சேசுநாதர் திவ்விய நற்கருணையிலும் மௌனமாயிருக்கிறார். தம்மை நிந்திக்கும் துரோகிகள் மனந் திரும்புமாறு அவர்களுக்கு நேரம் கொடுக்கிறார். பொறுமையா யிருக்கிறார். ஏனெனில் அவர் நித்திய காலமும் உள்ளவர் அவருடைய விரோதிகளோ அவரிடமிருந்து தப்பிப் போக முடியாது.
சில சமயங்களில் அவர் தமது அளவற்ற வல்லமையை உபயோகித்துத் தமது பகைவரை இவ்வுலகிலேயே தண்டித்தால் இது நல்ல கிறீஸ்தவர்களது உள்ளத்தில் விசுவாசத்தை ஸ்திரப்படுத்துவதற்காகச் செய்யும் அபூர்வமான புதுமையே சேசுநாதர் திவ்விய நற்கருணையில் வீற்றிருப்பது முக்கியமாய் நமது ஆத்துமத்தைத் தமது சரீரத்தாலும் இரத்தத்தாலும் போஷிப்பதற்காகவே என்று மேலே கூறியிருக்கிறோம்.
சிலர் சேசு நாதர் தமது திருச் சரீரத்தையும், திரு இரத்தத்தையும் உட்கொள்ள வேண்டும் எனக் கட்டளை இட்டிருக்கிறார்; அவ்வாறிருக்க, திருச்சபையானது அப்பத்தின் குணங்களுக்குள் மாத்திரம் திவ்விய நன்மை கொடுத்து கிறீஸ்தவர்களுக்குப் பாத்திரத்தை (சேசுநாதரின் திரு இரத்தத்தை) ஏன் கொடுப்பதில்லை” என்று கேட்கலாம்
இதற்கு மறுமொழி மிகவும் எளிது. விசுவாசிகள் இரு விதமாகவும் நன்மை வாங்க வேண்டுமென நமது ஆண்டவர் ஒருக்காலும் கட்டளையிட்டதில்லை. அசனசாலையில் அவர் பாத்திரத்தைக் கொடுத்து, “இதை வாங்கிப் பருகுங்கள்” என்று சொன்னது அங்கில்லாத ஜனங்களுக்கல்ல, ஆனால் அங்கிருந்த அப்போஸ்தலர்களுக்கும், அவர்களுக்குப் பின்வரும் குருக் களுக்குமே சொன்னார்.
குருக்கள் சாதாரண விசுவாசிகளைப் போல் நன்மை மாத்திரம் வாங்குவதில்லை. பூசைப் பலியையும் ஒப்புக்கொடுக்கிறார்கள். ஆதலால் சேசுநாதர் சிலுவையின் மீது நிறைவேற்றிய இரத்தப் பலியை அதிக நன்றாய் ஞாபகப் படுத்தும்படி பூசைப் பலியின் இந்த இரண்டு குணங்களும் இருப்பது அவசியம்
இது தவிர கிறீஸ்தவர்கள் திவ்விய ஓஸ்தியை உட் கொள்ளும்போது, சேசுநாதருடைய சரீரத்தை உண்டு, இரத்தத்தையும் பானம் செய்கிறார்கள். ஏனெனில் நமது ஆண்டவர் சரீரம் உயிர்த்தெழுந்த ஜீவிய சரீரம். ஜீவிய சரீரம் இரத்தமின்றி இருக்க முடியுமோ?
ஆகையால் கிறீஸ்தவர்கள் திவ்விய ஓஸ்தியில் சேசுநாதரை முழுவதும், அவரது சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும் வாங்குகிறார்கள் ஒரேவித குணங்களில் நன்மை வாங்குவதைவிட இருவித குணங்களிலும் நன்மை வாங்குவதில் யாதொரு சிறப்பும் கிடையாது.
தொடரும்...