ஆராய்ந்துப்பார்த்தால், திரு இருதய பக்தி நமதாண்டவரை மெய்யாகவே சிநேகிப்பதில் அடங்கியிருக்கிறதேயன்றி வேறில்லை. கிறிஸ்தவ வேதம் தொடங்கிய காலம் முதல் சகல அர்ச்சியசிஷ்டவர்களாலும் அது அநுசரிக்கப்பட்டு வந்துள்ளது இந்த இனிய பக்தியை நமதாண்டவர் தாம் அதிகமாக நேசித்த அப்போஸ்தலரான அர்ச். அருளப்பருக்கு வெளிப்படுத்தினார்.
தேவநற்கருணையை உண்டுபண்ணின பெரிய வியாழக்கிழமை அன்று சேசுநாதர் இந்த நேச சீடருக்குத் தமது மார்பில் சாய்ந்து இளைப்பாற அனுமதித்த போது, இந்த பக்தியின் இனிமையை அர்ச். அருளப்பர் கண்டுபிடித்து, அதன் இனிமையைச் சுவை பார்த்தார். இந்த தேவசிநேகத்தின் அழகையும், மாட்சிமையையும் நன்கு உணர்ந்தார் என்பதால்தான் அவருடைய வாயிலிருந்து வந்த சொற்களெல்லாம் சேசுவின் சிநேகத்தைப் பற்றியதாயிருந்தன
மேலும் இவ்விருதய பக்தி சகல அப்போஸ்தலர்கள் வேதசாட்சிகள், துதியர்கள், பரிசுத்த கன்னியர்கள், இன்னும் திருச்சபைத் துவக்கத்தில் வசித்த சகல அர்ச்சியசிஷ்டவர்கள் இருதயங்களிலும், விசேஷமாய் தேவதாயாரின் மாசில்லாத இருதயத்திலும் சுவாலை விட்டு எரிந்தது.
அவர்கள் எல்லோரும் சேசுவின் நேசத்தால் எரியப்பட்டவர்களாய், சேசுவின் சிநேகத்திலிருந்து நம்மை யார் பிரிக்கக் கூடுமென்று அர்ச். சின்னப்பரோடு கூவி உரைத்தனர்.
சேசுவின் திரு இருதய பக்தி சகல பரிசுத்தவான்களின் இருதயங்களுக்குள்ளும் புகுந்து அவர்களை நாளாவட்டத்தில் தேவபக்தர்களாக்கி வந்தபோதிலும், 17-ம் நூற்றாண்டு முதல்தான் அது ஒரு விசேஷ உருவெடுத்தது திருச்சபை அந்நேரத்தில் இந்த பக்தியின் கோட்பாடுகளைச் சோதித்துப் பார்த்து, சகல விசுவாசிகளும் இதைப் பகிரங்கச் சிறப்போடு கைக்கொள்ள வேண்டுமென்று போதித்தது
அர்ச். அருளப்பர் ஒரு நாள் அர்ச். ஜெர்த்துருத்தம்மாளுக்குத் தரிசனையான போது, இந்தப் பரிசுத்த கன்னிகை அவரைப் பார்த்து, “தேவரீர் சாய்ந்து இளைப்பாறின சேசுவின் திரு இருதயத்தை ஏன் உலகத்திற்கு வெளிப்படுத்தவில்லை என்று கேட்டதற்கு, அவர், “நான் உலகத்தில் இருந்தபோது பாலப் பருவத்திலிருந்த திருச்சபைக்கு, மனிதாவதாரமெடுத்த தேவ வார்த்தையை வெளிப்படுத்த மாத்திரம் உத்தரவு பெற்றேன்.
சேசுவின் திரு இருதயத்தை வெளிப்படுத்துவதற்கு கடைசிக் காலங்களே தக்க சமயங்கள் என்று கர்த்தர் எண்ணியிருக்கிறார். ஏனெனில் அக்காலங்களில் பிறர்சிநேகம் காய்ந்து வறண்டு போயிருக்கும் மனிதர்களின் இருதயங்களைத் தூண்டவும், உயிர்ப்பிக்கவும் திரு இருதய அறிவே தக்கது என்று பதிலுரைத்தார்
தொடரும்...