4. நற்கருணைக்கு முன் மரியாதை பேழைக்குள் - இருந்தால் ஒரு முழங்கால் மண்டியிடுவது. ஸ்தாபகம் செய்திருந்தால் இரு முழங்கால்களும் மண்டி இடுவது என்று பல நூற்றாண்டுகளாகவே ஒழுங்கு இருந்தது. இன்று முழந்தாளிடுவது இந்தியப் பண்பல்ல என்ற கருத்தை சில அறிஞர்கள் பரப்பி வருகிறார்கள். இயேசுவின் பெயருக்கு (அதாவது இயேசுவுக்கு) விண்ணவர், மண்ணவர், கீழுலகோர், அனைவரும் மண்டியிட (பிலிப் 2:10) என்ற திருவசனம் இந்தியாவைப் பொறுத்தமட்டில் செல்லாதோ. முழங்காலிடுவது இந்தியப் பண்பாடல்ல என்கிறார்கள். சாஷ்டாங்கசமாக விழுவது இந்தியப் பண்பாடுதானே. இப்படி சாஷ்டாங்கசமாக விழுவதில் முழந்தாளிடுவது அடங்கியுள்ளதே. முழங்காலிடாமல் சாஷ்டாங்கசமாக விழுந்து பாருங்கள் தெரியும். ஒரு முழந்தாளிடுவது ஒரு விதமாக இருக்கிறதென்றார் ஒருவர். சரி, இரு முழந்தாளிடுங்களேன். மேலும் மரியாதையாயிருக்கும். இன்று நம் நாட்டில் அஞ்சலி HASTHA என்ற ஒரு கருத்து உலவுகிறது. இது நம் நாட்டுக்கு ஏற்றதென்பர். சரி, இதையாவது சரியாகச் செய்யக் கூடாதா? அஞ்சலி HASTHA என்றால் தலைமேல் கரங்குவித்து வணங்குவது அப்படியென்றால் அதை ஒழுங்காகச் செய்யுங்களேன். 'தலைவா, உனை வணங்க தலைமேல் கரம் குவித்தேன்" - என்று பாடுகிறார்கள். கரங்களைக் கட்டிக்கொண்டு. என்ன பொருத்தம். பிள்ளையார் முதலான தெய்வங்கள் சந்நிதியில் வணக்கம் செய்வோர் எப்படி வணங்குகிறார்கள் என்று சற்று கவனியுங்கள். நடுத்தெருவில் கூட தலைமேல் கரம் குவித்து வணங்குகிறார்கள். பிள்ளையாருக்குக் கிடைக்கிற மரியாதை கூட தம்மை வெறுமையாக்கிக் கொண்ட உண்மைக் கடவுள் நம் ஆண்டவருக்கு இப்போது கிடைப்பதில்லை. அந்தோ, கத்தோலிக்கமே, கழுத்துக்கு எங்கே சுளுக்கு வரப்போகிறதோ என்று பயந்து நற்கருணை முன் தலைமிகச் சிறிது வணங்கி பெரிய ஆராதனை செய்து விட்டதாக நினைத்துக் கொள்பவர் ஏராளம். இதற்கு முன் மாதிரி பெரும்பாலும் குருக்களும், துறவியருந்தான். சாதாரண மக்கள் இவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே செய்கிறார்கள். மறைந்துள்ள தெய்வ மகத்துவத்துக்கு நாம் செய்யும் மரியாதை இதுதானா? எவ்வளவுக்கெவ்வளவு மறைந்துள்ளாரோ அவ்வளவுக்கவ்வளவு அதிக மரியாதை செலுத்துவதே முறை.
5. திருப்பலிக்குத் திருஉடைகள் திருப்பலி நிறைவேற்றும் நேரத்தில் குறிப்பிட்ட திரு உடைகளை அணிய வேண்டுமென்று திருச்சபை விதிகளைத் தந்துள்ளது. இந்த விசயத்திலும் குருக்கள் பலர் தவறுவது மிகவும் வருந்தத்தக்கது. ஏற்ற அதாவது திருச்சபை குறிப்பிட்டுள்ள உடைகளை முறையாக உடுத்துவது நற்கருணைக்கு நாம் காட்டும் மரியாதைக்கு அடையாளம். அங்கனம் செய்யாவிடில் இவ்வுன்னத அருட்சாதனத்தை அவமதிப்பதற்குச் சமமாகும்.
6. நன்மை வாங்கிய பின் நன்றியறிதல் அப்ப குணங்களில் ஆண்டவர் ஒரு பத்து - பதினைந்து நிமிடமாவது (அதாவது அப்பத்தின் குணங்கள் ஜீரணம் ஆகும் வரையில்) பிரசன்னம் நம் உடலில் உள்ளது. அந்த நேரத்தைச் சரியான முறையில் செலவழிக்காவிடில் நம் உள்ளத்தில் வரத்திருவுளமான இறைமகனுக்கு என்ன மரியாதை. நன்மை வாங்கிப் பயன் என்ன?
நன்றி : சீயோன் குரல்
நன்றி : சகோதரர் திரு.பிரான்சிஸ் சேவியர்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !