“இதோ கடவுளுடைய செம்மறி “ – அருளப்பர் 1 : 36
நம் சந்தியாகப்பர் முதலில் ஸ்நாபக அருளப்பரின் சீடராக இருந்தவர். இதையே பாரம்பரியம் உறுதி செய்கிறது. பைபிளில் பார்க்கும்போது நாம் அதை எப்படி உறுதி செய்ய வேண்டும் என்றால்.. நம் யாகப்பரின் தம்பியான அருளப்பர் அவருடைய நற்செய்தியில் அவர்களைப் பற்றிய ( புனித யாகப்பர் & புனித அருளப்பர்) பற்றிய பகுதிகளைப் பற்றி தாழ்ச்சியின் நிமித்தம் மவுனம் கடைபிடிக்கிறார்.
“ மறுநாள் மீண்டும் அருளப்பர் தம்முடைய சீடர் இருவரோடு இருக்கையில். இயேசு அப்பக்கம் நடந்து சென்றார். அருளப்பர் அவரை உற்று நோக்கி “ இதோ கடவுளுடைய செம்மறி “ என்றார். சீடர் இருவரும் அவர் கூறியதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். – அருளப்பர் 1 : 35-37.
( இயேசு சுவாமியைப் போல புனித ஸ்நாபக அருளப்பருக்கும் நெருக்கமானவர் தானோ?)
பெலவேந்திரரைப் பற்றி அவர் யார் என்று தெளிவாக குறிப்பிடும் அவர்.. மற்றவரைப் பற்றி மவுனம் சாதிக்கிறார். பெலவேந்திரர் சென்று இராயப்பரை அழைத்து வந்ததாகக் குறிப்பிடுகிறார்..
மேலும் அந்த இருவரையும் இவர் மட்டுமே அவர்களை முதல் சீடர்கள் என்று குறிப்பிடுகிறார்..
மற்ற நற்செய்தியாளர்கள் முதல் நான்கு சீடர்கள் வரிசையில் புனித சந்தியாகப்பரை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் பைபிளில் நால்வர் சம்மந்தமாக வரும் இடத்தில் எல்லாம் அவர் பெலவேந்திரரோடு இனைந்து காணப்படுகிறார். குறிப்பாக சென்ற பதிவான “ உலகின் இறுதி காலங்கள் “ பற்றிய பகுதி.. மேலும் இராயப்பரின் படகு இயேசு சுவாமியின் அற்புதத்தால் மீன்களால் நிறைந்து மூழ்கும்போது தங்கள் கூட்டாளிகளான யாகப்பரையும், அருளப்பரையும் அழைத்தார்கள் என்கிறது.. எப்படிப்பார்த்தாலும் அது யாகப்பரையே குறிக்கிறது..
“ சீமோனுடைய கூட்டாளிகளான செபதேயுவின் மக்கள் யாகப்பரும், அருளப்பரும் அவ்வாறே திகிலுற்றனர் “ லூக்காஸ் 5 : 10.
இப்போது யாகப்பரிடம் வருவோம்.. யாகப்பர் இரண்டு பெரியவர்களிடம் பாடம் கற்றிருக்கிறார்..
ஒருவர் ஸ்நாபக அருளப்பர்.. மற்றவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து..
சந்தியாகப்பர் மீட்பையும், மீட்பரின் வருகையையும் எதிர்பார்த்திருந்திருக்கிறார்.. ஆன்மீக தாகம் கொண்டவராக இருந்திருக்கிறார். இளமையில் கடவுளைத் தேடியிருக்கிறார்.. உலகின் மீட்பு.. மீட்பர் சம்பந்தமான விசயங்களில் ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார்..
இளமைக்காலங்களில் என்ன என்னலாமோ ஆசைகள் இருக்கும்.. லட்சியங்கள் இருக்கும்.. பணம் சம்பாதிக்க வேண்டும்.. பெரிய பணக்காரராக வேண்டும்.. இன்னும் என்னவெல்லாமோ ஆசைகள் இருக்கும் பருவம் அது..
ஆனால் நம் யாகப்பரின் ஆசை எப்படி இருந்திருக்கிறது.. நமக்கு மீட்பு எப்போது கிடைக்கும்? மீட்பர் எப்போது வருவார்? என்று கடவுள் சார்புடையவைகளையே தேடியிருக்கிறார்..
அவரிடம் ஆன்மீக தேடுதல் இருந்ததால்தான் ஆண்டவரைக் கண்டுபிடித்திருக்கிறார்..
தேடல்.. அதுவும் ஆன்மீக தேடல்.. தேடலின் விடை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து..
இதுதான் நம் புனிதரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்..
சந்தியாகப்பரின் “ என் தேடல் நீ “ – ஆண்டவர் இயேசு சுவாமி..
ஜெபம் : எங்கள் அன்பான புனிதரே ! இளமையில் கடவுளையும், அவர் அரசையும் தேடுதல் எப்பேற்பட்ட பாக்கியமான காரியம்.. புனித ஸ்நாபக அருளப்பரிடமும், ஆண்டவர் இயேசுவிடமும் ஆன்மீக பாடம் கற்ற அருமை அப்போஸ்தலரே ! எங்களுடைய கவலைகள் எல்லாம் உலகம் சார்ந்தவைகளாகவே இருக்கிறது. அதிலே நாங்கள் சிக்கி கடவுளைத்தேடாமல், அவருக்குண்டான நேரத்தை செலவழிக்காமல் நாங்கள் வாழ்கிறோம். உம்முடைய அக்கறையும், தேடுதலும் கடவுள் முன் மிக விலையேறப்பெற்றவை. தேவையானவை. அதனால்தான் உம் தேடலின் விடையாக ஆண்டவர் இயேசு உமக்குக் கிடைத்தார். உம்மைப்போல எங்களின் “என் தேடலும் “ இயேசு சுவாமியாக “ இருக்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்காக..
“ படை மிரட்டி புனித சந்தியாகப்பரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ! “
கடவுளுக்கு சித்தமானால் மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..
“ இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !