அன்று கன்னிமரியாயின் மங்கள வார்த்தை திருநாள். காலை வேளை அர்ச்.ஜெத்ரூத்தம்மாள் வாழ்ந்த மடத்தில் தூதனின் மங்கள வார்த்தை பாடப்பட்டது. அந்நேரம் அப்புனிதை ஒரு காட்சி கண்டாள்.
பிதா சுதன் பரிசுத்த ஆவியானவர் இம்மூன்று ஆட்களிடமிருந்தும் மூன்று அருவிகள் புறப்பட்டு மாமரியின் கன்னிமை குன்றா இருதயத்திற்குள் பாய்ந்தன. மாமரியின் இதயத்தை தொட்ட கணத்திலேயே, அவை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தன.
இதிலிருந்து அர்ச்.ஜெத்ரூத்தம்மாளுக்கு விளங்கிக்கொண்டது என்னவெனில், பரிசுத்த தமத்திருத்துவம் தேவமாதாவுக்கு பிதாவுக்குப்பின் அதிக வல்லமையும், சுதனுக்குப்பின் அதிக ஞானத்தையும், பரிசுத்த ஆவிக்குப்பின் அதிக அன்பையும் கொடுத்துள்ளார்கள்.
மேலும் தூதனின் மங்கள் மொழி விசுவாசிகளால் கூறப்படும் பொழுதெல்லாம் இம்மூன்று தெய்வீக அருவிகளும் மரியாயை சூழ்ந்து சுழன்று வேகமுடன் அம்மாசற்ற இருதயத்திற்குள் பாய்கின்றன. மரியாயை தெய்வீக ஆனந்தத்தால் முழுவதும் நிரப்பியவுடன் அவை மீண்டும் தமதிருத்துவத்திற்குள்ளே சென்று சேர்கின்றன.
இம்மகிழ்ச்சி பெருக்கில் சம்மனசுக்களும், பூமியில் இச்செபத்தை சொல்லும் மாந்தரும் பங்கு கொள்கிறார்கள். காரணம் கடவுளின் பிள்ளைகளுடைய நலன்களுக்கெல்லாம் ஊற்றாயிருப்பது சம்மனசின் மங்கள் வார்த்தையே.
தேவ அன்னையே அர்ச்.ஜெத்ரூத்தம்மாளிடம் கூறியவை இவை:
“ அருள் நிறை மந்திரங்களைப் போன்ற ஒன்றை எந்த மனிதனும் ஒரு போதும் இயற்றியதில்லை. பிதாவாகிய சர்வேசுவரனே எனக்கு கூறிய இவ்வழகிய கண்ணியம் நிறைந்த வார்த்தைகளை விட என் இருதயத்திற்கு விருப்பமான வேறு எந்த வாழ்த்தும் இல்லை.
அர்ச். மெட்டில்டாவுக்கு ஒரு நாள் மாமரி இவ்வாறு உரைத்தார்கள்:
“ நீ எனக்குக் கூறிய தூதனின் மங்கள வாழ்த்து யாவும் என் ஆடையின் ஒளியாய் பதிக்கப்பட்டுள்ளன. (தன் மேலாடையின் ஒருபகுதியைக்காட்டி), என் ஆடையின் இந்த பாகம் முழுவதும் அருள் நிறை மந்திரங்களால் நிறையும் போது நான் உன்னை என் அருமைக் குமாரனின் அரசில் கூட்டிச்சேர்ப்பேன் ”
நன்றி : அர்ச்.லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய “ ஜெபமாலையின் இரகசியம்” என்ற நூல்.
நம் ஜெபமாலையால் அன்னையின் ஆடைகளை ஒளியால் பதிப்போம். நம்மையும் ஒரு நாள் அன்னை அவர் திருக்குமாரனின் அரசில் சேர்ப்பார்கள். மேலும் நம் ஜெபமாலையால் தமதிருத்துவம் மகிழ்கிறது.
நாம் ஜெபமாலையில் சொல்லும் மூன்று அருள் நிறை மந்திரங்கள் நமக்கு கூறும் உண்மை, பிதாவுக்கு அடுத்தபடியாக வல்லமையும், சுதனுக்கு அடுத்தபடியாக ஞானமும், பரிசுத்த ஆவிக்கு அடுத்தபடியான அன்பும் நம் அன்னை கொண்டிருப்பதால் அவற்றால் நமக்கு விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் பெற்றுத்தருகிறார்கள்.
நம் பதுவைப்புனிதர் அந்தோணியார் கூட மூன்று மணி அருள் நிறை மந்திரத்தின் மீது அதிக பக்தி வைத்திருந்தார். மேலும் நம் அந்தோணியார் இடுப்பில் ஜெபமாலை தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள் அவரும் அதிகமாக ஜெபமாலை ஜெபித்துள்ளார். ஒரு முழு ஜெபமாலை என்பது 153 மணியே. ஆகையால் அதிகமாக ஜெபமாலை ஜெபிப்போம்.
ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !