இன்று வியாகுல மாதா திருநாள்..
“ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “ – லூக்காஸ் 2: 35
இயேசு சுவாமியின் இருதயமும் தேவமாதாவின் இருதயமும் ஒன்றே..
பாடுகள் படப்போவது யார்? இரத்தம் சிந்தப்போவது யார் ? நம்மை மீட்கப்போவது யார்?
ஆண்டவர் இயேசு கிறிஸ்துதானே..
இங்கே சிமியோன் பின்னால் நடக்கப்போகும் ஒரு நிகழ்வை தீர்க்க தரிசனமாக சொல்கிறார்.. அவர் அதை எப்படி சொல்லியிருக்க வேண்டும்..
“ உம்முடைய மகன் மனுமக்களை மீட்பதற்காக பாடுகள் பல பட்டு இரத்தம் சிந்தி மக்களை மீட்பார் “ என்று சொல்லியிருக்க வேண்டும்..
அல்லது அதையே சுருக்கி “ உம் மகனின் உள்ளத்தை ஒரு வாள் ஊடுறுவும்” என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்.. அவர் ஏன் மாதாவைப் பார்த்து “ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “ என்று சொன்னார்..
சொல்லபட்ட தீர்க்க தரிசனம் குழந்தையாகிய இயேசுவுக்கு.. சொல்லப்பட்டது குழந்தையின் தாயான மாதாவுக்கு இதிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது..
இயேசுவின் இருதயமும் மாதாவின் இருதயமும் ஒன்றுதான்..
இதை எப்படி நிரூபிப்பது..
கல்வாரியில் ஆண்டவர் இயேசுவின் இருதயம் குத்தப்பட்டபோது ஆண்டவர் இயேசு ஏற்கனவே மரித்துப்போயிருந்தார்.. ஆனால் அப்போது தேவமாதா வியாகுலத்தின் உச்சத்தில் இருந்தார். அந்த சூழ்நிலையில் ஆண்டவர் இயேசுவின் இருதயம் குத்தப்பட்டது.. அப்போது அந்த வேதனையும் துயரமும் யார் பெற்றிருப்பார்கள்.?. மாதாதான்.. (நன்றி வாழும் ஜெபமாலை இயக்கம்)
“வெந்த புண்ணில் வேலாக அந்த வாள்” ஏற்கனவே ஆண்டவரின் பாடுகளில் பங்கெடுத்து களைத்து சோர்ந்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது மேலும் ஒரு வாளாக மாதாவின் இருதயம் குத்தப்படுகிறது..
இப்போது தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட நிகழ்வைப்பாருங்கள்.. அப்போது குழந்தை இயேசு சிமியோன் “ பாடுகள் “ குறித்த தீர்க்கதரிசனத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது மாதாவின் கரங்களில் அழகாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்திருப்பார்.. அப்போதும் வேதனை மாதாவிற்குதான்
ஏற்கனவே நற்செய்தியில் பலமுறை பார்க்கின்றோம் மாதா “ இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தன் உள்ளத்தில் பதித்து சிந்தித்து வந்தார்கள் என்று ( லூக் 2:19,51).
ஆக குழந்தை இயேசுவை வளர்த்து ஆளாக்கி வாலிபனாக்கி இந்த தரணிக்காக 33 வயதில் அர்ப்பணிக்கும் வரை அவர் குழந்தையாக இருக்கும்போது சொல்லப்பட்ட “ வியாகுல வாள் “ மாதாவிற்கு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது..
குழந்தைப்பருவத்தில் அவரைப்பார்க்கும்போதும்.. பெரிய இயேசுவாக.. அவரைப்பார்க்கும் போது “ நம் மகன் ஒரு நாள் பாடுகள் பட்டு தன் கண் முன்னாலேயே மரிக்க போகிறான்” என்ற என்ற எண்ணம் நாள்தோறும் வந்திருக்கும். இதை கடவுள் மனிதனின் காவியமும் உறுதி செய்கிறது.. ஏன் பைபிளே உறுதி செய்துவிட்டது.. ( லூக் 2:19,51).
இப்போது அந்த சிமியோன் சொல்லிய தீர்க்க தரிசனத்தில் ஒரு மறையுண்மையும், மறைபொருளும் இருக்கிறதைப் பார்ப்போம்..
சிமியோன் ஏன் “ உமது உள்ளத்தையும்.. “ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.. அப்படியென்றால் வாளால் குத்தப்பட வேண்டிய இன்னொரு உள்ளமும் அங்கே இருக்கிறது என்று பொருள். அது யார் உள்ளம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உள்ளம்..
இப்படி சொல்லிப் பார்த்தால் மிகவும் சரியாக இருக்கும்..
“ உம்முடைய குழந்தையாகிய ஆண்டவர் இயேசுவின் உள்ளத்தை ஒரு வாள் ஊடுறுவும் ( அது மறைக்கப்பட்டுள்ளது). உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும்.. “ இப்போது அந்த வார்த்தை முழுமையாக இருக்கும்.. தீர்க்க தரிசனமும் முழுமைபெரும்..
மொத்தம் இரண்டு உள்ளங்கள் இரண்டு வாள்கள்.. சொல்லப்பட்டது ஒரு உள்ளத்திற்கு.. ஒரு வாளைப்பற்றி..
அப்படியென்றால்.. அந்த இரு உள்ளமும் ஒரு உள்ளமே.. இரண்டு வாள்களும் ஒரு வாளே..
மறை உண்மை : இருவருமே பாடுகள் அனுபவிக்கப்போகிறார்கள்..
மறை பொருள் : இரு உள்ளமுமே ஒரே உள்ளம்..
இது பைபிள் ரீதியாக நிரூபிக்கப்படும் ஒரு உண்மை.. இதை யார் மறுக்க முடியாது.. அப்படி மறுப்பவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது.
இப்படி எத்தனையோ கண்டுபிடிக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்பட வேண்டிய மறைவுண்மைகள், வெளிப்பாடுகள், முன் அடையாளங்கள் ஏராளமாக பைளிலில் புதைந்து இருக்கின்றன..
நல்ல உள்ளத்தோடும், நேர்மையான மனதோடும் அறிவைப் பயன்படுத்தாமல்.. பரிசுத்த ஆவியானவரின் துணையோடு ஞானத்தை பயன்படுத்தினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்..
மேலோட்டமாக படித்தால், வசனத்தை மட்டும் பிடித்துக்கொண்டால் அங்கொன்று இங்கொன்று என்று படித்தால் அது தப்பரையாகி, தப்பரைகளுக்கு விளக்கம் கொடுத்து கொண்டிருப்பவர்களின் நிலையாக மாறிவிடும்..
சிமியோன் கூறிய தீர்க்க தரிசனமான அந்த “ கல்வாரி வாளை “ இயேசு சுவாமியும் அனுபவித்தார்.. மாதாவும் அனுபவித்தார்.. அதை நாம் எப்போது அனுபவிக்கப்போகிறோம்.. நேற்றைய நாள் “ திருச்சிலுவை நாள் “ இன்று வியாகுல மாதா நாள் “. நாமும் நம்முடைய பங்கிற்கு நம் வாழ்க்கையில் வரும் துன்பச் சிலுவைகளை அவர்களோடு சேர்ந்து காணிக்கையாக ஒப்புக்கொடுத்தால் மட்டுமே ஆண்டவருடைய பாடுகளில் நாமும் பங்காளிகளாக மாற முடியும்..
“ வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே !
சிலுவையின் அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ “
நம் நேசப்பிதா வாழ்த்தபெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !