பைபிளின் ஆதாரங்களின் அடிப்படையில்..
“ எழுந்தருளும் ஆண்டவரே, உமது இருப்பிடத்திற்கு எழுந்தருளும்: உமது மாட்சி விளங்கும் உமது பேழையும் எழுவதாக.”
சங்கீதங்கள் 131 : 8
“கடவுளாகிய ஆண்டவரே, எழுந்தருளும்! உமது உறைவிடத்திற்கு வந்தருளும்! உமது பேராற்றல் விளங்கும் உம் திருப்பேழையும் எழுந்து வரட்டும்! கடவுளான ஆண்டவரே, உம் குருக்கள் மீட்பின் ஆடையை அணிந்து கொள்ளட்டும். உம் புனிதர்கள் நன்மைகள் பெற்று மகிழட்டும்.”
2 நாள் 6 : 41
“ பின்பு விண்ணகத்தில் கடவுளின் ஆலயம் திறக்கப்பட்டது. உடன்படிக்கையின் பேழை அவரது ஆலயத்தினுள் காணப்பட்டது. மின்னல்களும் பேரிரைச்சலும் இடிமுழுக்கமும் நில நடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின”
விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள். “
திருவெளிப்பாடு 11: 19, 12:1
“ அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன்தகடு வேய்ந்த உடன்படிக்கைப் பேழையும் இருந்தன. இப்பேழையில் மன்னாவைக் கொண்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் துளிர்ந்த கோலும், உடன்படிக்கைக் கற்பலகைகளும் இருந்தன.”
எபிரேயர் 9 :4
பழைய உடன்படிக்கைப் பேழையில் இருந்தவை :
1. பத்து கட்டளைகளை உள்ளடக்கிய கற்பலகை.
2. ஆரோனின் துளிர்த்த கோல்
3. மன்னா
புதிய உடன்படிக்கைப் பேழையில் இருந்தது :
1. வார்த்தையான சர்வேசுவரன் இயேசு சுவாமி ( அங்கு கடவுளின் வார்த்தை. இங்கு வார்த்தையானவர்)
2. தலைமைக்குரு இயேசு சுவாமி ( அங்கு குருக்களின் அடையாளம் ஆரோனின் துளிர்த்த கோல் மட்டுமே )
3. உயிருள்ள திவ்ய நற்கருணை ஆண்டவர் ( அங்கு அழிந்து போகும் மன்னா)
பழைய உடன்படிக்கைப்பேழை கொடுத்த ஆசீர்வாதங்கள்..
“ அன்று தாவீது ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினவராய், "ஆண்டவருடைய பேழை என்னிடத்தில் வருவது எப்படி" என்று சொல்லி, அதை தாவீதின் நகருக்குக் கொண்டு வர விரும்பாது கேத்தையனான ஒபேதெதோமின் வீட்டிற்கு அதைத் திருப்பி விட்டார்.”
ஆண்டவருடைய பேழை கேத்தையனான ஒபேதெதோம் வீட்டில் மூன்று திங்கள் தங்கியிருக்கையில், ஆண்டவர் ஒபேதெதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். “ 2 சாமுவேல் 9-11
புதிய உடன்படிக்கைப்பேழை எத்தகைய ஆசீர்வாதங்களை கொடுத்தது..
“எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே.
என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?
உமது வாழ்த்து என் காதில் ஒலித்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை அக்களிப்பால் துள்ளியது.
ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவள் பேறுபெற்றவளே" என்று உரக்கக் கூவினாள்.
மரியாள் ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்தபின்பு வீடுதிரும்பினாள்.” லூக்காஸ் 1 : 42-45,56
புதிய உடன்படிக்கைப் பேழை முதலில் செய்த பெரிய அற்புதம் புனித ஸ்நாபக அருளப்பர் அவர் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அவரின் ஜென்ம பாவத்தை போக்கியதுதான்.. முதல் ஞானஸ்தானம் நடைபெற்றது அப்போதுதான்..
நிறைய பேர் மாதா எலிசபெத்தம்மாளை சந்திக்க சென்ற நிகழ்வை மனித கண்ணோட்டத்தில் பார்த்து எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்யத்தான் மாதா சென்றார்கள் என்று கூறுகிறார்கள்.. ஆனால் ஸ்நாபக அருளப்பர் பிறப்பதற்கு முன்னாலேயே மாதா அங்கிருந்து சென்றுவிட்டார்கள் என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது..
