“ ஒவ்வொரு தலைமுறையிலும் பரிசுத்த ஆன்மாக்களில் நுழைந்து, அவர்களைக் கடவுளின் நண்பர்களாகவும் இறைவாக்கினர்களாகவும் மாற்றுகிறது”
ஞான ஆகமம் 8 : 27
மாதாவின் பணி உலகம் முடியும் வரை ஓயாது.. அது கடவுளின் பணிகளை செய்துகொண்டே இருக்கும்.
மாதாவுக்கு முதலில் வேலை கொடுத்தது யார் ?
நம் நேச பிதா,
“தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்.
லூக்காஸ் 1 :28
" மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.
இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
அவர் யாக்கோபின் குலத்தின்மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
லூக்காஸ் 1 :30-33
மரியாளோ, "இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்றாள்.
லூக்காஸ் 1 :38
இதுதான் நம் தேவ மாதா கடவுளின் பணியை ஏற்றுக்கொண்ட நேரம்..
மீட்பின் திட்டத்திற்கு இசைவு தெரிவித்த நேரம்.. நற்செய்திப்பணியை ஏற்றுக்கொண்ட நேரம்.. கடவுளின் மீட்புத்திட்டத்திற்காக தன்னை முழுவது கையளித்து ஒப்புக்கொடுத்த நேரம்.. கடவுளின் திட்டத்திற்கு கடவுளோடு ஒத்துழைக்க தன்னையே அர்ப்பணித்த நேரம்…
மாதாவுக்கு அடுத்த வேலையைக் கொடுத்தது யார் ?
திருச் சுதனான மானிட மகனான ‘ இயேசு கிறிஸ்து ‘
“ அம்மா ! இதோ உம் மகன் “
அருளப்பர் 19 : 26
கடவுளின் மீட்புத்திட்டத்தில் இறுதிவரை உழைத்த, உடனிருந்த அதைக் கடவுளோடு இனைந்து செய்த, கடவுளுக்கு 100 சதவீதம் பிரமாணிக்கமாய் இருந்த இந்த தாழ்ச்சி நிறைந்த பரிசுத்த தாய்க்கு சுதனான கடவுள், மரியாயின் மகனான இயேசு சுவாமி அடுத்தும் வேலை கொடுக்கிறார்..
“ அம்மா ! உங்கள் வேலை இன்னும் முடியவில்லை.. கடவுளான என்னையே உம்முடைய திருமகனாகப் பெற்று என்னை வளர்த்து ஆளாக்கி கடவுளின் திட்டப்படி நான் நற்செய்திப் பணி செய்ய உடன் ஒத்துழைத்து, கடவுளின் அதே திட்டப்படி மனுக்குலத்தின் மீட்புக்காக என்னுடைய துன்பக்கிண்ணத்தில் முழுவதுமாக பருகி என்னை என் தெய்வீக நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுத்து மீட்பின் திட்டத்தை வெற்றிகரமாக என்னோடு இருந்து நிறைவேற்றிய உங்களுக்கு நான் தரும் பரிசு”
“ நான் பிறந்ததுமுதல் என்னோடு இருந்து ஜெபத்தாலும், தவத்தாலும், பரிகார வாழ்க்கையாலும் என்னைத் தாங்கி எனக்கு ஆறுதலும், தேறுதலும், உற்சாகமும் கொடுத்து என்னோடு பயனித்த உங்களுக்கு நான் கொடுக்கும் புதிய வேலைதான் இது அம்மா! “
“ கடவுள் குழந்தையான என்னை நீங்கள் கருத்தோடு வளர்த்ததால், உங்கள் தாய்மை என்னை அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியதால் அந்த தாய்மையை நான் வீணாக்க விரும்பவில்லை.. அதோடு அதை முடித்துவிட நான் விரும்பவில்லை”
“ உம்முடைய தாய்மையை நினைத்தால் என் உள்ளம் மகிழ்கிறது; அக்களிக்கிறது; பூரிப்படைகிறது; வியக்கிறது; பெருமை கொள்கிறது; ஏற்கனவே நான் மகிமையோடு இருந்தாலும் அது என்னை மேலும் மகிமையடைய செய்கிறது; சில நேரங்களில் என்னை ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது”
“அந்த தாய்மையை நீங்கள் தொடர நான் ஆசைப்படுகிறேன்.. அது கண்டிப்பாக தொடர வேண்டும். உலகம் முடியும் வரை தொடர வேண்டும். மீட்புத்திட்டம் நிறைவேறியிருந்தாலும் இந்த உலகத்தின் ஒரு கோடி முதல் மறுகோடி வரை எண்ணற்ற ஏராளமான ஆன்மாக்கள் மீட்கப்பட வேண்டும். அதற்கு உங்கள் பணி தேவை.. என்னோடு இணைந்து நீங்கள் செய்தே ஆக வேண்டும்”
“அதற்கு நீங்கள் மீண்டும் இசைவு தெரிவிக்க வேண்டும்.. இசைவு தெரிவிப்பீர்கள்.. நான் சொன்னால் நீங்கள் செய்வீர்கள்.. ஏனென்றால் நீங்கள் என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் உங்களிடம் அந்த பொறுப்பை நானே உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்”
“ அதையும் நீங்கள் முழு ஈடுபாடும், கடவுளுக்கு 100 சதவித பிரமாணிக்கத்தோடும் நீங்கள் செய்வீர்கள்.. அப்படி உங்களை செய்ய வைக்க எனக்கு ஒரு வழி இருக்கிறது”
“கடவுள் என்ற முறையில் உங்களின் பலவீனம் என்ன என்பதையும் நான் அறிவேன். அதை நான் இப்போது பயன்படுத்தப் போகிறேன்.”
“தாய்மையே உங்கள் பலவீனம். தாய்மைக்காக நீங்கள் எதையும் செய்வீர்கள்; எதையும் இழப்பீர்கள்; எல்லாம் செய்வீர்கள்; ஏன் எதுவும் செய்வீர்கள்; என்னை சுமப்பதற்காக கல்லெறிபட்டு வேத சாட்சியாவதற்கும் நீங்கள் தயாராக இருந்தவர்கள்தானே ( திருமணத்திற்கு முன் கருப்பமானல் யூத முறைப்படி கல்லால் எரிந்து கொல்லப்பட வேண்டும்) ஆகையால் உங்களை மீண்டும் தாயாக மாற்றிவிடுகிறேன்.. உலக மக்கள் அனைவருக்கும் இனி நீங்கள்தான் தாய்..
எனக்கும் நீங்கள் நித்தியத்திற்கும் தாய்.. இந்த உலக மக்களுக்கும் இனி நீங்கள் நித்தியத்திற்கும் தாய் "
"நான் உங்களிடம் அடைந்த தாய்மை என்ற மகிழ்ச்சியை இனி உலகமே அடையட்டும்”
" அம்மா ! இதோ உம் மகன் "
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !