சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 42

சேசு நாதரின் திரு சரீரம் தேவ வார்த்தையானவரோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருப்பதால், அது சர்வேசுரனின் திருச் சரீரமமாகின்றது. இக்காரணத்தினால் அந்த தெய்வீக சரீரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் நாம் ஆராதிக்கவும், வணங்கவும் வேண்டும்.

நாசரேத்தூரில் நமக்காக கடின வேலைகளைச் செய்து, பகிரங்க ஜீவியத்தில் குழந்தைகளையும், வியாதியஸ்தரையும், பல மக்களையும் ஆசீர்வதித்து, கடைசியாய் சிலுவையில் அறையப்பட்டதுமான சேசுவின் திருக்கரங்களும், முட்களால் முடிசூட்டப்பட்டுள்ள சிரசும், மனுக்குலத்தை தெய்வீக அன்போடு நோக்கி, நம்மீது வைத்த நேசத்தால் கண்ணீர் சிந்திய திருவிழிகளும், இன்னும் இவ்வாறே சகல அவயவங்களும் நமது பக்திக்கும், ஸ்துதி புகழ்ச்சிக்கும் உரியனவே

ஆயினும் இந்த உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் விசேஷமானதும் பிரசித்தமானதுமான ஆராதனை முயற்சிகளை நாம் செய்ய வேண்டுமென்பது திருச்சபையின் கருத்தல்ல. ஆனால் சேசுவின் திரு இருதயம் ஒன்றுக்கே ஒரு விசேஷ பக்தியைக் கட்டளையிடுகிறது. மற்ற உறுப்புகளுக்குக் காட்டாத விசேஷ பக்தியை சேசுவின் திரு இருதயத்திற்கு மாத்திரம் காட்ட வேண்டும்? இப்பக்தியைப் பரவச் செய்யப் பாப்பரசர்கள் பலர் ஒருவருக்குப்பின் ஒருவராய் ஏன் முயற்சி செய்து வருகிறார்கள்?

இதற்கு முக்கியக் காரணங்கள் பல உண்டு முதலாவதாக, நமதாண்டவரின் விருப்பம் அது. அர்ச். மர்க்கரீத் மரியம்மாளுக்கு அவர் தரிசனமான சமயங்களில் தமது இருதயத்தை மனிதர் விசேஷித்த விதமாய்ச் சங்கை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மேலும் சரீரத்தின் பல உறுப்புகளில், இருதயமே மிகச் சிறந்த உறுப்பு. அதுவே சிநேகத்தின் அடையாளம். சகல நற்குணங்களையும் நிறைவால் கொண்ட சேசுவின் திருச்சரீரத்தில், திரு இருதயமே பூரணமும் உந்நதமு மானதென்று சொல்ல வேண்டியிருக்கிறது

சேசுவின் திரு இருதயத்திற்கு செலுத்தும் வணக்கம் அந்தத் திரு இருதயத்திற்கு மட்டுமல்ல, அந்த இருதயத்திற்கு உடையவராகிய சேசு நாதருக்கே என்பது உறுதி. ஓர் ஆயரின் கையை நாம் முத்தி செய்யும் போது, அக்கையை மட்டுமா மகிமைப் படுத்துகிறோம், அந்த ஆயருக்கே மரியாதை செலுத்து கிறோம். ஒரு அர்ச்சியசிஷ்டவரின் உடைகளை முத்தி செய்யும்போது அந்த உடை களை அணிந்தவருக்கே சங்கை செய்கிறோம். சேசுவின் திரு இருதயத்திற்கு வணக்கமும், சிநேகமும் காட்டும்போது, அளவில் லாத நேசத்தோடு பற்றியெரிந்த திரு இருதயத்தை கொண்டிருக்கிற சேசுநாதருக்கே அச்சங்கை வணக்கங்களைச் செலுத்துகிறோம்

நமதாண்டவரே தமது இருதயச் சாயலை மனிதர்கள் சித்தரித்து அதற்கு வணக்கம் செலுத்துவதைப் பார்க்க ஆர்வமாயிருப்பதாகவும், அச்சாயல் உள்ள படங்கள் ஸ்தாபிக்கப்படும் வீடுகளை ஆசீர்வதித்து ஏராளமான வரப்பிரசாதங்களைப் பொழிவதாகவும் அர்ச். மர்க்கரீத் மரியம்மாளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்

தொடரும்...