொல்லிய அனைத்தும் பொய்யாகுமோ? என்ற சூழ்நிலை வந்த போதெல்லாம்.. விசுவாசத்தில் அசையாமல் இருந்தார். அது என்ன?
பழைய ஏவாளின் செயலுக்கு வேறு என்ன மாதா ஈடு செய்தார்கள்? கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..
இந்த உலகத்தின் 770 கோடி மக்களாலும் மாதா நேசிக்கப்பட வேண்டியவர்கள். நேசிக்கப்பட தகுதி உள்ளவர்கள்..
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !