தேவமாதா யார்? பகுதி-46 : உலகம் முழுவதும் இருள் ஆட்சி புரிந்த நேரத்தில் ஒளிர்ந்த ஒரே தீபச்சுடர் தேவமாதா!

இயேசு “ எல்லாம் நிறைவேறிற்று “ என்றார்.

அருளப்பர் 19 : 30

மாதாவுக்கு இயேசு சுவாமி அந்தப் பொறுப்பை ஏன் சிலுவையில் வைத்து கொடுத்தார்..?

ஒரு தொடர்ச்சி தேவைப்பட்டது என்று பார்த்தோம்..

இயேசு சுவாமி மண்ணுலக வாழ்க்கையின் முடிவில் இருந்தார்..

புனித வெள்ளியின் மதியம் முதல் உயிர்ப்பு நாள் வரை ஆண்டவர் மானிட மகனான இயேசு சுவாமி மறைவில் இருக்கப்போகிறார்..

33 ஆண்டுகள் மண்ணுலகில் வாழ்ந்த இயேசு சுவாமி இப்போது இல்லை. உன்னத கடவுளின் மகன், மெசியா, இராஜாவான  இயேசு நேற்றுவரை அவர்களோடு வாழ்ந்தார் இப்போது கல்லறையில் அடக்கப்பட்டு இருக்கிறார்..

ஆண்டருடைய பாடுகளின் நேரங்களையும் அந்த நாட்களையும் பற்றி இயேசு சுவாமி குறிப்பிடும்போது (பெரிய வியாழன் இரவில்),

“ இது இருள் ஆட்சி புரியும் நேரம் “ (லூக்காஸ் 22 :52) என்று குறிப்பிட்டார்..

இருள் ஆட்சி புரிந்த நேரத்தில் நடந்தது என்ன?

1. ஆண்டவர் உருக்கமாக ஜெபித்தபோது அப்போஸ்தலர்கள் தூங்கினார்கள்.

2. ஆண்டவர் கைது செய்யப்பட்டபோது அவரை தனியே விட்டுவிட்டு ஒடினார்கள்.

3. உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னவர் ஆண்டவரை மறுதலிக்கிறார் ; சபிக்கிறார் ; அவரைத் தெரியாது என்று ஆணையிடுகிறார்.

4. ஆண்டவரோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த யூதாஸ் ஆண்டவரைக் காட்டிக் கொடுக்கிறான்.

5. அவனை மனம் திரும்ப பிசாசு விடவில்லை. தூக்குப் போட்டு சாகிறான்..

6. அருளப்பரைத் தவிர மற்ற சீடர்கள் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்.

7. ஆண்டவரை வாழ்த்திப்போற்றி வரவேற்று “ தாவீதின் மகனுக்கு ஓசானா” என்று கூறிய மக்கள் கூட்டம் “ ஒழிக ! ஒழிக ! இவனை சிலுவையில் அறையும் “ என்கிறது..

8. ஆண்டவரிடம் அதிசயங்களையும், அற்புதங்களையும் கண்ட, ஆண்டவரிடம் நன்றாக வயிரார உண்ட கூட்டம் ஆண்டவரின் மரணத்தை ஏளனமாக பார்த்து ரசிக்கிறது..

9. ஆண்டவரிடம் எத்தனையோ உடல் சுகங்களைப் பெற்றதில் பலர் வேடிக்கைப் பார்க்கும் மக்கள் கூட்டத்தில் இருக்கிறார்கள் நன்றி கெட்டவர்களாக..

10. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நம்மை மீட்க வந்த மீட்பரை..கடவுளை நாம் சாகடித்துக் கொண்டிருக்கிறோம், காட்டிக் கொடுக்கிறோம், மறுதலிக்கிறோம், அவரை விட்டு ஓடிப் போகிறோம் என்ற உணர்வு இல்லாமல் எங்கும் நன்றிக் கெட்டத்தன்மையும், அநீதியும், துரோகமும், துர்க்குணங்களும், பாவமும், அசுத்தமும் மேலோங்கி நின்றது..

அங்கே ஒரு வெற்றிடம் காணப்பட்டது.. அந்த வெற்றிடத்தை அப்படியே விட்டுவிட்டால் இன்று இரவிலிருந்து ஆண்டவரின் உயிர்ப்பு நாள்வரை இன்னும் ஏராளனமான ஆன்மாக்கள் நரகத்தில் விழும் அபாயம் இருந்தது..

ஆண்டவர் ஏற்கனவே, திருச்சபையை ஏற்படுத்திவிட்டார், திருப்பலியை ஏற்படுத்திவிட்டார், கிறிஸ்தவத்தை ஏற்படுத்திவிட்டார்.. இனிமேல்தான் வேலையே இருக்கிறது.. உலகெங்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்..கிறிஸ்தவம் தழைக்க வேண்டும்..

அதை அப்படியே காப்பாற்ற வேண்டும் வலுவிலந்த அப்போஸ்தலர்களை ஒன்றினைக்க வேண்டும், அவர்களை திடப்படுத்த வேண்டும், பெரிய பாவம் செய்து, அழுது புலம்பி ஓடி ஒளிந்திருக்கும் முதல் போப் ஆண்டவரான, திருச்சபையில் தலைவரானா இராயப்பரை அழைத்து ஆறுதல் சொல்லி திடப்படுத்த வேண்டும்..

இத்தனையையும் யார் செய்ய வேண்டும்..?  யார் செய்தார்கள்?

நம் தேவமாதாதான்..

உலகம் முழுவதும் இருள் ஆட்சி புரிந்த நேரத்தில் ஒளிர்ந்த ஒரே தீபச்சுடர்.. ஒளிச்சுடர் யார்? தேவமாதாதான்..

அந்த ஒரு தீபச்சுடரும் அனைந்திருந்தால் உலகம் என்னவாகியிருக்கும்? உலகம் முழுவதும் இருளாயிருந்திருக்கும்.. இருளின் தலைவனான பிசாசு வென்றிருக்கும்..

ஆனால் என்றுமே அனையாது அந்த தீப சுடர்.. அந்த இருளால்.. அலகையால் எல்லாரையும் வென்றுவிட முடியும்.. ஆனால் தேவ மாதாவை அசைக்கக் கூட அதனால் முடியாது..

கிட்டத்தட்ட எல்லாரையுமே அசைத்துவிட்டது (கொஞ்சமாவது) பிசாசு. ஆண்டவருடைய சீடர்கள், புனித மகதலா மரியாள், புனித சலோமி, மற்ற மரியாள்கள், சூசன்னா, நிக்கோதேமு , சூசை இன்னும் ஆண்டவருக்கு நெருக்கமாக இருந்த கூட்டம்..

உலகமே இருளாயிருந்தபோது.. மாதா என்ற ஒரே ஒரு தெய்வீக தீபச்சுடர் மட்டும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது.. 

அந்த ஒளியில் இந்த உலகம் அந்த காரிருளுக்கு மத்தியிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது..

எங்கள் விசுவாச ஒளியே! எங்கள் மதுரமே! எங்கள் தஞ்சமே நீ வாழ்க !

இந்த  நாம் நன்றியை மறக்கலாமா?

“இது எங்கனமாகும்? நானோ கனவனை அறியேனே? “சொல்லிய தேவமாதா, அதற்குப் பின் கபரியேல் தூதரின் விளக்கத்திற்குப் பின்,

“இதோ ஆண்டவருடைய அடிமை; உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக் கடவது” என்று மாதா சம்மதம் சொல்லாமல் இருந்திருந்தால்..

என்னவாகியிருக்கும்?

மீட்பர் எப்போது தோன்றியிருப்பார்…? எத்தனை கோடி ஆன்மாக்கள் நரகம் போயிருக்கும்? அதுவரை இந்த உலகம் கடவுளின் கோபத்திற்கு தப்பியிருக்குமா?

இந்த உலகத்திற்கும், நமக்கும் மாதா செய்த மிகப்பெரி உதவியை மறக்கலாமா?

மோட்சம் என்ற கடவுளின் இல்லத்திற்கு நம்மை சீக்கிரம் திரும்ப வைத்த மீட்புத்திட்டத்தை முன் நின்று நடத்திய நம் மாமரித்தாயின் உதவியை மனுக்குலம் மறக்கலாமா?

தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம்  நன்றி இல்லாதவர்களாக இந்த தெய்வீக தாயை ஒதுக்குவதும், புறக்கனிப்பதும், அவர்களுக்கு தகுதியான செயலா?

இருள் ஆட்சி புரிந்த நேரத்தில் ஒளியாய் இருந்து அவர் திருமகனின் திரு இரத்தைத்தையும், அவரின் பாடுகளையும் ஒப்புக்கொடுத்து உலகம் இருளுக்குள் சென்றுவிடாமல் ஜெப தவ ஒறுத்தல்களால் நம்மைக் காப்பாற்றி தேவ மாதாவுக்கு நாம் எத்தகைய நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

“அம்மா! ஒரு வெற்றிடம், ஒரு வெறுமையாந நேரம் வரப்போகிறதம்மா.. அந்த வெற்றிடத்தை நீங்கள்தான் நிரப்ப வேண்டும்.. நீங்கள்தான் தாங்க வேண்டும் இந்த உலகம் அழிந்துவிடாமல் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்..

நான் வரும் வரை உயிர்க்கும்வரை கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் அம்மா! என்னுடைய சீடர்களை கவனித்துக்கொள்ளுங்கள் அம்மா! உங்கள் வேலை முடியவில்லை.. இரண்டாவது வேலையை உடனடியாக நீங்கள் ஆரம்பிக்க வேண்டும்..

உங்கள் அளவில்லாத வியாகுலத்தில் சோர்ந்துபோய் விடாதீர்கள் அம்மா! நான் உங்களோடு இருக்கிறேன்.. அதை ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா!..”

இதுதான் ஆண்டவர் சிலுவையில் இருக்கும்போது மாதாவுக்கு உடனடியாக அடுத்த வேலை கொடுக்க காரணம்.. மீட்பின் திட்டத்தின் தொடர்ச்சியாக அது இருக்க வேண்டும்..தொடர வேண்டும்.. இது கடவுளின் விருப்பம்..

இங்கேயும் மாதா கடவுளுக்குத் தேவைப்பட்டார்கள்..

இதை இயேசு சுவாமி அறிந்ததால் அவர் வாயிலிருந்து வந்தது..

“அம்மா ! இதோ உம் மகன் “

தொடர்ந்து வந்தது..

“எல்லாம் நிறைவேறிற்று “ என்ற வார்த்தையும் வந்தது…

தொடர்ச்சி கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

“ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி!

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக!

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க!