குடும்பங்களில் திரு இருதயம்
சில வருடங்களாக, அநேக தேசங்களில் சேசுவின் திருஇருதயப் பக்தி சிறந்த பக்தி முயற்சியொன்று மிக வேகமாகப் பரவி வருகிறது. நமது இந்திய நாடும் அதன் வருகையை மன உற்சாகத்துடனும் மனக் கிளர்ச்சியுடனும் ஏற்றுக்கொள்ளுமென்பதில் ஐயமில்லை
அப்பக்தியின் கருத்தென்ன? நம்முடைய திவ்விய இரட்சகராகிய சேசு கிறீஸ்துநாதர் அர்ச். மர்க்கரீத் மரியம்மாளுக்குத் தரிசனையானபோது, “நம்முடைய திரு இருதயத்தைக் கொண்டு.. அரசாட்சி புரிவதே நமது ஆவல். எந்தெந்த வீடுகளில் நமது திரு இருதயப் படத்தையேனும், சுரூபத்தையென்கிலும் ஸ்தாபித்து சங்கிப்பார்களோ, அந்தந்த வீடுகளில் அபரிமிதமான வரப்பிரசாதத்தைப் பொழிவோம்” என்று உரைத்தார் அல்லவா? அச்சமயம் அவர் விரும்பிய மகிமையை அவருக்கு அடைந்து தருவதற்குக் குடும்பத் தலைவர்கள் தங்கள் குடும்பங்களை சேசுவின் திரு இருதயத்திற்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பது ஓர் உத்தமமாகும்
குடும்பங்கள் செய்ய வேண்டியதென்ன? தங்களுக்குச் சௌகரியமான எந்த நாளையானாலும் குறித்துக்கொள்வதில் தடையில்லை என்றாலும் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையாவது, ஞாயிற்றுக்கிழமையாவது, அதிலும் கூடுமானால் மாதத்தின் முதல் வெள்ளி, மாதத்தின் முதல் ஞாயிறு அல்லது ஒரு திருநாளையாவது தெரிந்துகொண்டு, அத்தினத்தில் குடும்பம் முழுவதும் திவ்விய நன்மை உட்கொள்வது முதல் காரியம்.
அத்தினத்தில் வீட்டில், கூடுமான வரையில் யாவரும் பார்க்கும் வகையில் ஓர் இடத்தில் நேர்த்தியான சிறு பீடம் ஒன்று அமைத்து, அதை ஜோடித்து, அதில் திரு இருதயப் படத்தையோ, சுரூபத்தையோ ஸ்தாபிப்பதே சிறந்தது. மேலும் உறவினர், நண்பர்கள் வரவழைத்து, அரசருக்கு முடிசூட்டும் நிகழ்ச்சி போன்ற இந்தத் திருநாளை ஏன் சிறப்பிக்க லாகாது
இந்தப் பக்தியின் ஆரம்ப சரித்திரமும், இது பரவிய விதமும் சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளில் கூறலாம் 1907-ம் ஆண்டில் உரோமை மாநகரிலேயே தயாரித்த, குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம் விவ்ஸ் ஈதூத்தோ என்னும் கர்தினால் ஆண்டகையின் அங்கீகாரத்தை பெற்றது. அதைப் பெற்று சில மாதங்கள் ஆகுமுன்னரே வால்பரைஸோ, சிலி என்னுமிடங்களில் இக்காணிக்கைச் செயல் நடந்தேறத் தொடங்கியது. இதர மாகாணங்களில் இது பரவக் கால தாமதமாகவில்லை. உருகுவே, பிரேசில், ஈக்குவேடார், அர்ஜெண் டினா, கொலம்பியா, தி ஆண்ட்டில்ஸ், பொலீவியா, பெரு, ஐக்கிய நாடுகள் ஆகிய எங்கும் துலங்கலாயிற்று
தொடரும்...