அன்னையின் ஆறாம் காட்சியின் தொடர்ச்சி....(வானில் தோன்றிய மாபெரும் அதிசயம்)
“ சூரியனைப் பாருங்கள் “ என்று லூசியா கூறியதும் கூட்டத்திலிருந்த மக்கள் எல்லோரும் மேலே பார்த்தனர்
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அந்த மாபெரும் புதுமை சூரியனில் நடைபெற்றது. மேகங்கள் திடீரென விலகிக்கொண்டன. வானம் நீல நிறமாக விரிந்து பரந்து காணப்பட்டது. சூரியன் நடுவானில் கம்பீரமாக பிரகாசித்தது. ஆனால் ஒரு மேகமும் சூரியனை மறைக்காமல் சூரியன் மட்டும் இருந்தாலும் எல்லோரும் வெரும் கண்ணால் அதைப் பார்க்க முடிந்தது (போன பகுதியில் இது நடுப்பகல் என்று குறிப்பிட்டிருந்ததை நினைவில் கொள்ளவும்..கூட்டம் முழுவதும் முழு ஆச்சரியத்துடன் கண்கூச்சமில்லாமல் சூரியனை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது.
அவ்வாறு காட்சியளித்த சூரியன் திடீரென நடுங்க ஆரம்பித்தது. ஆம்.. வானத்தில் நிலை தடுமாறி அசைந்து நடுங்கியது. தன்னையே சுற்றவும் தொடங்கியது. அம்மாபெரும் தீப்பிழம்பு ஓரு ராட்சத சக்கரம் போல் நெருப்பு பற்றிக்கொண்டு, நெருப்பால் எரியும் சக்கரம் போல் கணிக்க முடியாத வேகத்துடன் சுற்றியது! எத்தனை வேகம்! ஆ என்ன நெருப்பு! நெருப்பின் ஒளி சூரியனை சுற்றிலும் பாய்ந்து கொண்டிருந்தது எந்த திசை நோக்கி சுற்றியதோ அந்தத் திசை நேரே சூரியனின் முழு வட்டத்திலிருந்து சுடர்க்கதிர்கள் கற்றை கற்றையாக முழு வேகத்துடன் பாய்ந்து ஓடின.இவ்வொளிக் கற்றைகள் தீப்பிளம்புகளால் வயலட்,இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களில் எப்பக்கமும் அள்ளி வீசப்பட்டன.
கூட்டதில் இருந்தவர்கள் இந்த அதிசயத்தை நிலைமறந்து, நினைவிழந்து பார்த்துக் கொண்டு நின்றனர். மரம், செடி, கொடி, பாறை, மனிதர்கள், அவர்களின் உடைகள், பொருட்கள்,தரை எங்கும் இத்தனை நிறங்களும் மாறி மாறி துவைத்து வந்து கொண்டிருந்தன. இவ்வாறு சூரியன் சற்று நேரம் சுற்றியபின் ஒரு சில வினாடிகள் நின்றது. பின் மீண்டும் சுழல ஆரம்பித்தது. சக்கர வாணம் (தரைச்சக்கர வெடி) சுற்றும் பொழுது சுற்றிலும் தீச்சுடர் வீசப்படுவது போல உலகத்திலும் எத்தனையோ மடங்கு பெரிய சூரிய சக்கரம் நெருப்புக்கோளமாய் சுற்றிச் சுழன்றதே ஒரு மாபெரும் பயங்கரக் காட்சியாக இருந்தது.
இவ்வாறு சுற்றிய சூரியன் மீண்டும் ஒருமுறை சற்று நின்றது. இப்படி அது நின்றது கூட்டத்தினருக்கு ஒரு ஓய்வு அல்லது தாங்கும் சக்தியை கொடுப்பது போலிருந்தது. மீண்டும் அந்த மாபெரும் கோளம் சுழலத்தொடங்கியது. சுழன்றது மட்டுமல்ல அதன் வேகமும், நெருப்பும், நிறங்களும் பலமடங்கு அதிகரித்தன. மாபெரும் ஜனக்கும்பல் ஒரு குறிப்பிட்ட அதிசயத்தை தேடி வந்திருந்தது. வாக்களிக்கப்பட்ட இப்பெரும் அதிசயத்தை அவர்கள் கண்ணாரக் காண்கிறார்கள். ஒருபோதும் சூரியனை உலகம் இவ்வாறு கண்டதில்லை. உண்மையாக இதுவே அக்குழந்தைகள் கூறிய அதிசய நிகழ்ச்சி என்ற எண்ணம் எல்லார் மனதிலும் உதயமாகிக் கொண்டிருந்தது.
ஆனால் இதுமட்டுமல்ல சுழன்றுகொண்டிருந்த சூரியன் திடீரென இடம் பெயர்ந்தது. சகிக்கக்கூடியதாக இல்லை இக்காட்சி. சூரியன் இடம் பெயர்ந்து வலது பக்கமும் இடது பக்கமும் ஓடுகிறது. நடுங்கி குலுங்கி, அங்கும் இங்கும் நிலை தடுமாறிப் பாய்கிறது. உரைக்க இயலா பெரும் நெருப்புச்சக்கரம் நிலைபெயர்ந்து விட்டது. அங்கும் இங்கும் ஆடிச்சுழன்று அக்கினிப்பிழம்பை அத்தனை நிறங்களிலும் அள்ளி வீசியபடி கீழ் நோக்கி… பூமியை நோக்கி வேகமாய்ப் பாய்கிறது. சூரியன் தன் நிலையை இழந்து விட்டது. அதை வானத்தில் கட்டியிருந்த கயிறு அறுந்து விட்டதுபோல் வேகமாக விழுந்து கொண்டிருக்கிறது.
ஆம்.. சூரியன் கீழே விழுகிறது. அது நெருங்க நெருங்க வெப்பம் கூடுகிறது! அவ்வெப்பம் அனைத்தையும் எரித்து எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிடும்…. இன்னும் சில வினாடிகளில் எல்லாம் தீப்பிடித்துக் கொள்ளும்! நட்சத்திரங்கள் பூமியில் விழும் என்று கூறப்பட்டது இதுதான்! இதோடு உலகம் முடிந்தது. இதோடு எல்லாம் அழிந்தது! பயங்கரம்! அச்சம்! மாபெரும் பயங்கரம்! கூட்டத்தில் அழுகை ஒலி… ஓலமிடும் சத்தம்… பெருமூச்சு!
மக்களின் இதயத்தினுள் புதைந்து கிடந்த தேவ நம்பிக்கை பீறிட்டுக் கொண்டு வெளிவருகிறது. “ நான் விசுவசிக்கிறேன், சர்வேசுவரனை விசுவசுக்கிறேன் “ ஆண்டவரே காப்பாற்றும்! சேசுவே மாதாவே! காப்பாற்றுங்கள் “ வேத எதிர்ப்பாளர்களும் நாஸ்தீகரும் கூட நடுநடுங்கினர்! ஏன் அவர்கள்தான் அதிகம் கலங்கினர். அது அத்தகைய நேரம். அவர்கள் இதயத்தின் அடியில் அடக்கம் செய்யப்பட்டு மறைந்து கிடந்த கடவுள் நம்பிக்கை பொத்துக்கொண்டு வெளிவந்தது. அவர்கள் ஆங்காரம் அழிந்து, உண்மை வெளிப்பட்ட நேரம் அது. கடவுள்.. எல்லாம் சர்வேசுவரன் ஒருவர் இருக்கிறார். இயற்கையையும் எல்லாவற்றையும் ஆண்டு நடத்துபவர் ஒருவர் உள்ளார் என்ற உண்மையை அவர்கள் தங்களையும் மீறி ஒப்புக்கொண்டனர்.
பாவ மன்னிப்பு கேட்டு எழுந்த ஒலி… முழங்காலிட்டு மன்றாடிய மக்களின் குரல் ஒலி மாமரிக்கு வாழ்த்துப் பாடிய நன்றி ஒலி எல்லாம் சேர்ந்து அந்தக் காட்சியின் முழுப்பயனையும் மக்கள் உணரச் செய்தன.
கூட்டத்தைப் பார்த்து பாய்ந்து வந்த சூரியன் தன் வேகத்தைக் குறைத்தது. எப்படி அங்குமிங்கும் அசைந்து கீழே பாய்ந்ததோ, அதே போல் அங்குமிங்கும் அசைந்து மேலே ஏறி தன் இடத்தை அடைந்தது. அதன் ஆட்டம், நடுக்கம், சுழற்சி, நெருப்பு வீசுதல் எல்லாமே நின்றன. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கவே அதன் ஒளியின் தன்மை மாறியது. அதைப் பார்க்க கண் கூசத்தொடங்கியது. எந்த நாளும் வரும் சூரியனைப் போல் அது இப்பொழுது காணப்பட்டது. ஏறக்குறைய 15 நிமிடங்கள் நிகழ்ந்த மாபெரும் அதிசய நிகழ்ச்சி, அங்கு நின்ற மக்கள் அனைவரையும் ஒரு அந்தரங்க மகத்துவம் நிரம்பிய திருப்தியில் மூழ்கடித்தது…
அப்பாடா! இப்போதுதான் மக்கள் விடுதலையுடன்… நன்றியுடன்.. விசுவாசத்தால் வரும் மகிழ்ச்சியுடன்… ஆபத்து நீங்கியது, ஆண்டவரின் மகிமை தோன்றியது என்ற எண்ணத்துடன் நீண்ட ஆறுதலான பெருமூச்சு விட்டார்கள். ஒருவரையொருவர் பார்த்துப் புண்ணகை செய்துகொண்டார்கள். இன்னும் பேச நா எழவில்லை. மிகவும் இதமளிக்கிறதே இந்த தென்றலும் இடமும்! ஆம் அவர்களின் உடைகள் நன்கு காய்ந்து உலர்ந்து விட்டன. மழை நின்றது மட்டுமல்ல, தரையும் காய்ந்து விட்டதே! கால் மணி நேரத்திலா?...
குழந்தைகள் எதிர்ப்பார்த்தபடி, அன்னை முன்னறிவித்தபடி மாபெரும் அதிசயம் நடைபெற்றுவிட்டது…
குறிப்பு : ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி அன்று மாதாவின் காட்சி நடைபெறாததால் சர்வேசுவரன் அக்டோபர் 13- அன்று முன்பு திட்டமிடப்பட்டிருந்ததை விட குறைத்தே அற்புதம் நடைபெறும் என்று மாதா தன் ஐந்தாம் காட்சியில் குழந்தைகளிடம் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இந்த அற்புதமே..மிகவும் அதிசயமும், மிக பிராமண்டமும் மிகுந்த அச்சம் தருவதாக இருக்கிறதே கடவுள் திட்டமிட்டிருந்தபடி நடந்திருந்தால்….?????
நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், பாத்திமா காட்சிகள் மற்றும் சிறந்த கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க தொடர்புக்கு, சகோ.பால்ராஜ், மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, மேலும் சகோ. ஜேசுராஜ் : 9894398144.
சிந்தனை : கடவுள் படைத்த சூரியனை அவரே பந்தாடியதை பார்த்தீர்களா! அவர் சர்வத்தையும் படைத்தவர்.. சர்வலோகத்திற்கும் ஆண்டவர்.. சர்வ வல்லவர். இந்த உலகமும் அதில் உள்ளவைகள் அனைத்தும் அவருக்கு அடிபணிகின்றன..அவருக்கு கோள்கள் உடபட அனைத்துமே அடிபணிகின்றன..
அதே கடவுள் பூமியை பந்தாட ஏன் அழிக்க எத்தனை வினாடிகள் பிடிக்கும். அவரின் அளவற்ற இரக்கத்தினால் அல்லவா.. உலகம் உருண்டு கொண்டிருக்கிறது.. நாமோ.. பாவத்திற்கு மேல் பாவம் செய்து கொண்டு சவேசுவரனை நோகடித்துக் கொண்டிருக்கிறோம்... எத்தனை நாட்கள் அவர் பொறுமையோடு இருப்பார்.. இன்று நாட்டில் நடக்கும் அசிங்கமான..அவலட்சனமான..முகம் சுழிக்க வைக்கும் நிகழ்வுகள் எல்லாம் பாவமே இல்லாததுபோல் சர்வ சாதாரனமாக.. நடக்கிறது... குடிப்பவர்களை சினிமா புகழ்கிறது..ஊக்குவிகிறது... தவறான நடத்தைகளுக்கு ஜால்ரா போடுகிறது.. சினிமா, தொலைக்காட்சி என்ற அனைத்து மீடியாக்களுமே பெரிய..பெரிய..தப்பான விஷயங்களை தப்பில்லாததுபோல் காட்டுகிறது.. ஆபாச உடைகள்..ஆபாச நடனங்கள்.. நாகரீகமாக..கண்ணியமாக இருக்கவேண்டிய.. காட்டப்படவேண்டிய விசயங்கள்.. எல்லாம் நாசமாகவே..சர்வ சாதாரனமாக காட்டப்படுகின்றன..
சர்வேசுவரன் நம்மால் ரொம்பவே நொந்துபோயிருக்கிறார்... மிகவும் கவனமாகவும்... எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்.. நம் ஆன்மாக்களை பாதுகாக்க வேண்டும்... நம்மை பாதுகாக்க நாம் மாதாவின் துணையை நாட வேண்டும்..மாதாவின் மாசற்ற இருதயத்திடம் நம்மை ஒப்படைக்க வேண்டும்.. மாதாவுக்கு கடவுள் எத்தகையை வல்லமையை...ஆற்றலை.. சலுகைகளை கடவுள் கொடுத்துள்ளார் என்பதை சென்ற பகுதியை படித்துப்பார்த்தால் விளங்கும்...
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !