எப்போதும் ஜெபம் செய்ய வேண்டும் என்பதால் 24 மணி நேரமும் ஜெபங்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று அல்ல. அடிக்கடி ஜெபிக்க வேண்டும் என்று பொருட்படும். ஒரு மாணவன் படிப்பு நேரத்தில் மட்டுமல்ல மற்ற ஓய்வு நேரங்களிலும் புத்தகம், கையுமாய் இருந்தால், அவன் எப்போதும் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறான் என்று சொல்கிறோம்.
அவன் பகலில் பல தடவை சாப்பிடுகிறான்; இரவில் நித்திரை கொள்கிறான்; காலையில் ஸ்நானம் பண்ணுகிறான்; மாலையில் விளையாடுகிறான். இருந்தாலும் இரவு பகலாய் படிக்கிறான் என்கிறோம். இவ்வாறே நாமும் ஜெபத்தில் ஈடுபட வேண்டும்
ஒரு நாளிலே எத்தனையோ தடவைகளில் ஜெபிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. கண் விழித்ததும், துயில் கொள்ளும் முன்பும், காலையிலும், மாலையிலும், போசனத்துக்கு முன்பும் பின்பும் ஜெபிக்கப் பழகியிருக்கிறோம். அது போலவே வேலை தொடங்கு முன்பும், முடிந்த பின்பும் ஜெபிக்க வேண்டும்
வீடோ, வயலோ, பள்ளியோ, ஆலையோ, நம் தொழில் ஜெபத் தோடு தொடங்கி ஜெபத்துடன் முடிய வேண்டும். குறைந்த அளவு சிலுவையாவது பக்தியோடு வரைந்து கொள்ள வேண்டும். இவைகளுடன் திவ்விய பலிபூசை காணுதல், தேவநற்கருணை சந்திப்பு, ஆசீர்வாதம், குடும்ப ஜெபமாலை, நவநாட்கள் முதலியவைகளையும் சேர்த்துக்கொண்டால், இடை விடாமல்
ஜெபிக்கிறோம் என்று கூற முடியாதா? ஆனால் ஜெபிப்பதற்கு இத்தனை சந்தர்ப்பங்கள் இருந்தும், எத்தனையோ கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் ஜெபிக்காமலே இருந்து விடுகிறார்கள்
மேலும், நம்முடைய செயல்களையும் ஜெபங்களாக ஆக்கி விடலாம். அவைகள் சர்வேசுரனின் தோத்திரத்துக்காகச் செய்யப்படுமானால் ஜெபங்களாகி விடும். "நீங்கள் சாப்பிட்டாலும், குடித்தாலும், சர்வேசுரனுடைய தோத்திரத்துக்காகச் செய்யுங்கள்” என்று அர்ச். சின்னப்பர் போதித்திருக்கிறார் (1 கொரி. 10:31).
கடவுளைத் தோத்தரிப்பதே ஜெபத்தின் முதல் நோக்கம். ஆதலால் சொல்லைப் போன்று செயலும் கடவுளுக்குப் புகழ் சாற்றுமானால் ஜெபத்தின் தன்மை அடைந்துவிடுகிறது. பாவக்கிரியைகள் அவருடைய மகிமைக்கு மாறானவை. மற்ற செயல்கள் யாவும், அவரது மகிமை தோத்திரத்தை விரும்பும் நற்கருத்து இருக்குமானால், ஜெபங்களாக விளங்குகின்றன. எனவே, எவ்வளவு அருமையான பக்தி முயற்சி காலையில் கண் விழித்ததும் சேசுவின் திரு இருதயத்துக்கு அன்றைய ஜெபம், செயல், துன்பங்களையெல்லாம் ஒப்புக் கொடுக்கும் ஜெப அப்போஸ்தலத்துவம்.
தொடரும்...