சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 39

திரு இருதயப் பக்தியின் அஸ்திவாரம்

கண்ணைப் பறிக்கும் சலவைக் கற்களால் அமைக்கப்பட்டு, பொன்னால் இழைத்த கோபுரங்களுடன் மின்னித் துலங்கும் ஓர் உன்னத மாளிகை, மிகக் கடுமையான புயல்களையும் பொருட்படுத்தாது பல்லாண்டு நிற்பதைக் கண்டு களிப்பவர்கள், அது அவ்வாறு நிலைபெற்று ஓங்கி நிற்பதன் காரணம் அதன் ஆழமான அஸ்திவாரம்தான் என்பதை உணர்ந்து கொள்வார்கள். 

அவ்வாறே, அர்ச். மர்க்கரீத் மரியம்மாளின் காலம் முதற்கொண்டு தன் சுய வடிவத்துடன் ஒளிரும் திரு இருதய பக்தியானது, அதற்கு விரோதமாய் எழும்பிய கலாபனைகளால் சற்றும் அசையாது, முன்னூறு ஆண்டுகளுக்கு அதிகமாய்த் துலங்குவதைப் பார்த்து அகமகிழும் நாம் அது அவ்வாறு நிலைநிற்பதன் காரணம் அதன் தெய்வீக அஸ்திவாரமே என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதை அழிக்க முயன்றவர்களில் சிலர் வரலாற்று ஆசிரியர்கள், சிலர் நாத்திகர்கள், சிலர் தப்பறையாளர்கள், சிலர் போலி இறையியல்லாளர்கள். இவர்களின் முயற்சிகளை வீணாக்கிய, இப்பக்தி முயற்சி இவர்களின் தாக்குதலை எப்படி முறியடித்தது என்பதை சற்றே ஆராய்ந்து பார்ப்போம்

சேசுநாதர் அர்ச். மர்க்கரீத் மரியம்மாளுக்குத் தமது திரு இருதயத்தைத் திறந்து காண்பித்து, அதற்கு மானிடர் வணக்கம் செலுத்த வேண்டுமென்று கற்பித்ததாகத் திரு இருதய பக்தியின் வரலாற்றில் வர்ணித்தோமன்றோ? அவ்வாறு நமது திவ்விய ஆண்டவரே திருவாய் மலர்ந்து நமக்குப் படிப்பிக்கவில்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட, இப்பக்தி முயற்சி இறையியலுக்கு அடுத்ததே. 

ஆயினும் பேதைப் பெண்ணைப் பின்பற்றி வருகிறோம் என்று பிதற்றும் திரு இருதய விரோதி களின் வாயை அடக்கவும், ஆண்டவரின் அரசாட்சி எங்கும் பரவ வேண்டுமென்று விரும்பும் திரு இருதய பக்தர்களின் உற்சாகத்தை எழுப்பவும், புண்ணிய வாழ்வின் சிகரத்தை அடைந்த இக்கன்னிகை கண்ட காட்சிகளின் உண்மையை நிரூபிக்க விரும்புகிறோம்

சரித்திரம் சார்ந்த ஒரு சம்பவம் நிறைவேறியது மெய்யென எண்பிப்பதற்கு இருவித அத்தாட்சிகளை உபயோகிப்பது வழக்கம். அவைகளில், அவ்விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையை உணர்த்தும் கருத்துடன் தங்கள் கையால் எழுதி வைத்த சாசனங்கள் முதல் வகைப்பட்டன. இச்செய்தியை நேரே அறிந்த நேர்மையுள்ள நூலாசிரியர்கள் வர்ணிக்கும் சம்பவங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. இவ்விரண்டு சாட்சிகளால் எண்பிக்கப்பட்ட காரியம் உண்மையாயிருக்க வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. ஆதலால் அர்ச். மர்க்கரீத் மரியம்மாள் அடைந்த காட்சிகள் உண்மையா இல்லையா என்று ஆராயும்போது, இத்தகைய அத்தாட்சிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பது அவசியம்

தொடரும்...