அப்படியானால் மாதா அங்கே சென்றதற்கு காரணம் மீட்புத்திட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் வருகையை, ஆண்டவர் இயேசுவுக்கு முன்பாக சென்று அறிவிக்க.. மக்களை தயார் செய்ய இருக்கும் பழைய ஏற்பாட்டின் கடைசி இறைவாக்கினரின் ஜென்ம பாவத்தைப் போக்கவும், அந்த குடும்பத்தை மீட்பின் திட்டத்திற்கு தயாரிக்கவுமே மாதா சென்றார்கள்.. கண்டிப்பாக அந்த மூன்று மாதத்தில் எலிசபெத்தம்மாளுக்கு மாதா தன்னால் முடிந்த உதவியை செய்திருப்பார்கள்.. ஆனால் மாதா சென்றதன் நோக்கம் மனித அடிப்படையில் அல்ல மீட்பின் திட்டத்தின் அடிப்படையிலேயே..
மாதாவின் வாழ்த்தைக் கேட்டவுடன் எலிசபெத்தம்மாள் முற்றிலும் பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்படுகிறார்… அதாவது பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுகிறார்.. அப்போது அந்த அதிசயம் நடைபெறுகிறது.. அருளப்பரின் ஜென்ம பாவம் நீக்கப்படுகிறது..
இது எப்பேற்பட்ட ஆசீர்வாதம்..
புதிய உயிருள்ள உடன்படிக்கைப் பேழை செய்த அற்புதம்தானே அது..
புதிய உடன்படிக்கைப்பேழை ஆன்ம ரீதியாக மட்டும்தான் அற்புதம் செய்யுமா? உலக ரீதியாக செய்யாதா?
அதையும் செய்யும் உதாரணம்தான் கானாவூர் திருமண திராட்சை இரச புதுமை.. அதை நிறைவேற்றியது… மாதாவின் திருவயிற்றின் கனியான.. புதிய அழிவில்லாத மன்னாவான.. நற்கருணை ஆண்டவரான 30 வயது இயேசு சுவாமி.. ஆனால் அதைச் செய்ய தூண்டியது நம் தேவமாதான்..
தேவமாதாதான் புதிய உடன்படிக்கைப் பேழை அதுவும் உயிருள்ள உடன்படிக்கைப்பேழை என்பதற்கு பைபிளில் நிறைய ஆதாரங்கள் உள்ளன. எந்த ஆதாரமும் நமக்குத்தேவையில்லை. உயிருள்ள ஆண்டவரைத் தன் திருவயிற்றில் சுமந்த அந்த ஒன்றே போதும் நம் மகா பரித்த மாதாதான் ‘உயிருள்ள உடன்படிக்கைப் பேழை’ என்பற்கு இருந்தாலும் இந்த காலகட்டத்தில் நம்முடைய நேச மாதா யார் என்று கூரை மீது நின்று அறிவிப்பது தேவையாயிருக்கிறது.. நம் தேவ மாதாவை.. கடவுளின் தாயை காட்சிப் பொருளாக்கி விமர்சனம் செய்ய துணிவோர் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் அவர்கள் பேச்சையும் நம்பி அவர்கள் பின்னால் செல்லும் நம்மவர்களுக்காகவும் அறிவிக்க வேண்டியது அவசிய தேவையாய் இருக்கிறது.. தேவ மாதாவைப் பற்றிய விளக்கங்கள் மறைஉண்மைகள் அனைத்தும் கத்தோலிக்க திருச்சபையும், நிறைய வேத மறை வல்லுனர்களான புனிதர்களின் கூற்றுகளும், தேவ மாதாவின் நேரடிக் காட்சிகளும் ஏற்கனவே அறிவித்ததைத்தான் இக்கட்டுரைகளும், மற்ற சகோதர்களும் அறிவிக்கிறார்கள்..
கடவுளுக்கு சித்தமால் புதிய உயிருள்ள உடன்படிக்கைப்பேழை அடுத்த பகுதியிலும்...
நன்றி : வேதாகம மேற்கோள்கள் உதவி, வாழும் ஜெபமாலை இயக்கம்..
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !