“ உறுதியாக உனக்குச் சொல்கிறேன்; இன்றிரவே கோழி கூவுமுன் என்னை மும்முறை மறுதலிப்பாய் “
மத்தேயு 26 : 34
கல்வாரியிலும், கல்வாரிக்குப் பிந்தைய இரவிலும் மாதாவால் காப்பாற்றப்பட்டவர்களில் முக்கியமான இருவர்.
ஒருவர் நல்ல கள்ளன்..
இன்னொருவர் நம் இராயப்பர்..
நல்ல கள்ளன் – கெட்ட கள்ளனில் இரண்டாமவன் மனம் திரும்பவே விரும்பவில்லை சாகும் வரை கடவுளைப் பழித்துக்கொண்டிருந்தான்.. செத்தான் மீண்டும் செத்தான்.. இரண்டாவது சாவான நரகத்தில்..
நல்ல கள்ளன் கடவுளை கண்டுபிடித்தான்.. மாதாவின் பரிந்துரையை நாடினான் பிழத்துக்கொண்டான்..
புனித இராயப்பர்- யூதாஸ்
இருவருமே பாவம் செய்தார்கள்..
இராயப்பர் ஆண்டவரை மறுதலித்தார்; சபித்தார்; தெரியாது என்று ஆணையிட்டார்..
யூதாஸ் ஆண்டவரை காட்டிக்கொடுத்தான்..
இதில் இராயப்பர் அடுத்த நொடியிலேயே மனம் திரும்பி அழ ஆரம்பித்துவிட்டார்.. அழுது அழுது கன்னங்களில் கோடு விழும் அளவிற்கு அழுதார்.. மனஸ்தாபப்பட்டார்.. மன்னிப்பு கேட்டார்…மனம் திரும்பினார்..
யூதாஸ் தான் செய்தது தப்பு என்று உணர்ந்தான்.. “ மாசற்ற இரத்தத்தை காட்டிக் கொடுத்துவிட்டேனே “ என்றார்.. ஆனால் மனம் திரும்பவில்லை.. மன்னிப்பு கேட்கவில்லை.. கேட்டிருந்தால் அவரும் இன்று புனிதரே அதுவும் பெரிய புனிதராக இருந்திருப்பார்..
இந்த நால்வரில் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம்..
கெட்ட கள்ளன் – யூதாஸ்
எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்..
நல்ல கள்ளன் – புனித இராயப்பர்..
இவர்கள் நான்கு பேர் வாழ்க்கையும் நமக்கு பாடம் சொல்லித்தருகிறது.. இந்த பாடத்தை நாம் எந்த சூழ்நிலையிலும் நாம் மறந்துவிடக் கூடாது..
நாம் முன்பு ஒரு பகுதியில் இருள் ஆட்சி புரிந்த சமயத்தில் எரிந்த ஒரே ஒளிச்சுடர் தேவ மாதா என்று பார்த்தோம்.. அந்த ஒளிச்சுடரில் காப்பாற்றப்பட்டவர்களில் இந்த இருவர் முக்கியமானவர்கள்.. குறிப்பிடப்பட்டவர்கள்..
இந்த இடத்தில் மாதாவின் இரக்கம் எந்த அளவு பெரியது என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்…
அவரின் இரக்கம், அன்பு மற்றும் பரிசுத்த எண்ணம், சிந்தனை கடலைவிட ஆகாயத்தைவிட பெரிது..
பெரிய வெள்ளி அன்று ஆண்டவரை அடக்கம் செய்த பின்பு மாதா அவ்வளவு வேதனை வியாகுலங்களுக்கு மத்தியிலும் அவர் ஆண்டவருடைய சீடர்களைக் குறித்து கவலைப்பட்டார்.. அவரைத் அருளப்பரை அழைத்து தேட சொன்னார் அழைத்துவரச் சொன்னார்..
அவரும் தேடிச் சென்றார்..
ஒருவன் மட்டும் மாதாவைத் தேடி வந்தான் அவன்தான் யூதாஸ்..
மாதா அவனையும் மன்னித்து “ மகனே ! “ என்று அழைத்தார்கள். ஓட முயற்சி செய்தவனை கையைப் பற்றி இழுக்க முயற்சி செய்தார்கள்.. ஆனால் அவன் மாதாவின் கரங்களை, கருணையை, அன்பை, இரக்கத்தை உதறித்தள்ளிவிட்டு போனான். நாண்டு கொண்டான்..
மேலே உள்ள இந்த தகவல்கள் கடவுள்-மனிதனின் காவியத்தில் இருக்கிறது..
கடவுள்- மனிதனின் காவியத்தை திருச்சபை அங்கிகரித்துள்ளது..
பாரம்பரியமாக வந்த செய்திகளையும், திருச்சபை அங்கீகரித்த புத்தகங்களையும், மாதாவின் காட்சிகளையும் ஒதுக்கிவிட முடியாது..
மற்றவர்களைப் போல ‘பைளிளில் இருக்கிறதா?‘ என்று கேட்டுக்கொண்டே இருக்க முடியாது..
பைபிளில் எழுதினவர்கள் இறந்த பின் நடந்த செய்திகளை அவர்களால் எப்படி எழுத முடியும்..?
உதாரணம் புனித இராயப்பர், சின்னப்பர், மத்தேயு, சின்ன யாகப்பர்.. மேலும் மாற்கு, லூக்காஸ் இன்னும் பலர்..
சரி மாதாதான் சீடர்களை ஒன்றினைத்தார்கள் என்பதற்கு பைபிளில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? இருக்கிறது..
“ இவர்கள் எல்லாரும் பெண்களோடும், இயேசுவின் தாய் மரியாளோடும், அவர் சகோதரரோடும் ஒரே மனதாய்ச் செபத்தில் ஈடுபட்டிருந்தார்கள் “
அப்போஸ்தலர் பணி 1 : 14
ஆண்டவர் இல்லாத இடத்தில் சீடர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் என்று ஆலோசனை யாரைக் கேட்பார்கள்.. கடவுளின் தாயாரைத்தானே கேட்பார்கள்..
மாதாவின் வழி நடத்துதலில் ஜெபத்தில் நடந்ததுதான் பரிசுத்த ஆவியானவரின் இரண்டாவது வருகையான பெந்தகோஸ்தே திருவிழா அனுபவம்.. சம்பவம்.. அருட்கொடைகள்..
புனித இராயப்பரின் மீது கட்டப்பட்ட திருச்சபை உதயமானது அன்றுதான்..
அதாவது ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபை உதயமான நாள் அன்றுதான்..
ஆக கத்தோலிக்க திருச்சபையையும், மாதாவையும் பிரித்துப் பார்க்க முடியாது..
அதுபோல மாதாவின் பணியும் எப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்..
அது எப்போதுமே தொடக்கமும், தொடர்ச்சியை மட்டுமே கொண்டது.. முடிவில்லாதது..
நாம் ஏற்கனவே முதல் பகுதியில் புனித சின்னப்பர் மெசினா நகர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க அந்த நகர மக்களை மாதாவுக்கு ஒப்புக்கொடுத்ததையும், ஒருவரை அனுப்பி மாதாவை நேரடியாக சந்திக்க செய்து கடிதம் வாங்கி வர செய்ததையும் பார்த்தோம். மாதாவின் தன் கைப்பட எழுதிய கடிதத்தையும் பார்த்தோம்.. வாசித்தோம்..
பைபிளில் 14 திருமுகங்களை எழுதிய புனித சின்னப்பரும் (பவுல்) மாதாவின் உதவியை நாடியது மாதா நம் கத்தோலிக்கத் திருச்சபைக்கும், நமக்கும் எந்த அளவுக்குத் தேவை என்பது எத்தகைய உண்மை.
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி!
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக!
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!