‘ஞானம் நிறை கன்னிகையே’ பாடல் பைபிளில் இருக்கிறதா?
“ ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டி, ஏழு தூண்களையும் அறுத்து நிறுத்தினது “
பழமொழி ஆகமம் 9 : 1
(நன்றி : வாழும் ஜெபமாலை இயக்கம்)
மாதாவைக் கண்டுபிடிப்பவன் யார்? என்று பார்த்தோம்.. கண்டு பிடித்தால் அவனுக்கு என்ன கிடைக்கும் என்று பார்ப்போமா?
“என்னைக் கண்டுபிடிப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரிடமிருந்து மீட்பையும் பெற்றுக்கொள்வான் “
பழமொழி ஆகமம் 8 : 35
மாதாவைக் கண்டு பிடிப்பவனுக்கு மீட்பு உறுதி.. நித்திய நிலை வாழ்வு உறுதி என்கிறது இந்த இறைவார்த்தை..
மேலும் அவர்களுக்கு என்னென்ன கிடைக்கும் என்று பட்டியலிடுகிறது கீழே உள்ள இறைவார்த்தை..
“சொத்தும், மகிமையும், மேலான செல்வமும், நீதியும் என்னோடு இருக்கின்றன. ஏனென்றால் என் கனி பொன்னையும், இரத்தினக்கல்லையும் விட அருமையானதும், என் தளிர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளியை விட அதிக நலமுள்ளதாய் இருக்கின்றன. நான் நீதியின் பாதைகளிலும், நியாய வழிகள் மத்தியிலும் உலாவுகின்றேன். இவை அனைத்தும் என்னை நேசிக்கிறவர்களை செல்வராக்கவும், அவர்களுடைய செல்வங்களை நிறைக்கும்படியாகவுமே”.
பழமொழியாகமம் 8 : 18-21
சொத்து, மகிமை, மேலான செல்வங்கள் இவ்வுலகைச் சார்ந்தது அல்ல..
இந்த இறைவார்த்தை கனியைப் பற்றியும், தளிரைப் பற்றியும் குறிக்கின்றன..
மாதாவின் திருவயிற்றின் கனி எப்படிப்பட்டது? என்று எல்லோருக்கும் தெரியும்.. பொன், இரத்தினக்கல் எதுவும் அதற்கு ஈடாகாது..
ஆனால் தளிர்களுக்கு அடுத்த மகிமை வருகிறது.. இந்த தளிர்கள்தான் சிலுவையில் அடியில் மாதா பெற்ற பிள்ளைகளான நாம்.. ஆனால் நாம் அவர்களின் முதற்கனியுடன் ஒப்பிட எந்த விதத்திலும் தகுதியற்றவர்கள்.. ஆனாலும் மாதா நம்மை வெள்ளியைவிட சிறந்த பிள்ளைகளாக்குவார்கள் என்று சொல்கிறார்கள்..
அந்த தளிர்களான நாம் அத்தகைய மகிமையைப் பெற என்ன காரணம்? அதற்கும் அதில் விடை இருக்கின்றன..
ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் நேசம்.. நாம் நம் தாயின் மீது வைத்துள்ள நேசத்திற்காக அந்த தாய் என்ன செய்கிறார்கள்..
முதலில் பார்த்த சொத்து, மகிமை, மேலான செல்வங்களான அவர்களின் புண்ணியங்களை நமக்காக செலவழித்து நம்மை வெள்ளியைப்போல ஆக்குகிறார்கள்.. அதாவது அவருடைய முதற்கனியான பொன்னிற்கு அடுத்த இடத்தை பெற்றுத் தந்து அவருக்கு சகோதர, சகோதரிகளாக நம்மை மாற்றுகிறார்கள்..
இத்தனையையும் நாம் பெற நமக்கு ஒரே ஒரு தகுதி இருந்தால் போதும். என்ன அந்த தகுதி.. மாதாவை நேசித்தாலே போதும்.. மற்றவைகள் எல்லாம் தானாகவே வந்து விடும்..
சரி.. மாதாவின் மேல் நேசம் இல்லாதவர்களை பைபிள் எப்படி அழைக்கிறது? நீசன் என்றழைக்கிறது..
“மாசில்லாக் கன்னியே! மாதாவே உன் மேல் நேசமில்லாதவர் நீசனே ஆவார்”
இந்தப்பாடலும் பைபிளில் இருக்கிறதா? இருக்கிறது..
“உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்;”
ஆதியாகமம் 3 : 15
மாதாவிடம் நேசம் வைக்காதவர்கள் மாதாவின் எதிரியான பிசாசிடம் நேசம் வைக்கிறார்கள்.. அதனால் அவர்களும் நீசனாகிறார்கள்..
இதில் பெரிய ஆபத்து இருக்கிறது..
(நன்றி வாழும் ஜெபமாலை இயக்கம்)
பைபிள் படிக்காமலே பைபிளில் உள்ள வேத சத்தியங்களை, மறையுண்மைகளை பாட்டாக பாடி வந்துள்ளோம் நாமும் நம் முன்னோர்களும்.. இது எப்பேர்பட்ட அதிசயமான உண்மை.. அதற்கு என்ன காரனம்..
நம் முன்னோர்கள் கடவுளின் தாயிடம் வைத்திருந்த நேசமும், மரியாதையுமே அதற்குக் காரணம்..
சங்கீதங்களில் ( திருப்பாடல்களில்) மாதா இருக்கிறார்களா? கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்…
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !