சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 30

சேசுவின் திரு இருதயத்திற்கு சிநேகத்திற்கு பதில் சிநேகம் காட்டுகிறதற்கும், அந்த இருதயத்திற்கு விரோதமாய்க் கட்டிக்கொள்ளப்படும் துரோகங்களுக்குப் பரிகாரம் செய்வதற்கும் தூண்டுகோலாக மனித இருதயங்களில் எழும் மனப் பற்றுதலே திரு இருதய பக்தி எனப்படும். இந்தப் பக்தியில், புலப்படும் பொருள் என்றும், புலப்படாப் பொருள் என்றும் இரு பகுதிகள் உண்டு. 

சேசுநாதர் தமது மனித சுபாவத்தில் கொண்டிருந்ததும், சகல ஆராதனைக்கும் பாத்திர மானதுமான அவரது உயிர் சுரந்தோடும் திரு இருதயமே இப்பக்தியின் புலப்படும் பொருளாகும். புலப்படா பொருள் என்னவென்றால் தேவகுமாரன் இப்பூவுலகில் இறங்கி வந்து மனிதர்களின் இரட்சணியத்திற்காகத் தம்மைச் சிலுவையில் பலியிடவும், அதிமிக அன்பின் இல்லிடமாகிய தேவநற்கருணையில் தங்கியிருக்கவும் செய்த அவரது அளவில்லாத சிநேகமாகும்

சிருஷ்டிக்கப்படாததும், சிருஷ்டிக்கப்பட்டதுமான இருவகை சிநேகம் தேவனும் மனிதனும் ஆகிய நமதாண்டவரிடத்தில் இருக்கிறது. அவர் தமது நேசப் பிதாவையும் தாம் மீட்டு இரட்சிக்க வந்த மனுக்குலத்தையும் நேசிக்கிறதற்கு சிருஷ்டிக்கப்பட்ட சிநேகமே ஒரு தகுந்த வழிமுறையாயிருக்கிறது.

இந்தச் சிருஷ்டிக்கப்பட்ட சிநேகத்தின் கருவியான சேசுவின் திரு இருதயத்தை நாம் சற்றே படித்தறிவோமாகில் அதன் ஒவ்வொரு துடிப்பிலும் இருவித அசைவுகள் கூடிச் சேர்ந்திருப்பதைக் காண்போம். இந்த அசைவுகளில் ஒன்று சேசுநாதர் தமது பிதாவுக்கு மிகத் தகுதியான ஆராதனை நன்றி யறிதல்களைச் செலுத்துவதையும், மற்றொன்று மனிதர்களின் இரட்சிப்பை அவர் விரும்பி அதற்காக ஜெபிப்பதையும் குறிக்கிறது. இவ்விரு அசைவுகளும் சேசுவின் திரு இருதயத்தில் கூடி வாழ்ந்து பிரிக்கப்படாதிருப்பது போல நமது இருதயங்களிலும் ஐக்கியமாக வாசம் செய்ய வேண்டும்

புலப்படும் பொருள்பற்றி இவ்வளவு நேரம் பேசியபின் புலப்படாப் பொருள்பற்றிச் சில வார்த்தைகளைக் கூறுவோம் திரு இருதய பக்தியில் நாம் உயர்வாய் சங்கை செய்து வருவது சேசுநாதர் மனிதர்மீது வைத்த சிநேகமே. இதை சேசுநாதர் சுவாமியே அர்ச். மர்க்கரீத் மரியம்மாளுக்குத் தெரிவித்து இருக்கிறார். 

அதெப்படியெனில், ஒரு நாள் அவர் தமது திரு இருதயத்தைத் திறந்து காட்டிய வண்ணமாக அவர்களுக்குத் தரிசனமாகி, “மனிதரை அத்தியந்த விதமாய் நேசித்து, தனக் கென்று ஒன்றும் வைத்துக்கொள்ளாமல் தன்னை முழுவதும் பரித்தியாகம் செய்த இருதயத்தைப் பார்” என்று திருவுளம் பற்றினார் ” 

தொடரும்...