அன்னையின் ஆறாம் காட்சியின் தொடர்ச்சி....
எங்கும் மழையின் இரைச்சலும், அதற்கு மேல் எழும்பி வந்த ஜெபமாலைச் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தன. எல்லார் மனங்களும், கண்களும் அஸின்ஹேரா மரத்தையும், அதனருகில் இருந்த மூன்று குழந்தைகளையும் நோக்கியிருந்தன.
அஸின்ஹேரா மரத்தருகே முந்தைய இரவு முதல் ஜெபித்துக் கொண்டிருந்த ஒரு குரு லூசியாவிடம் தேவ அன்னை வரும் நேரம் எது? என்று கேட்டார்.
“ நடுப்பகல் “ என்று லூசியா பதிலளித்தாள்.
“ நடுப்பகலாகிறது. தேவதாய் பொய் கூறமாட்டார்கள், பார்ப்போம் “ என்றார்.
ஜெபமாலை ஒலி எழும்பியது.
“ அருள்.. நிறைந்த… மரியாயே..வாழ்க… கர்த்தர் உம்முடனே.. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே…” என்று சொல்லும்போதே,,,
“ எல்லோரும் குடையை மடக்குங்கள் ” என்று சத்தமாகக் கூறினாள் லூசியா. ஆயினும் இந்த பத்து வயது சிறுமியின் குரலுக்கு அக்கூட்டம் பணிந்தது. ஒவ்வொருவராக மளமளவென்று குடைகளை சுருக்கிவிட்டு மழையில் நின்று கொண்டிருந்தார்கள்.
ஒரிரு நிமிடங்கள் கடந்தன. “ என்ன மதியம் கடந்து போய்விட்டது. ஒன்றையும் காணோம். இதெல்லாம் மனப்பிரம்மை “ என்று முணுமுணுத்தார் அந்தக் குரு. ( மரிய கரேய்ரா என்ற பெண் கூறுவது சரியாக இருக்குமானால்) “ போங்கள் “ என்று சொல்லி அவர் அந்தக் குழந்தைகளை தள்ள முயன்றார். ஆனால் லூசியா திடமாக,
“ போகிறவர்கள் போகட்டும். நான் போக மாட்டேன். நம் அம்மா எங்களை இங்கு வரும்படி கூறினார்கள். மற்ற நாட்களில் அவர்களைக் கண்டோம். இப்போதும் அவர்களைக் காண்போம் “ என்றாள்.
சுற்றி நின்றவர்களில் சிலர் முறுமுறுக்கும் சத்தம் கேட்டது. தீடீரென லூசியா,
“ ஜஸிந்தா, முழங்காலிடு அம்மா வருவது தெறிகிறது. ஒளியைப் பார்க்கின்றேன் “ என்றாள்.
“ லூசியா நன்றாகப் பாரும்மா, ஏமாந்து விடாதே “ என்றாள். ஆனால் லூசியா இதையெல்லாம் கேட்கவில்லை. அவள் ஏற்கனவே அன்னையின் காட்சியில் மூழ்கியிருந்தாள். அவள் முகம் பரவசமாக எதையோ உற்றுப் பார்ப்பது தெறிந்தது. அண்ணார்ந்திருந்த அவள் முகத்தில் மழைத்துளிகள் விழுந்தன. பிரான்சிஸ், ஜெசிந்தா இருவரும் அவளுக்கு இரு பக்கத்திலும் அதே போல் பரவசமாகி அன்னையின் காட்சியைத் தரிசித்தனர்.
“ அம்மா உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? “ என்றாள்.
தேவ அன்னை அளவற்ற அன்புடன் பிள்ளைகளைப் பார்த்தார்கள். அவர்களைப் பரவசப்படுத்தும் பார்வை அது. தன் இனிய குரலில்,
“ இங்கு என் மகிமைக்கென ஒரு ஆலயம் கட்டப்படவேண்டும். நானே ஜெபமாலை மாதா. ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லி வர வேண்டும். யுத்தம் (முதல் உலகப்போர்) சீக்கிரம் முடியப் போகிறது. போர் வீரர்களும் வீடு திரும்புவார்கள் “ என்று கூறினார்கள்.
லூசியா தேவ அன்னையிடம், “ அம்மா, உங்களிடம் பல உதவிகள் கேட்க வேண்டியுள்ளது; சில நோயாளிகளுக்கு சுகம், பாவிகள் மனந்திருப்புதல், இன்னும் மற்றவைகள்….” என்றாள். மக்கள் அவளிடம் சமர்ப்பித்த விண்ணப்பங்களை இவ்வாறு கூறினாள்.
“ சிலவற்றை செய்வேன். எல்லாவற்றையுமல்ல. மனிதர்கள் தங்கள் வாழ்வைத் திருத்த வேண்டும். தங்கள் பாவங்களுக்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். “ பின் தொடர்ந்து பேசும்போது முகம் வாடி மிகத்துயரத்துடன்,
“ ஏற்கனவே மிகவும் நொந்து போயிருக்கும் ஆண்டவரை மனிதர்கள் இதற்கு மேலும் நோகச் செய்யக்கூடாது “ என்றார்கள். இதுவே நம் தேவ அன்னை ஆறாம் காட்சியில் பேசிய கடைசி வார்த்தைகள். முகம் வாடி மிகத் துயரத்துடன் கூறிய வார்த்தைகள்.
இதைச் சொன்னவுடன் மாமரி தன் கரங்களை விரிக்க அவற்றிலிருந்து பெரும் ஒளி புறப்பட்டு மேலே சூரியனை நோக்கி வீசியது. இச்சமயத்தில் மேகக்கூட்டங்கள் தெடீரென கலைந்து விலகின. தேவ அன்னை மேலே எழுந்த போது தேவ அன்னையின் பிம்பம் சூரியனில் காணப்பட்டது. உடனே லூசியா,
“ சூரியனைப் பாருங்கள் “ என்று சத்தமிட்டாள். அதைக் கேட்டு எல்லோரும் சூரியனைப் பார்த்தனர். ஆயினும் லூசியாவிற்கு தான் அவ்வாறு கூறியதாக நினைவில்லை. காட்சி வசப்பட்டிருந்ததே அதற்குக் காரணம்.
அன்னையின் கரங்கள் வீசிய பேரொளியிலிலேயே காட்சி மறைந்தது. ஆனால் குழந்தைகள் மூவரும் உச்சி வானத்தில் சூரியனின் அதிசயத்தையும் வேறு மூன்று நிலைக் காட்சிகளையும் கண்டார்கள்.
ஜெபமாலையின் சந்தோச, துக்க, மகிமை தேவ இரகசியங்களை சித்தரிப்பவனவாக அவை இருந்தன அந்நிலைக் காட்சிகள்.
முதலில் திருக்குடும்பத்தின் காட்சி : தேவதாயும், சூசையப்பரும், சேசு பாலனும் காணப்பட்டார்கள். மாதா வெண்ணுடையையும், நீல முக்காடும் அணிந்திருந்தார்கள். அவர்கள் அருகில் சூசையப்பர் சேசு பாலனை கரத்தில் ஏந்தி நின்றார். சூசையப்பர் வெண்ணுடையையும், சேசுபாலன் நல்ல சிவப்பு உடையையும் அணிந்திருந்தார்கள். அர்ச்.சூசையப்பரும், சேசு பாலனும் தங்கள் கரங்களால் சிலுவை அடையாளமிட்டு உலகை ஆசீர்வதித்தார்கள். இம்முதல் காட்சி நிலை மறைந்த சிறிது நேரத்தில்,
இரண்டாம் நிலைக்காட்சி காணப்பட்டது. அது வியாகுல அன்னையின் காட்சி. நமதாண்டவரும், வியாகுல மாதாவும் காணப்பட்டார்கள். தாயாரின் பக்கத்தில் சேசு காணப்பட்டார். அவர் சிலுவை சுமந்து சென்ற போது தன் தாயாரை சந்தித்த வேதனையான தோற்றம் தெறிந்தது. சேசுவின் முழு உருவமும் தெறியவில்லை. பாதிக்கு மேல்தான் பார்க்க முடிந்தது. சேசு தன் உயிரைக் கொடுத்து மீட்ட தம் மக்களை இரக்கத்துடன் பார்த்து, சிலுவை அடையாளங்களால் அவர்களை ஆசீர்வதித்தார். இக்காட்சியை லூசியா மட்டுமே கண்டாள். மற்ற இருவரும் காணவில்லை.
மூன்றாம் நிலைக்காட்சி, மாதாவின் மகிமையை எடுத்துக்கூறும் கார்மேல் மாதாவின் காட்சி. தேவ அன்னை வெற்றி முடி சூடிய பரலோக பூலோக அரசியான கார்மேல் மலை மாதாவாக, திருக்குழந்தையைத் தன் மடிமீது வைத்தபடி காணப்பட்டார்கள். இக்காட்சியும் லூசியாவுக்கு மட்டுமே தெறிந்தது.
குழந்தைகள் இவற்றைக் கண்ட அதே நேரத்தில் அங்கு குழுமியிருந்த 70,000 மக்கள் கூட்டம் சூரியனின் மாபெரும் அதிசயத்தைக் கண்டது.
நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், பாத்திமா காட்சிகள் மற்றும் சிறந்த கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க தொடர்புக்கு, மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, மேலும் சகோ. ஜேசுராஜ் : 9894398144.
சிந்தனை : எந்தச் சூழ்நிலையிலும், எவ்வளவு மோசமான சோதனைக்கு நாம் உட்படுத்தப்பட்டாலும், யார் கைவிட்டாலும், நாம் வீதிக்கே வரும் சூழ்நிலை வந்தாலும் ஒரு போதும் நாம் நம்முடைய விசுவாசத்தையும், நம்பிக்கையையும் இழந்து விடக்கூடாது.. பாருங்கள் இங்கே ஒரு முக்கியமான நபர் இரவு முழுவதும் கண்விழுத்து ஜெபித்து மாதாவின் வருகைக்காக காத்திருந்து, சில நிமிடங்க்களுக்குள் தன் நம்பிக்கையை இழப்பதை.. எவ்வாறு கோதுமை மணிகள் நன்றாக அடிக்கப்பட்டு, புடைக்கப்பட்டு களஞ்சியம் சேர்கிறதோ.. அதுபோல் நாமும் கடவுளால் சோதனைகள் என்னும் பிரம்பால் அடிக்கப்பட்டாலும், புடைக்கப்பட்டாலும் களஞ்சியம் என்னும் மோட்சத்திற்கு கண்டிப்பாய் போய்ச்சேரவேண்டும் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் இழக்காமல்..
இயேசுவுக்கே புகழ் !!! மரியாயே வாழ்க !!!