இரெபேக்காள் மாதாவின் முன்னடையாளம்… இறுதிப்பகுதி..
“ஈசாக் அவனது ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து: இதோ, என் மகன் விடுகின்ற மணம் ஆண்டவர் ஆசீர்வதித்த விளை நிலத்தின் வாசனை போல் இருக்கின்றதே!” – ஆதியாகமம் 27 : 27
முதற்காரணங்கள் எல்லோருக்கும் தெரியும்..
இரெபேக்காள் யாக்கோபிற்கு எசாயுவின் ஆடையை அணிவிக்கிறாள், கரங்களில் ஆட்டு மயிர்த் தோலை கட்டுகிறாள் என்று..
ஆனால் இந்த இரண்டையும் பார்த்து ஈசாக் திருப்தி அடைந்துவிடவில்லை.. கடைசி வரைக்கும் சந்தேகக் கண்ணோடே இருக்கிறார்..
1. முதலில் வேட்டை மிருகம் இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி அகப்பட்டது குறித்து சந்தேகம்.
2. எசாயுவின் குரல் குறித்து சந்தேகம்..
3. கரங்களைக் குறித்து சந்தேகம்..
4. உண்மையிலேயே எசாயுதானா? என்று இரண்டு முறைக் கேட்கிறார்..
இத்தனையையும் மீறி ஈசாக், யாக்கோபை ஆசீர்வதிக்க என்ன காரணம்..
எசாயுதானா என்ற சந்தேகத்தின் இறுதியில் நான் சாப்பிட்ட பின்புதான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்கிறார் (ஆதி 27 :25).
சாப்பிடுகிறார்.. அதில் எதையும் அவர் கண்டுபிடிக்கவில்லை.. கேள்வி கேட்கவில்லை..
காட்டு மிருகத்தின் கறியின் சுவையை, வீட்டு மிருகத்தின் கறியின் சுவையிக்கு கொண்டு வருகிறார் இரெபேக்காள்.. அருமையான சமையல்.. அசைவ பிரியர்கள் சாப்பிடும்போதே கறியின் ருசியை வைத்து அது என்ன கறி என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.. அல்லது சாப்பிடும்போதே “இது எதோ வித்தியாசமாக இருக்கிறதே.. இது என்ன கறி “ என்று கேள்வியாவது கேட்பார்கள். இங்கே ஈசாக் கேள்வி எழுப்பவில்லை…
கறி நாட்டுக்கறி.. கொடுக்கப்பட்டது இரெபேக்காளிடம்.. ஆனால் அது காட்டு விலங்கின் கறியாக மாறிப்போய்விட்டது.. ஈசாக்கிற்கு பிடித்தவாறு..
இங்கே நம் தேவ தாயைப் பற்றி தியானிக்க வேண்டும். ‘ நம்முடைய ஜெப தவ பரிகாரங்களை, நம் தேவ தாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து அந்த தாயின் கரங்கள் வழியாக தேவ பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தால்.. அந்த ஜெப தவ பரிகாரங்களில் உள்ள குறைகள் களையப்பட்டு நிறைகள் சேர்க்கப்பட்டு நேச பிதாவுக்கு மிகவும் பிடித்த ஜெபங்களாக, நமக்கு புண்ணியங்களாக அது மாறிவிடும்..
ஆகையால் இந்த இடத்திலும் மாதா தெறிகிறார்கள்.. ஒப்பனை செய்து யாக்கோபை தயாரிக்கவில்லை.. உண்மையாகவே தயாரித்தார்கள்..
இதில் கிளைமாக்ஸ்தான் மிகவும் முக்கியம்..
“ அவன் கிட்டப் போய் அவனை முத்தமிட, ஈசாக் அவனது ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து: இதோ, என் மகன் விடுகின்ற மணம் ஆண்டவர் ஆசீர்வதித்த விளை நிலத்தின் வாசனை போல் இருக்கின்றதே!”
ஆதியாகமம் 27 : 27
இந்த இறைவார்த்தையை நன்றாக கவனித்து தியானியுங்கள் இதில் ஒரு மறை உண்மை இருக்கிறது..
இதற்கு முன்னும் ஈசாக் யாக்கோபை தொட்டுப்பார்த்தார்.. தடவிப்பார்த்தார்.. அவர் கிட்டதான் இருக்கிறார்.. அப்போது வராத வாசனை இப்போது எப்படி வந்தது..? அந்த வாசனை யாருடயது..? அது எங்கேயிருந்து வந்தது..?
அவரே சொல்கிறார்..
“என் மகன் விடுகின்ற மணம் ஆண்டவர் ஆசீர்வதித்த விளை நிலத்தின் வாசனை போல் இருக்கின்றதே!”
ஆண்டவர் ஆசீர்வதித்த விளை நிலம்.. எது? ஆண்டவரே விளைந்த நிலமான நம் தேவதாய் தவிர வேறுயார்?
தாயின் நறுமணத்தை அதாவது தேவ தாயின் நறுமணத்தை முகர்கிறார்..
அதுதான் ஈசாக் யாக்கோபை.. அதாவது தேவ பிதா நம்மை ஆசீர்வதிக்க காரணமாக அமைகிறது..
இதில் மேலும் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான மறையுண்மை என்னவென்றால்.. இப்போது அங்கிருப்பவர் யாக்கோபு அல்ல.. எசாயு..
யாக்கோபு எசாயுவாக மாறிவிட்டார்.. அதனால்தான் ஈசாக் மனம் இசைந்து முழு மனதோடு நிறைவாக ஆசீர்வதிக்கிறார்..
அதுபோல நாமும் தேவ மாதா என்கிற கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நல்ல விளை நிலத்தில் விதைக்கப்பட்டால்.. பாவிகளான நாம் இயேசு என்கிற பரிசுத்தராக தெய்வீக நறுமனம் தரும் நல்ல பயிராக.. விளைச்சல் உள்ள பயிராக மாறிவிடுவோம்..
இப்போது அங்கு இருப்பது நாமல்ல… இயேசு.. நாம் இயேசுவாக மாறிவிடுவோம்.. இப்போது நம்மை பிதா முழு மனதோடும், முழு நிறைவோடும் ஆசீர்வதிக்காமல் இருப்பாரா என்ன?
இப்போது பாருங்கள் மாதா பக்தி நமக்கு எந்த அளவுக்கு தேவையாயிருக்கிறது..
நம்மை சரியான விதத்தில் தயாரித்து.. முழுமையான தகுதியைப் பெற வைத்து அவரின் மூத்த மகனான இயேசுவைப்போல் இளைய பிள்ளைகள் நாம் என்ற தகுதியையும், அந்தஸ்தையும் பெற வைக்கிறார்கள் என்றால் அந்த தாய் தேவ தாய் நமக்கு எந்த அளவுக்கு தேவையாய் இருக்கிறார்கள்..
அந்த தாயை ஒதுக்கிவிட்டு இயேசு சுவாமியை நம்மால் அடைந்துவிட முடியுமா? கண்டிப்பாக முடியாது என்பதே கத்தோலிக்கர்களான நமது குரல். நமக்கு மாதா தேவை.. கண்டிப்பாக தேவை.. கட்டாயமாக தேவை..
“ ஆதி அந்தமும் அவள்தான்… நம்மை ஆளும் நீதியும் அவள்தான்.. அகந்தையை (பேயை) அழிப்பாள்… ஆற்றலைக் கொடுப்பாள்.. அவள்தான் அன்னை மகா சக்தி… அந்த தாயில்லாமல்… நாமில்லை” ( பாடல் நன்றி வாழும் ஜெபமாலை இயக்கம்)..
இரெபேக்காள் நம் தேவ தாயின் முன்னடையாளம் என்பது 100 சதவித உண்மை.
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !