நடுப்பூசையில் இடைச்செருகல் ஜெபங்கள் வேண்டாமே :
இப்போது சமீக காலமாக திருப்பலியில் சில குருக்கள் நிறைய இடைச்செபங்களை சேர்க்கிறார்கள். அதுவும் முக்கியமான நேரமான எழுந்தேற்றம் மற்றும் ஆண்டவரின் திருவுடலையும், திருஇரத்தத்தையும் ஒப்புக்கொடுக்கும் முன் (இவர்வழியாக இவரோடு..க்கு முன்) சேர்த்து சொல்கிறார்கள்.
தெய்வீகத் திருப்பலியில் ஏற்கனவே அழகான, ஆழமான, அர்த்தமுள்ள, தேவையான, முக்கியமான ஜெபங்கள் இருக்கும்போது ஏன் தேவையற்ற இடைச்செருகல்கள். இதுபோன்ற ஜெபங்களை நம் தாய்திருச்சபை அனுமதிக்கிறதா?.
திருப்பலி பிதாவான சர்வேசுவரனுக்கு நம் இயேசு தெய்வமே அவர் வழியாக தூய ஆவியானவரின் துணையில் பரிகாரப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறார். நம் இயேசு தெய்வமாக செயல்படுகிறவர்கள் குருக்கள்.
“ நீரே ! குருவாகவும், பலிப்பீடமாகவும், செம்மறியாகவும் இருக்கிறீர் “ – திருப்பலி ஜெபிக்கப்படும் ஜெபம்.
ஏற்கனவே திருப்பலியில் இருக்கும் ஜெபங்களை தியானித்து பக்தியோடும், தகுதியான உள்ளத்தோடும் பங்கு பெற்றாலே போதும். திருப்பலியின் எல்லா ஜெபங்களையும் ஏன் ஓரு சிறிய ஜெபங்களையும் கூட நாம் தியானிக்க கடமைப்பட்டுள்ளோம். அப்போதுதான் திருப்பலி எவ்வளவு உன்னதமானது என்று உணர்ந்து அதில் பங்கு பெற முடியும்.
தேவையற்ற இடைச்செருகல் ஜெபங்களால் திருப்பலியில் முழுமையாக பங்கு பெற முடியவில்லை. உண்மையிலேயே ஜெபங்கள் தேவைப்படும் நேரம் நம் தெய்வீக நற்கருணை நாதரை உட்கொண்ட பின்பே. அப்போது ஜெபங்கள் ஒரு பதினைந்து நிமிடங்கள் ஏன் மவுன ஜெபங்கள் கூட போதும். அவரை வரவேற்கும் வரை அவ்வளவு ஜெபங்கள் சொல்லி விட்டு. அவரைப்பெற்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிறிஸ்துவாக அமர்ந்திருக்கும்போது அறிக்கைகள், அறிவிப்புகள், பாராட்டுகள், கைத்தட்டல்கள், பொன்னாடை போர்த்தல்கள் என்று நாம் பிஸியாவது நியாயமா?
அனைவருடைய கவனத்தையும் நற்கருணை நாதரை விட்டு திசைதிருப்புவது நியாயமா?. குறைந்த பட்சம் பத்து நிமிடங்களாவது நற்கருணை நாதரிடம் செலவழித்து அவரை ஆராதித்து, போற்றி, நன்றி சொல்லிவிட்டு தேவைகளை கேட்டுவிட்டு நன்றி வழிபாட்டை முடித்து பிதாவுக்கு நன்றி சொல்லிவிட்டு அறிக்கைகளுக்கு செல்லலாமே. இதுவே திருச்சபையின் ஒழுங்காகவும், கட்டளையாகவும் இருக்கும்போது அதை கடைபிடிப்பதில் என்ன பிரச்சனை?. அதற்குள் அவசரப்பட்டு மக்கள் சென்றால் போகட்டுமே மீதி இருப்பவர்களுக்கு அறிக்கை வாசித்தால் போதும். நற்கருணை ஆண்டவர் முக்கியமா? பொறுமையில்லாத மக்கள் முக்கியமா?
நம் மக்கள் சொன்னால் கேட்பார்கள். கேட்காவிட்டால் குருக்களுக்கு பாவம் இல்லை.
அதே போன்று முக்கியமான திருவிழா நாட்களில் எல்லாரும் பாடும் பாடல்களின் இராகத்தை மாற்றாதீர்கள். இது பாடல் குழுவினர்களுக்கு.
“ உன்னதங்களிலே... தூயவர் கீதங்கள் போன்ற பாடல்களின் இராகங்கள் மாற்றப்படுவதால் பாடல் குழுவினர் தவிர திருப்பலிக்கு வந்திருப்பவர்களால் பாடி கடவுளோடு ஒன்றிக்க முடிவதில்லை.
தேவையில்லாத இடைச்செருகல் ஜெபங்களும், முக்கியமான திருநாட்களில் அனைவரும் பாட வேண்டிய பாடல்களை இராகங்களை மாற்றுவதும் பக்தியாக திருப்பலியில் பங்கேற்க முடியாமல் இடையூர்களாகவே இருக்கின்றது. இதை தவிர்க்கலாமே...
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
மன்னிப்பு வழிபாடு
எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதரர், சகோதரிகளே உங்களிடமும் நான் பாவிஎன்று ஏற்றுக் கொள்ளுகிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும் , சொல்லாலும் செயலாலும் கடமை தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன் ஆகையால் எப்பொழுதும் கன்னியான பரிசுத்த மரியாளையும்,வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் , சகோதரிகளே உங்களையும் நம் தேவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !