ஞான வாழ்விலே ஜெபம் சுவாசத்தைப் போன்றது சுவாசியாதவன் இறந்து விடுகிறான். அதில் கோளாறு ஏற்பட்டால் நோய் உண்டாகிறது. இருதயப் பலவீனம் மூச்சு விடுவதைப் பாதிக்கிறது. அதுபோலவே, ஜெபம் செய்யாதவன் தேவ அருள் என்னும் ஞான உயிரை இழந்து போகும் பேராபத்தில் இருக்கிறான்.
ஜெபத்தில் குறைவுபடுகிறவன் ஞான வாழ்க்கை யில் குன்றி விடுகிறான். தேவ சிநேகமில்லாதவன் ஜெபத்தைக் கைவிடுகிறான். ஜெபமே ஜெயம். கிறீஸ்துநாதரைப் போன்ற ஜெப வீரனே அவருடைய வெற்றியிலும் பங்கு பெறுகிறான் இவ்வுலகில் எழும்பும் ஜெப முரசொலி, மறு உலகில் திரியேகக் கடவுளைத் தரிசித்து துதிபாடும் ஜெய பேரிகை யாக முழங்கும்
முன்கூறியபடி, மனதையும், இருதயத்தையும் கடவுள் பால் உயர்த்தி, அவருடன் உரையாடுவதே ஜெபம். உள்ளத்து உணர்வுகளைச் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்துகிறோம். பக்தி உணர்ச்சிகளையும் அவ்வாறே வாய் ஜெபம் சங்கீதம், திருச்சடங்கு முறைகளால் வெளிப்படுத்திக் கடவுளை மனம், மெய், மொழிகளால் தொழுது ஏற்றுகிறோம். வெளித் தோற்றமுள்ள சடங்குகள் ஜெபங்களின் உயிர் உள்ளத்திலுள்ள பக்தி உணர்ச்சி. ஆதலால் மனசு முற்றிலும் ஈடுபடும் ஜெபமாகின்ற தியானம், வாயால் உச்சரிக்கப்படுகிற குறிப்பிட்ட ஜெபங்களைவிடச் சிறந்தது என்பது விளங்கும்
வாயால் வெளியிட்டாலும் சரி, மனதால் செய்து கொண்டாலும் சரி, ஜெபமானது இரு அன்பர்களுக்கிடையில் நிகழும் உரையாடல். அதாவது நம்மை உண்டாக்கிக் காத்து வரும் கர்த்தரும், நம்மை நேசித்து நடத்தி வரும் தந்தையுமாகிய சர்வேசுரனோடு, அவரை அறிந்து நேசித்து, வழிபடும் பக்தனுக்குக் கிடைக்கும் பேட்டி,
ஜெபிக்கும்போது அன்புக்கடவு ளோடு நாம் குறித்த ஒரு விஷயத்தைப்பற்றி அன்புடன் உரையாடுகிறோம். விஷயங்களில் அவருக்குப் பிரியமானவைகள் பரம இரகசியங்கள், விசுவாச சத்தியங்கள், அவருடைய நேச குமாரனாகிய சேசுநாதரின் அவதாரம், சொற்கள், செயல்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகள் முதலியன. இவைகளைச் சிந்திக்கச் சிந்திக்க நமது விசுவாசம் உறுதிப்பட்டு, திரியேகக் கடவுள் மட்டில் நமக்குள்ள பக்திப் பற்றுதல் வளருகிறது.
அவருடைய சிறந்த இலட்சணங்கள், அளவற்ற மகிமை, அணைகடந்த அன்பு, ஈடில்லாத இரக்கம் முதலியவைகளை உணர்ந்து நிறைந்த மனதோடு அவரைத் தோத்தரிக்கவும், கனிந்த உள்ளத் தோடு அவருக்கு நன்றி செலுத்தவும் தூண்டப்படுகிறோம்
தொடரும்...