சில கிறிஸ்தவர்கள்“சேசுநாதர் திவ்விய நற்கருணையில் தம் ஆத்தும சரீரத்தோடு இருக்கையில், அவர் தமது அநித்திய ஜீவியத்தில் மனிதர்களின் கண்ணுக்குத் தம்மைக் காண்பித்தது போல், இப்போதும் ஏன் தம்மைக் காண்பிப்பதில்லை?” என்று ஒரு வேளை கேட்கலாம். இதற்கு இரு முக்கியக் காரணங்கள் உண்டு
1.சேசு நாதர் தமது மனுஷீகத்தையும், தெய்வீகத்தையும் நம்மிடமிருந்து மறைத்து வைப்பதனால், நமது விசுவாசத்தைப் பரீட்சித்து, தேவ வார்த்தையை விசுவசிப்பதால் உண்டாகும் பேறுபலன்களை நமக்களிக்கச் சித்தமானார். அப்போஸ்தலராகிய அர்ச். தோமையாரை நோக்கிக் கூறியது போலவே நம்மையும் பார்த்து, “காணாமல் விசுவசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்று சொல்லுகிறார். நமது கண்களால் சேசு நாதரைப் பார்ப்போமாகில், அவர் தேவநற்கருணையில் இருக் கிறார் என்று நம்புவதனால் யாதொரு பேறுபலனும் இராது
2. திவ்விய நன்மையினால் சேசுநாதர் நம் ஆத்துமத்திற்குப் போஜனமாயிருக்க விரும்புகிறார்! அவ்வாறிருக்க அவர் தமது மனித வடிவோடு இருப்பாராகில், அவரை உட்கொள்ள யார் துணிவார்கள், யாரால் கூடும்? அதற்கு மாறாய் ஒரு சிறு ஓஸ்தியின் மூலம் அவரை உட்கொள்வதே எளிதானது
வேறு சில கிறீஸ்தவர்கள் ஏன் சேசுநாதர் தீயவர்களால் நிந்திக்கப்படுகையில் திவ்விய நற்கருணையில் மௌனமாய் இருக்கிறார் என்றும், தம்மை நிந்திப்போரைத் தண்டித்து, ஏன் அவர் ஒரு புதுமையால் அவர்களுக்குத் தம்முடைய வல்லமை யைக் காண்பிப்பதில்லை என்றும் கேட்பார்கள்
தீயவர்கள் புதுமைக்குத் தகுதியுள்ளவர்களா? சேசு நாதர் வழக்கமாய்த் தம்மைக் காண்பிப்பது நல்லவர்களுக்கேயன்றி, தீயவர்களுக்கு அல்ல. அவர் பிலாத்துவுக்கும், ஏரோதுக்கும் முன்பாக அவமானமாய்த் தூஷணிக்கப்பட்ட பொழுது, ஏதாகிலும் ஒரு பெரிய புதுமை செய்து தமது வல்லமையைக் காட்டி யிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
நமதாண்டவர் புதுமை செய்வதைக் காண இவ்விரு நீச அதிகாரிகளும் தகுதியுள்ளவர்களா யிருக்கவில்லை "ஆனால் சேசுநாதர் மௌளனமாய் இருந்தார்” என்று சுவிசேஷகர்கள் சொல்லுகிறார்கள். கல்வாரி மலைமீது யூதர்கள் அவரை சிலுவையிலிருந்து இறங்கிவரச் சொன்னார்கள் சேசுநாதரோ அவர்களுக்காக தமது பிதாவிடம் பரிந்து பேசினாரேயொழிய, சிலுவையினின்று இறங்கவில்லை. வேறு அநேகப் பெரிய புதுமைகளைப் பார்த்தும் கல்நெஞ்சராய் இருந்ததுபோலவே, அந்த யூதர்கள் இப்போதைக்கு பின்னும் உணர்வற்றிருந்திருப்பார்கள்.
சேசுநாதர் அவர்களுடைய தூஷணங்களை மௌனத்துடன் சகித்துக்கொண்டார்.
தொடரும்...