படிப்படியாக ஆத்துமங்களிடம் தேவசிநேகம் குறைந்து, வேத காரியங்களில் அசட்டைத்தனம் அதிகரித்து வந்தது. தேவ சிநேகம் அக்கினி அணைந்து குளிர்ந்து போன இருதயங்கள் அந்த அக்னியை திரும்பவும் மூட்ட தேவசிநேகத்தோடு உறவாகி ஒன்றிப்பது அவசியமாயிருந்தது. இந்த நிலையில் மனிதர்கள் இருந்த சமயத்தில்தான் அவர்களுடைய இருதயங்களில் தேவ சிநேக அக்கினியை மூட்டி சேசுநாதர் உலகத்திற்கு தமது திரு இருதயத்தை வெளிப்படுத்தினார்.
திரு இருதய வணக்கமானது, இயல்பாகவே ஆத்துமங்களை நேசத்தின் தேவதிரவிய அநுமானத்திற்கு அழைத்துச் செல்கின்றது. இந்த வணக்கம் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் சகல இடங்களிலும், முற்காலத்தில் அபூர்வமாய் நன்மை வாங்கிக்கொண்டு வந்த விசுவாசிகள், மாதந்தோறும், வாரந் தோறும், நாள்தோறும்கூட சற்பிரசாதப் பந்தியில் அமர்வதைக் காண்கிறோம். அநேக பங்குகளில் ஜனங்கள் மாதத்தின் தலை வெள்ளிக்கிழமையையும், வருடாந்தரத் திருநாட்களில் ஒன்றாக்கி, சாதாரணமாக அத்தினத்தில் நன்மை வாங்குவதை சில குருக்கள் மனங்குளிரக் கண்டு மகிழ்கிறார்கள்
சேசுவின் திரு இருதய பக்திக்கும், திவ்விய சற்பிரசாத ஆராதனை வணக்கத்துக்குமுரிய நெருங்கிய உறவை இன்னும் முழுவதும் கண்டுணருமாறு அர்ச் மர்க்கரீத் மரியம்மாள் சற்பிரசாதநாதருக்குமுன் ஆராதனை செய்துகொண்டிருக்கும் போது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட மூன்று பிரதான விஷயங்களை நாம் கவனிக்கக் கடவோம்.
திவ்விய நற்கருணை திருநாளின் எட்டாம் நாளாகிய ஒரு நாளன்று சேசுநாதர் அவர்களுக்குத் தோன்றி, “மனிதர்கள் எவ்வளவோ அதிகமாக நேசித்த இருதயத்தை இதோ பார்! கீழ்ப்படிதல் உனக்கு எத்தனை முறை அனுமதியளிக்குமோ, அத்தனை முறையும் திவ்விய நன்மை வாங்கு” என்று சொல்லி, அவள் அடிக்கடி நன்மை வாங்கத் தூண்டினார். இதெல்லாவற்றிற்கும் மேலாய் முதல் வெள்ளி அன்று திவ்விய நன்மை வாங்குவதையும் வியாழக்கிழமை இரவில் ஒரு மணி நேரம் ஆராதனையையும் திரு இருதயத் திருநாளைக் கொண்டாடுவதையும், அதில் பரிகார நன்மை வாங்குவதையும் அவளிடம் கேட்டார்
ஆகையால் அர்ச். பத்தாம் பத்திநாதருடைய மகா உருக்கமான சில புத்திமதிகளுக்கு ஒத்தவாறு, சேசுவின் திரு இருதய நண்பர்கள் யாவரும் அடிக்கடியும், தினந்தோறும் கூட நன்மை வாங்கி, தங்கள் ஆத்துமங்களில் சற்பிரசாதநாதரையும் அவரது அன்பின் அணைகடந்த திரவியங்களையும் அடைய ஆவல் கொள்வார்கள்.
சேசுவின் திரு இருதயத்தோடு ஏற்பட்ட இப்பரம ஒன்றிப்பே நமது ஆத்துமத்தை அதன் சகல அசுத்தங் களினின்றும் தூய்மையாக்கி, அனுதின அற்பப் பாவங்களைக் கழுவியகற்றும். அதுவே நம்மை இவ்வுலகின் நிலையற்ற பொருட்களிடமிருந்து பிரித்து, பேரின்ப நாடாகிய பரலோகத்தை நோக்கி வழிநடத்தும்;
அதுவே நமது ஆத்துமத்தில் சகல புண்ணியங்களும் செழித்து வளர்ந்தோங்கி மலரச் செய்யும், அதுவே நம்மைப் பக்திமான்களாகவும், கன்னிமையுள்ளவர்களாகவும், அயலார்மேல் நேசமுடையோராகவும் ஆக்கும்.
நமது இருதயத்தில் சேசுவின் திரு இருதயத்தின் உணர்ச்சிகளையும், ஜீவியத்தையும் ஊன்றச் செய்வது அதுவே. கடைசியாக நம் ஆத்துமத்திற்கு விடாமுயற்சியின் வெற்றி முடியையும் இரட்சணியத்தையும் அடைந்து கொடுப்பதும் அதுவே
தொடரும்...