சேசுவின் திருஇருதய வணக்கமும், திவ்விய நற்கருணையும்
சேசுவின் திரு இருதயத்திற்கு அக்களிப்பும், நமது ஆத்துமத்துக்கு மிகுந்த பலனும் தருவதற்கு சேசுவின் திருச் சரீரமும், திரு இரத்தமும் ஆகிய தேவ நற்கருணையை அடிக்கடி உட்கொள்வதைப்போல் உத்தமமானது வேறொன்றுமில்லை
சேசுவின் திரு இருதய வணக்கமும், திவ்விய சற்பிரசாத நாதரின்மீதுள்ள பக்தியும் உண்மையிலேயே ஒரே வணக்கம். திவ்விய நற்கருணை பக்தியில், அப்பத்தின் குணங்களுக்குள் மறைந் திருக்கும் சேசுவின் திருச் சரீரமே நம் ஆராதனைவணக்கத்தின் பொருளாகும்
நம்மேல் வைத்த சிநேகப் பெருக்கத்தால் நமது மத்தியில் வந்தது நமது ஆன்ம உணவாகவும் இரட்சணியமாகவும் இருக்கக் கிருபை புரிந்த நமது இரட்சகரை, இப் பக்தியில் நாம் வணங்கி, ஆராதிக்கிறோம்
சேசுவின் திரு இருதய பக்தியிலோ வெனில், இவ்வினிய இரட்சகரின் திரு இருதயத்தையும், அத்திரு இருதயத்தில் அவரது தெய்வீக நேசத்தையும் வணங்குகிறோம். ஆனால் திவ்விய நற்கருணையில் அநேக மனிதர்கள் நம் திவ்விய இரட்சகரை நன்றியறிதலின்றி, சிநேகமின்றி உட்கொள்கிறார்கள். இந்த துரோகத்திற்கும் அவமரியாதைக்கும் பரிகாரமாக சில நல்ல ஆன்மாக்கள் திவ்விய சற்பிரசாத நாதரை அன்புடன் அண்டி, திவ்விய நற்கருணை வழியாய் அவருடன் ஒன்றித்து சிநேகத்துக்குச் சிநேகம் காண்பிக்கின்றனர்
மேலும் திவ்விய நற்கருணைக்கு விரோதமான தப்பறையால் திருச்சபை தாக்கப்பட்ட சமயத்தில்தான், திரு இருதய பக்தியை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தலானார். இத்தப்பறையைப் பரப்பிய ஜான்ஸெனியுஸ் என்பவனை முன்னிட்டு, அது ஜான்ஸெனிஸம் என்று அழைக்கப்பட்டது.
இந்தப் பதிதர்கள் ஆத்துமங்களைச் சதி மோசம் செய்வதற்காக, இத்தேவதிரவிய அநுமானத்தை வெகுவாய் மதிப்பதாகப் பாசாங்கு செய்து, உண்மையில் அதைத் தாக்கினார்கள். அவர்களில் சிலர் தேவநற்கருணையில் சேசுநாதர் மெய்யாகவே வீற்றிருப்பதைப்பற்றிச் சில பாடல்கள் கூட இயற்றினார்கள்.
ஆனால் தந்திரத்தாலும், பேய்க்குரிய கபட வஞ்சகத்தாலும் கிறீஸ்தவர்களை அடிக்கடி நன்மை வாங்காதபடி செய்தார்கள். அவர்கள் இடைவிடாது சர்வேசுரனுடைய மாட்சிமையையும், பரிசுத்த தனத்தையும், மனிதனது நீசத்தனத்தையும் விசுவாசிகள் செவியில் புகட்டினர். மேலும் இந்த மோசக்காரர்கள், திவ்விய நற்கருணையின் பலனாயுள்ள பரிசுத்த தனத்தையும், சிநேகத்தையும், அதற்கு இன்றியமையாத ஆயத்தத்தை வேண்டுமென வற்புறுத்தினார்கள்
சேசுநாதரோ, நம் ஆத்துமத்தின் ஜீவியமாகவும், அனுதின போசன மாகவும் நமது இருதயத்தைத் தூய்மைப்படுத்தவும் அதைத் தமது வரப்பிரசாதங்களால் நிரப்பி, அதோடு தம்மை ஒன்றித்துத் தமது சிநேக அக்கினியை அதில் வெளிப் படுத்தவும் தேவநற்கருணையை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆனால், இந்த ஜான்ஸெனிஸ்தியப் பதிதர்கள், சிநேகத்தின் தேவதிரவிய அநுமானமாகிய திவ்விய நற்கருணையை மரியாதை, தனிவாசம் அச்சம் முதலியவைகளின் தேவதிரவிய அநுமானமாக மாற்ற முயன்றார்கள். திவ்விய சற்பிரசாதநாதரைச் சுற்றிலும் பாழும் தன்மையும் வெறுமையும் குடிகொண்டிருக்கச் செய்து, மனித சுபாவத்திற்கு முற்றிலும் இயலாத நிபந்தனைகளை ஏற்படுத்தி, சிறிது சிறிதாக விசுவாசிகள் திவ்விய நன்மை வாங்குவதை முழுவதும் நிறுத்தும்படி செய்துவிட்டனர்
தொடரும்...