நாம் துவக்கத்தில் கூறியவண்ணம் அர்ச். மர்க்கரீத் மரியம்மாளுக்கு நமதாண்டவர் அளித்த காட்சிகள் உண்மையென ஸ்தாபிப்பதற்கு இரண்டாம் அத்தாட்சி, விமரிசையுள்ள சரித்திர ஆசிரியர்கள் இயற்றியுள்ள நூல்கள். சேசுநாதரின் பரிசுத்த பத்தினியின் புண்ணியங்களைக் கண்ணாறக் கண்டு அவர்களுடைய உள்ளத்தில் பற்றியெரிந்த தேவசிநேக அக்கினி யைத் தாங்களே பரீட்சித்து, திரு இருதயப் பக்தியைக் குறித்து அவர்கள் உரைத்த இனிய போதகங்களை இன்புறக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த கன்னியர், குருக்கள் அனைவரும் தக்க காரணமில்லை என்றால், அவர்களது படிப்பினைகளைக் கையேற்று கொண்டிருப்பார்களா?
மற்றவர்களுக்கு அவைகளைத் தாங்களே கற்பிக்க முன்வருவார்களா? இவர்கள் அர்ச்.மர்க்கரீத் மரியம்மாள் விஷயத்தில் தவறினார்கள் என்று வைத்துக்கொண்ட போதிலும், சர்வ ஜாக்கிரதையுடன் பரிசோதனை செய்த மேற்றிராணியாரும், அவருடைய பிரதிநிதியும் மோசம் போனார்கள் என்று சொல்லத் தகுமோ?
கடைசியாய் யாதொன்றையும் தீர ஆராயாது ஏற்றுக்கொள்ளாத திருச்சபை இந்தக் காட்சிகளையும், இவைகளின் மீது ஊன்றி நிற்கும் திரு இருதய பக்தியையும் அங்கீகரிக்கும் பொழுது, தனக்கே உரிய விமரிசையுடன் நடக்கவில்லை என்று உரைக்கக் கூடுமோ? அல்ல, அல்ல. ஆதலால், புனிதையுடைய சரித்திர ஆசிரியர்கள் போதிப்பதை நினைவுகூர்ந்து சேசுநாதர் புனிதைக்குப் பற்பல காட்சிகளை அளிக்கத் திருவுளமானார் என்றும், அவைகளில் திரு இருதய பக்தியை வெளியிட்டார் என்றும் ஏற்றுக்கொள்வதே நியாயம்
தேவ அன்பு நமது பரிசுத்த பத்தினிக்குக் கொடுத்த காட்சிகளில் திரு இருதய பக்தியைப் படிப்பித்தது புத்தியுள்ள அனைவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல துலங்கும் என்பதால், சாஸ்திரிகள் எனப் பிதற்றித் திரியும் அநேக சரித்திர ஆசிரியர்கள், அவைகளின் உண்மையை ஏற்றுக்கொள்ளாததின் காரணமென்ன?
அது திருச்சபைக்குத் தீங்கு செய்ய அவர்கள் முடிவுகட்டி நிற்கும் வைராக்கியமேயன்றி மற்றப்படியல்ல அவர்கள் தங்கள் அகங்கார கர்வத்தை அடக்கி, சர்வேசுரனுடைய அளவற்ற நன்மைத்தனத்தைச் சற்றே நினைவுகூர்வார்களானால், அவர்களுடைய மறுப்புகள் அழிய, அவர்களுடைய விரோதமும் ஒழியும்.
வாக்குக்கெட்டாத ஆனந்தத்தில் நித்தியமாய் வீற்றிருக்கும் சர்வேசுரன் மானிடர்மீது கொண்ட அன்பின் நிமித்தம் நீச மனிதனைப் போல் உலகத்தில் எழுந்தரு ளினதைக் கண்ட பின்னர், அவர் ஒரு புண்ணியவதிக்குக் காட்சி கொடுத்ததைப்பற்றி ஆச்சரியப்படுவது நியாயமா ?
நேச மிகுதியால் தூண்டப்பட்டு தமது திவ்விய மாமிசத்தை மனிதர்களுக்குப் போஜனமாய் அளித்ததைப் பார்த்த பின்னர் அவர் தமது திரு இருதயத்தை ஒரு புனிதைக்குத் திறந்து காட்டினார் என்பதைக் குறித்துப் பிரமிப்பது மதியோ ஆதலால் திரு இருதய பக்தியே நேசத்தின் பக்தி என்பதை நினைவுகூர்ந்து மறுப்புகளை அகற்றி, அதை மரியாதை வணக் கத்துடன் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
தொடரும்...