சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 53

இதனின்று நாம் அறிவது யாதெனில், திருச்சபையானது எது ஏற்றதென்று பார்த்து, இருவித குணங்களிலுமோ, அல்லது ஒரே வித குணங்களிலோ நன்மை வாங்க வேண்டுமெனத் தீர்மானிக்கக் கூடும். 

திருச்சபையின் ஆதிக்காலங்களில், இருவித குணங்களிலும் நன்மை வாங்க உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது ஆனால் அப்பத்தின் குணங்களுக்குள் மாத்திரம் நன்மை வாங்கவும் உத்தரவிருந்தது. வேதகலாபனை காலத்தில் குறித்தவர்கள் தங்களோடு வீட்டுக்குச் சில வசீகரம் செய்யப்பட்ட ஆஸ்திகளை கொண்டுபோய், கஷ்ட காலங்களில் தாங்களே திவ்விய நன்மை உட்கொள்ளும் பாக்கியம் பெற்றிருந்தனர் வேதசாட்சிகளின் காவற்கூடங்களுக்கும் குருக்கள் இரகசியமாய் வசீகரிக்கப்பட்ட திவ்விய ஓஸ்திகளை அனுப்புவார்கள் 

பிற்காலங்களில் திருச்சபையானது சில இடையூறுகளாலும், திரு இரத்தத்தை விசுவாசிகளுக்கு கொடுப்பதினால் உண்டாகும் சில பெரும் ஆபத்துக்களாலும், அப்பத்தின் குணங்களுக்குள் மாத்திரம் அவர்கள் நன்மை வாங்க வேண்டு மெனக் கட்டளையிட்டது. ஜனங்கள் நெருங்கி உட்கார்ந்து இருக்கும் கோவில்களில் பாத்திரத்தை ஒருவர் ஒருவரிடம் கொடுத்து வரும்போது எவ்வளவு ஆபத்துக்குரிய அசந்தர்ப்பங்கள் நேரிடக் கூடும்! 

வேறு சிலருக்குத் திராட்சை இரசத்தின் மீது மிகுந்த வெறுப்பிருந்தது. வேறு சிலருக்கோ மற்றொருவர் குடித்த பாத்திரத்திலிருந்து குடிக்கச் சகிக்கவில்லை

இவ்வித பெரிய இடையூறுகளை நீக்குவதற்காகத் திருச்சபையானது ஞானத்தோடு ஒரே வித குணங்களுக்குள் நன்மை வாங்க வேண்டுமெனத் தீர்மானித்தது. இது கிறீஸ்தவர்களை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. ஏனெனில் நாம் மேற்கூறியபடி திவ்விய ஓஸ்தியில் மெய்யாகவே சேசுநாதருடைய சரீரத்தை உண்டு, திரு இரத்தத்தைக் குடிக்கிறோம்

பதிதர்கள் திருச்சபையை தாக்கக் காரணம் உண்டு பண்ணும்படி துவக்கத்திலிருந்து இருவித குணங்களிலும் நன்மை வாங்க வேண்டுமென வற்புறுத்தினார்கள். ஆனால் வெகு காலத்துக்கு முன்னமே பாத்திரத்தைக் கிறீஸ்தவர்களுக்கு கொடுப்பதினால் வரும் கஷ்டங்களை அறிந்துகொண்டு கத்தோலிக்கத் திருச்சபையின் விவேகமுள்ள வழக்கத்தைக் கையேற்றுக்கொண்டார்கள். இக்காரியத்தில் திருச்சபையை தாக்குகிறவர்கள் விசேஷமாய் அறியாமையினாலேயே அவ்விதம் செய்கிறார்கள்.

தொடரும்...