மனத்தரித்திரர் பாக்கியவான்கள்
கிறிஸ்து நாதருடைய போதகத்தைக் கேட்ட யூத மக்களின் நடுவில் தரித்திரத்தைப்பற்றி நிலவிய கொள்கைகளை அறிந்திருப்பது இங்கு அவசியம். அவருடைய போதகத்தைக் கேட்டவர்களில் பெரும்பாலோர் ஏழைகள். இந்தத் தரித்திரத்தின் மனப்பான்மை எவ்வாறு இருந்தது?
இவர்கள் முற்றிலும் உலக ஆதாய எண்ணமுடையவர்கள். இவ்வுலக வாழ்விற்கு அடுத்தவைகளையே பிரதானமாய் நாடியவர்கள். வானத்தினின்றும் மன்னா என்கிற உணவைப் பொழியும் போது சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் இராதவர்கள் இவ்விஷயத்திலும் எகிப்து தேசத்தில் தாங்கள் புசித்த உணவை நினைத்துக்கொண்டு மன்னா ருசியற்ற உணவென முறை யிட்டார்கள்.
பசியாய் இருக்கும்போது சர்வேசுரனுக்கு விரோதமாய் எழுந்து முணுமுணுத்தவர்கள். யூத ஜனங்களை நன்கறிந்த மோயீசன் அவர்களை நோக்கி: “தேவனுக்குப் பிரமாணிக்கமாய் இருப்பீர்களாகில் உங்களுக்கு உலக சம்பத்துக்கள் பெருகும்; பிரமாணிக்கம் தவறினால் தரித்திரமும் வியாதியுமே உங்களைத் தொடரும்” என்றார். இங்ஙனம் காலக்கிரமத்தில் தனவந்தர் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், தரித்திரர் அவரால் சபிக்கப்பட்டவர்கள் என்னும் கொள்கை அவர்கள் நடுவில் வேரூன்றிற்று. ஆகையால் தரித்திரர் நோயாளிகள் சர்வேசுரனுடைய சாபத்திற்கு உட்பட்டவர்கள் என்று கருதப்பட்டனர்
நமது கர்த்தருடைய காலத்தில் தரித்திரர்களின் வாழ்க்கை மிக்க பரிதாபத்திற்குரியதாய் இருந்தது. அடிமை வாழ்வே இவர்களுடைய பாகமாய் இருந்தது. கடின உழைப் புக்குத் தகுந்த ஊதியம் கிட்டுவதில்லை. அவர்களது எஜமானர் தங்கள் பொருளைப் பெருக்கிக்கொள்ள ஏழைகளுடைய கூலியைக் குறைத்துக் கொடுத்தனர்.
இத்துடன் உரோமைச் சக்கரவர்த்திக்குப் பல வரிகளைச் செலுத்த வேண்டியிமிருந்தது வரி வசூலிக்கும் ஆயக்காரரோ அதிக வரியை வசூலித்து வந்தனர். இச்சூழ்நிலையில் ஏழைகளுக்கு உண்பதும் உடுத்துவதும் பிள்ளைகளை வளர்ப்பது கஷ்டமான காரியமாயிற்று இந்த நிர்ப்பாக்கிய நிலைமையினின்றும் மீள யாதொரு நம்பிக்கையுமின்றி சஞ்சலத்தில் ஜீவித்து மரித்தனர்
இச்சந்தர்ப்பத்தில் நம் திவ்விய கர்த்தர் செய்த பிரசங்கத்தில் ஏழை மக்கள் எதிர்பாராத ஓர் போதகம் வெளியாகிறது ஏழைகள் பாக்கியவான்கள்” என்கிறார் நம் ஆண்டவர். இதைக் கேட்டவர்கள் ஆச்சரியமுற்றனர். நம்புவதற்கு வழி தெரியாமல் திகைத்தனர். இத்தகைய போதகத்தை இது வரையிலும் கேட்டதே இல்லை என்றனர்.
நம் திவ்விய கர்த்தர் அற்புதங்களைச் செய்பவர், மகத்தான போதகர், வியாதிக்காரரைப் பேணி அவர்களைக் குணப்படுத்துபவர், ஏழைகளை அன்புடன் அரவணைப்பவர். இதுவரையில் அவர்கள் நடுவில் நிலவிய எண்ணங்களையும் கொள்கைகளையும் அவர் இப்பொழுது மாற்ற விழைகிறார். ஏழைகளாயிருப்பது தேவனுடைய சாபத்தினாலல்ல, ஏழைகளாயிருப்பதில் நிந்தை யொன்றுமில்லை என்று உரைக்கிறார்.
ஏழைகளுக்கும் செல்வந்தருக்கும் தம்முடைய இராச்சியத்தில் வேற்றுமையிராது ஏழைகளே அதை அதிக சுலபமாய்ச் சுதந்தரித்துக்கொள்வர் என்று போதிக்கிறார். வரிவேதத்திலும் சர்வேசுரன் ஏழைகளை மறந்துவிடவில்லை. எளியோர்களை நிந்திக்கக் கூடாது அவர்களுக்கு இன்னல் இழைப்பது பாவம் என்று கூறியுள்ளார் ஏழைகளுக்கு சுவிசேஷம் போதிக்கப்படும் என்று இசையாஸ் தீர்க்கதரிசி மூலமாய் முன்னறிவித்தார் ஆனால் பரிசேயர் தங்களுடைய பொய்ப் போதகத்தால் கடவுளின் கட்டளையை மாற்றி ஏழைகள் சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்லி அவர்களை நிந்தித்தனர்.
தொடரும்...