நால்வரில் ஒருவர்
மேலும் நம் யாகப்பர் வேதாகமத்தில் வரும் ஒரு சில பகுதிகளைப் பார்க்கலாம்..
இயேசு அவரிடம், "இப்பெரிய கட்டடங்களைப் பார்க்கிறாயே, கல்லின்மேல் கல் நிற்காதபடி எல்லாம் இடிக்கப்படும்" என்றார்.
அவர் கோயிலுக்கு எதிரே, ஒலிவ மலைமீது அமர்ந்தபின், இராயப்பர், யாகப்பர், அருளப்பர், பெலவேந்திரர் ஆகியோர் அவரிடம்,
"இவை எப்பொழுது நடக்கும்? இவை அனைத்தும் நிறைவேற இருக்கும்பொழுது தோன்றும் அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்" என்று தனியாகக் கேட்டனர்.
மாற்கு 13 : 2-4
நம்மில் பலர் புனித யாகப்பரைப்போல அந்த நான்கு சீடர்களைப்போல
“நாளை என்ன நடக்கும் ? இறுதிக்காலம் எப்போது வரும்? அப்போது என்னென்ன அறிகுறிகள் தோன்றும்? “ என்று இன்றில் வாழாமல் நாளையில் அல்லது எப்போதோ நடக்க இருக்கும் காலத்தில் வாழ்ந்தும், கவலைப்பட்டும் அல்லது அதிலே நம்முடைய மனங்களை செலுத்தியும் வாழ்கிறோம்..
இதனால் ஒரு பயனும் இல்லை. நம் வாழ்க்கையை வீணடிக்கும் செயல்… அதோடு சேர்த்து கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் பொன்னான காலத்தையும், நேரத்தையும் பாழாக்கும் செயல்..
ஆண்டவர் எப்போது வந்தாலும் நாம் அவரை எதிர்கொள்ள தகுதியான வாழ்க்கை வாழ வேண்டும்.. அது மட்டுமே நாம் அனுதினமும் செய்ய வேண்டிய வேலை.
ஆனால் அன்று நம் யாகப்பர் மற்ற சீடர்களோடு ஆண்டவரிடம் அந்த கேள்வியை கேட்ட பின் நம் ஆண்டவர் கொடுத்த பதில் முற்றிலும் நமக்கு தேவையான ஒன்று.. அது அப்படியே இந்த காலத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறது..
“இயேசு கூறலானார்: "யாரும் உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு, 'நானே அவர்' என்று சொல்லிப் பலரை ஏமாற்றுவர்.
போர் முழக்கங்களையும் போர்ப் பேச்சுக்களையும் கேட்கும்போது கலங்கவேண்டாம். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இன்னும் இது முடிவன்று.
நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும். பற்பல இடங்களில் நிலநடுக்கமும் பஞ்சமும் உண்டாகும். இவை வேதனைகளின் தொடக்கமே.
மாற்கு 13 : 5-8
அப்படியே பொருத்தமாக இருக்கிறதுதானே? இருந்தாலும் நாம் நம் ஆண்டவர் கூறியபடி யாரிடமும் ஏமாறாமல்.. எந்த சோதனை, வேதனை வந்தாலும் விசுவாசத்தில் தளராமல் கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருப்போம்..
அதன் பின்பு நம் யாகப்பரோடு சேர்த்து மற்ற சீடர்களுக்கும் ஆண்டவர் சொல்லியதுதான் மிக மிக முக்கியம்..
"நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள். உங்களை நீதிமன்றங்களுக்குக் கையளிப்பார்கள், செபக்கூடங்களில் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் நிறுத்தப்படுவீர்கள். அவர்கள் முன் சாட்சியாய் இருப்பீர்கள்.
மாற்கு 13 : 9
யாகப்பரும் மற்ற சீடர்களும் நம் இயேசு ஆண்டவருக்கு சாட்சியாக இருந்தார்கள்.. வாழ்ந்தார்கள் அவருக்காகவே மரித்தார்கள். ஆனால் நாம் சாட்சியாக இருக்கிறோமா? அல்லது எல்லாவற்றிக்கும் பயந்து கொண்டு பயத்தில் ஆண்டவரை மறுதலித்து வாழ்கிறோமா?
ஓரு அருட்தந்தை பிரசங்கத்தில் குறிப்பிட்டது ஞாபகம் வருகிறது..
இந்த உலகத்தில் நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் யார் தெரியுமா? குழந்தைகள் மட்டும்தான்..
அவர்கள்தான் “ present tense-ல்” ( நிகழ்காலத்தில்) வாழ்கிறார்கள்.. அன்றைய நாளில் மகிழ்கிறார்கள்.. அன்றைய நாளைக் கொண்டாடுகிறார்கள்.. அவர்கள் மட்டுமே தங்களை தேவ பராமரிப்பில் ஒப்புக்கொடுத்து கடவுளோடு நெருக்கமாக வாழ்கிறார்கள்.. அதனால்தான் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. அழுதாலும் உடனே சிரிக்க முடிகிறது.. அடித்தவர்களை உடனே மன்னிக்க முடிகிறது.. அதை மறக்கவும் முடிகிறது.. அதனால்தான் கடவுளும் அவர்களோடு மகிழ்கிறார்..
ஜெபம் : எங்கள் அன்பான பாதுகாவலரே ! அன்று நீர் எதிர்காலத்தைப் பற்றி கேள்விகள் கேட்டாலும் ஆண்டவரின் உயிர்ப்பிற்குப் பின் நிகழ்காலத்தில் வாழ்ந்தீர். நடைப்பயணமாக பல்லாயிரக்கணக்கான மையில்கள் நடந்து சென்று ஆண்டவர் இயேசுவுக்கு இயேசுவை அறிவித்தீர். இன்பத்திலும், துன்பத்திலும் அகமகிழ்ச்சியோடு ஆண்டவருக்கு சாட்சியாக வாழ்ந்தீர். அவருக்காகவே உம் இன்னுயிரை ஈந்தீர்..
ஆனால் நாங்கள் பயத்தில் அல்ல பயத்திலேயே வாழ்கிறோம்.. அதனால் ஒவ்வொரு நாளும் எங்கள் விசுவாசம் தடுமாறுகிறது.. தடம் மாறுகிறது.. அதனால் நாங்கள் சாட்சியாக வாழாமல் உம்மைக் காட்டிக்கொடுக்கும் வாழ்க்கையே வாழ்கிறோம்..
உம்முடைய உள்ளத்தைப்போல உறுதியான வீரமிக்க விசுவாச நெஞ்சத்தை எங்களுக்குத் தாரும்.. நாங்கள் குழந்தைகள் போல பயமில்லாமல் தேவ பராமரிப்பில் மகிழ்ச்சியாக வாழ வேண்டிய அருளை உம் தலைவரும், எங்கள் தலைவருமான ஆண்டவரிடம் பெற்றுத்தாரும் – ஆமென்.
“ நீங்கள் குழந்தைகளாய் மாறாவிடில் விண்ணரசில் நுழைய மாட்டீர்கள் “ – நம் ஆண்டவர்
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !