சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 57

நமக்கு வேண்டிய நன்மை, உதவிகளும் ஜெபத்தில் நாம் கூறக் கூடிய விஷயங்களே. மக்களின் மன்றாட்டுக்களை ஏற்று நன்மை செய்வதில் சர்வேசுரன் மகிழ்ச்சி கொள்கிறார். அதுவும் அவருடைய ஏக குமாரன் சேசுநாதர் வழியாகச் செய்யப்படும் மன்றாட்டுக்களுக்கு தனி மதிப்பு உண்டு. எனவேதான் சேசு நாதரும் கூறினார்: “என் நாமத்தினாலே நீங்கள் பிதாவி னிடத்தில் ஏதாகிலும் கேட்பீர்களேயாகில், அதை அவர்

உங்களுக்குத் தந்தருள்வார் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (அரு. 16:23). 

அவருடைய நாமத்தினால் நாம் மன்றாடும் போது, சர்வேசுரனோடு நமக்கு இருக்கும் உறவு வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் அவர் வழியாக நாம் கடவுளின் சுவீகாரப் புத்திரர்கள் ஆகிவிட்டோம் நாம் புத்திரர்களாயிருக்கிறபடியால் சர்வேசுரன் அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற தம்முடைய சுதனுடைய இஸ்பிரீத்துவை நம் இருதயங்களில் அனுப்பினார் (கலாத். 4:6). 

நாமும் அப்பா, பிதாவே என்று கூப்பிடுகிற சுவீகாரப் பிள்ளைகளுக் குரிய புத்தியைப் பெற்றுக்கொண்டோம் (உரோ. 8:15). அப்படியிருந்தும் அன்னியரைப் போல், சொல்ல வேண்டுமானால் அர்ச். சின்னப்பர் கூறுவது போல் அடிமைப் புத்தியோடு (ரோ:15), கையேந்தி நிற்கும் வகையைத்தான் அநேக கத்தோலிக்கர்கள் அறிந்திருக்கிறார்கள். 

இதைத்தான் பரிசுத்த பிதா 12-ம் பத்திநாதர் இவ்வாறு எடுத்துரைக்கிறார்: “தெய்வ வழிபாடு உபயோகத்துக்குரிய ஒரு வழக்கமாகி விட்டது சமயம் என்பது ஆன்மீக நிலையிலிருந்து இறங்கி, ஜடப்பொருள் வியாபாரமாகி விட்டது. வேதத்தை அனுசரிப்பது என்றால் பூலோக தேவைகளுக்காக பரலோகத்திலிருந்து உபகாரங்களை கேட்டு கடவுளோடு கணக்கு வைப்பதுபோல் ஆகிவிட்டது. விரும்பின அளவிற்கு தேவ உதவி கிடைக்காமல் போனால் விசுவாசம் தளர்ந்து விடுகிறது

ஆனால் அன்புறவு ஜெபத்தின் சிறந்த அம்சம். அதில் விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்னும் புண்ணியங்கள் இருக்கின்றன. ஜெபத்தால் அவை அதிகரிக்கின்றன. பராக்குகளால் நமது பக்தியின் வேகம் குறைந்தாலும், இந்தப் புண்ணியங்களால் ஜெப நிலைமை குலையாமல் நிற்கும். நாம் கேட்டது உடனடியாகக் கிடைக்காமல் போனாலும், செபிப்பதில் சோர்வு அடையாமல் இருக்கும். கிறிஸ்துநாதர் நாமத்தினால்

நாம் கேட்கும்போது, நம் மன்றாட்டு, சேசு, அதாவது இரட்சகர் என்னும் அவருடைய திருநாமத்திற்குப் பங்கமில்லாமல் இருக்க வேண்டும். எனவே, பிதாவும் தமது இரட்சணியத்துக்கு ஏற்றபடி நன்மை செய்கிறார். செபம் ஒருபோதும் வீணாகாது துன்ப துயரங்களை நாம் அனுபவிப்பதாயிருந்தாலும், “சர்வே சுரனைச் சிநேகிக்கிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக உதவுகிறதென்று அறிந்திருக்கிறோம்” (உரோ. 8:28)

ஆதலால் கிறீஸ்தவ விசுவாசத்தில் தழைத்த நாம் செபிப்பதில் சோர்வு அடையாமல் அதில் சிறந்து விளங்க வேண்டும். “நம்பிக்கையோவென்றால் நம்மை வெட்கிப் போகப் பண்ணாது. ஏனெனில் நமக்கு அளிக்கப்பட்ட இஸ்பிரீத்துசாந்துவினாலே தேவ சிநேகம் நம்முடைய இருதயங்களில் எப்பக்கத்திலும் பொழியப்பட்டிருக்கிறது” (உரோ:5:5)

தொடரும்...