சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 69

தனவந்தர்களைப்பற்றி மேற்கூறியவைகளைக் கேட்ட நாம் உலக சம்பத்துக்களே தீயன எனக் கொள்ளலாகாது அவைகளும் கடவுளின் அன்புக் கொடைகளில் ஒன்று. அவர் அளிக்கும் கொடைகள் யாவும் நற்கொடைகளே, மக்கட்கு நன்மை பயக்கவே அருளப் பெற்றவை. அவற்றை அவரது திருவுளத்தின்படி பயன்படுத்தினால் புனிதராவோம்

இவ்விதப் புனிதர்கள் வரிவேதத்திலும் அருள் வேதத்திலும் தோன்றினர். இவர்கள் தேவப்பணியிலும், ஏழைகளின் வறுமையைப் போக்குவதிலும் தங்கள் சொத்துக்களை உபயோகித்தனர். ஆதாமின் மக்களில் ஒருவன் ஆபேல் ஆடுகளை மேய்த்து வந்தான். ஆண்டவரின் கருணையால் மந்தைகள் வளர்ந்து பெருக அவன் பெரிய பணக்காரனானால் சர்வ கொடைகளின் கர்த்தாவாகிய தேவனின் நன்மைத் தனத்தை அங்கீகரிக்கவும், அவருக்கு நன்றி செலுத்தவும், தன் மந்தையில் மிகச் சிறந்த ஆடுகளைத் தேவனுக்குப் பலி யிட்டான். இப் பலிகளின் சுகந்த மணம் தேவ சிம்மாசனத்தை எட்டியது. தேவன் மகிழ்ச்சியுடன் இப்பலிகளை ஏற்றுக் கொண்டார்

விசுவாசிகளின் பிதாப்பிதாவாகிய அபிரகாமை கடவுள் உலக செல்வங்களால் நிரப்பினார். இவர் தமது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களில் தனது செல்வத்தைத் தேவ புகழ்ச்சிக்காகவும், அவருக்கு நன்றியறிதலாகவும் செலவிட்டார்.

 தோபியாஸ் அந்நிய நாட்டில் பரதேசியாய் வாழ்ந்தபோது தன் இனத்தின் வறுமையைப் போக்க கடவுள் தனக்களித்த செல்வங்களை உபயோகித்தார். அவர் குமாரன் சின்ன தோபியாசுக்கு அவர் கூறிய அறிவுரைகளில் ஒன்று: உன் செல்வத்தைக் கொண்டு ஏழைகளை வாழவை என்பதாம்.

 ஞானத்தையும் அளவற்ற செல்வங்களையும் கடவுளின் கொடையாகப் பெற்ற சாலமோன் அரசர் தேவனுக்குத் தகுதியான ஓர் அற்புத இல்லத்தைத் தனக்குக் கொடுக்கப்பெற்ற செல்வத்தைக் கொண்டு அமைத்தார்.

நம் திவ்விய கர்த்தருடைய வேத போதக நாட்களில் பொருள் படைத்த புண்ணிய மாதுகள் அவருடையவும் அப்போஸ்தலர்களுடையவும் போசனத்திற்காக தங்கள் செல்வங்களைச் செலவிட்டனர். அவர் மரித்த பின்பும் அவர் மேல் வைத்த அன்பினால் அவரது சடலத்தைப் பொதிய அவசியமான வாசனைத் திரவியங்களை வாங்கிக்கொண்டு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நாடி போனார்கள்.

கர்த்தர் உயிர்த்தபின் ஆதிக் கிறீஸ்தவர்களில் தனவந்தர்கள் ஏழை சகோதரர்களுக்கு உதவும் பொருட்டு தங்கள் சொத்துக்களை விற்று அவற்றின் விலையைப் பொதுவில் செலவிட்டனர். உ ரோமை சாம்ராஜ்யத்தில் கிறீஸ்தவ மறையைத் தழுவிக்கொண்ட செல்வ சீமாட்டிகள் தங்களுடைய செல்வத்தை சத்திய மார்க்கத்தின் வளர்ச்சிக்காகவும், ஏழைகளின் பராமரிப்புக்காகவும் தானம் செய்தனர்

தொடரும்...