பிரிவினை சபையினர் கத்தோலிக்கரை இழுக்க பயன்படுத்தும் பெரிய ஆயுதம் “ சிலை வழிபாடு “ அதைப்பற்றி சில விளக்கங்கள்..
தந்தையாகிய பிதாவின் சிலை வழிப்பாட்டு விளக்கம் : ( பரிசுத்த வேதாகமத்தின் இரண்டாம் புத்தகம் )
“மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.” – யாத்திராகமம் 20 : 4
கத்தோலிக்கர்கள் யாரும் அப்படிச் செய்கிறார்களா?
சிலைவழிபாடு குறித்து பரிசுத்த வேதாகமத்தின் கடைசி புத்தகமான திருவெளிப்பாடு :
“இவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களை மாசுபடுத்தாதவர்கள்; கன்னிமை காத்தவர்கள். இவர்கள் செம்மறி செல்லுமிடமெல்லாம் அவரைத் தொடர்ந்து செல்பவர்கள். கடவுளுக்கும் செம்மறிக்கும் அர்ச்சிக்கப்பட்ட முதற்கனிகளாக மனித குலத்தினின்று மீட்கப்பட்டவர்கள்.” – திருவெளி 14 :4
இப்போது அதன் கீழே (பரிசுத்த வேதாகமத்தில்) இருக்கும் அடிக்குறிப்பை பார்ப்போம்..
கன்னிமை காத்தவர்கள் : இவர்கள் சிலை வழிபாட்டுக்கு இடங்கொடாமல் தங்களைக் காத்தவர்கள்; சிலை வழிபாடு வேதாகமத்தில் பரத்தமைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது ( யாகப்பர் 4:4, எபேசியர் 5: 23)
சிலைவழிபாடு என்பது பைபிள் படி பரத்தமை அதாவது விபச்சாரம்..
“விபசாரிகள் போல் வாழ்பவர்களே, உலகத்தோடு நட்பு கொள்வது, கடவுளைப் பகைப்பது என அறியீர்களோ? உலகுக்கு நண்பனாக விரும்பும் எவனும், கடவுளுக்குப் பகைவனாகிறான்.” யாகப்பர் 4:4
“ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோல் கணவன் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான். 'கிறிஸ்து திருச்சபையாகிய தம் உடலின் மீட்பர்.” எபேசியர் 5: 23
கிறிஸ்து சுவாமி எந்தத் திருச்சபைக்கு தலையாய் இருக்கிறார்?. அவர் உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபைக்கு. கிறிஸ்துவின் உடல் எது? அதுவும் திருச்சபை.. அதிலும் ஆண்டவர் விட்டுக்கொடுக்கவில்லை.. அப்போ இந்த திருச்சபையும் எதைக்குறிக்கிறது? கிறிஸ்து உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபையைக் குறிக்கிறது..
சரி.. இதில் ஏன் கணவன்- மனைவி உறவு சுட்டிக்காட்டப்படுகிறது.. இதில் மட்டுமல்ல வேதாகமத்தில் பல இடங்களில் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவை கணவன் மனைவியின் உறவுக்கு இணையாகக் காட்டப்பட்டுள்ளது.. ஏன் இயேசு சுவாமி கூட தன்னை “ மணவாளன் “ என்று குறிப்பிட்டுள்ளார்..
அந்த உறவில் பிரமாணிக்கம் தவறுபவர்களை கடவுள் பலமுறை “ விபச்சாரம் செய்பவர்கள் “ என்று கூறி தண்டித்துள்ளார் பலமுறை..
சரி இப்போ பிரிவினை சபையினருக்கு சில கேள்விகள்…
நீங்கள் கத்தோளிக்கரை சிலைவழிபாட்டினர் என்று கூறுகிறீர்களே.. அவர்கள் எந்த சபையில் இருக்கிறார்கள்… இயேசு உருவாக்கிய திருச்சபையில்..
நீங்கள் எந்த திருச்சபையை திட்டுகிறீர்கள்.. விமர்சிக்கிறீர்கள்..அவதூறாகப் பேசுகிறீர்கள்… முக்கியமாக நீங்கள் எந்தத் திருச்சபையை வெறுக்கிறீர்கள்?
இயேசு சுவாமி உருவாக்கிய திருச்சபையை..
நீங்கள் எந்தத் திருச்சபையிலிருந்து ஆட்களை உருவுகிறீர்கள்.. பிடித்துக்கொண்டு போகிறீர்கள்?
இயேசு சுவாமி நேரடியாக உருவாக்கிய கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து..
இப்போது நீங்கள் எந்தத் திருச்சபையில் இருக்கிறீர்கள்..?
தனிச் சபை.. அல்லது இயேசு சுவாமி உருவாக்கிய திருச்சபைலிரிந்து பிரிந்து சென்ற.. அந்த சபையிருந்து பிரிந்து சென்ற, அதிலிருந்து பிரிந்து சென்ற…அதிலிருந்து பிரிந்து சென்ற என்று… ஒரு பத்தாயிரம் சபையில் நீங்கள் ஒரு சபை.. ஆனால் கண்டிப்பாக அது இயேசு உருவாக்கிய திருச்சபை அல்ல…
இப்போது நீங்கள் சொல்லுங்கள் இப்போது யார் விபச்சாரம் செய்கிறார்கள் ? யார் சிலை வழிபாடு செய்கிறார்கள்..?
நீங்களே சிலை வழிபாடு செய்துகொண்டு… சிலை வழிபாட்டில் இருந்து கொண்டு கத்தோலிக்கரை சிலை வழிபாட்டுக்காரர்கள் என்று சொல்லுகிறீர்களே அது சரியா? சரி போனீங்க.. அங்கே சும்மா இருக்காமல் கத்தோலிக்க சபையிலிருந்து மேலும் ஆள் பிடிக்கிறீர்களே அது சரியா?
இப்போது மீண்டும் கடவுள் குரல்,
“கடவுளுக்கு அஞ்சுங்கள், அவரை மகிமைப்படுத்துங்கள். அவர் தீர்ப்பிடும் நேரம் வந்துவிட்டது. விண்ணும் மண்ணும் தொழுங்கள்" என்று அவர் உரத்த குரலில் கூறினார்.” திருவெளி 14 : 7
இப்போது அதன் அடிக்குறிப்பு யாத் 20: 4 -ஐ சுட்டிக்காட்டுகிறது..
“மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.” – யாத்திராகமம் 20 : 4
அப்படின்னா என்ன அர்த்தம்?...
வானமும், பூமியும், தண்ணீரும் கடவுளுடையன.. வானத்திலும், பூமியிலும், தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான/நிகராக ஓர் உருவத்தையோ/விக்கிரகத்தையோ அதாவது அவைகள் பொருட்களாக இருக்கலாம்.. அல்லது உயிரினங்களாக இருக்கலாம்.. (இதில் மனிதனைப் பற்றி குறிப்பிடவில்லை).
இஸ்ராயேல் மக்கள் அன்று தண்டிக்கப்பட்டது எதனால்?
தங்கத்தினால் பொற்கன்றுக்குட்டியை செய்து அதை தொழுததால்..
ஆண்டவர் வெண்கலப் பாம்பை உற்று நோக்கச் சொன்னது எதனால்?
கொள்ளிவாய் பாம்புகடியிலிருந்து இஸ்ராயேல் மக்கள் குணமானது எதனால்?
அதில் ஆண்டவருடைய பிரசன்னம் இருந்ததால்..
ஆண்டவர் கெருபீம்களை செய்யச் சொன்னது எதற்காக?
மோயிசனும், ஆரோனும் ஏன் முகம் குப்புற விழுந்து வணங்கினார்கள்..
அதில் ஆண்டவர் பிரசன்னம் இருந்ததால்…
கத்தோலிக்கர்கள் யாரும் எந்த சுரூபத்திற்கு முன் குப்புற விழுந்து வணங்குவதில்லை.. வணங்குவது… ஆராதிப்பது எல்லாம் திவ்ய நற்கருணை ஆண்டவருக்கு மட்டுமே..
இது போன்று பல விளக்கங்கள் கொடுக்க முடியும்??
முதலில் உங்கள் சிந்தனையில் அறம் இல்லை… அன்பு இல்லை… நம்பிக்கை இல்லை.. விசுவாசம் இல்லை.. எல்லாவற்றையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறீர்கள்..
ஆண்டவர் இயேசு உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபையை வெறுப்பது முதல் தவறு… அதிலும் பெரிய தவறு ஆட்டுப்பட்டியில் வேறு வழியாக நுழைந்து அவர்களைத் திருடிச் செல்வது அடுத்த தவறு…
கத்தோலிக்கர்களின் விசுவசத்தை குழைத்து… அவர்களுக்கு கிடைத்து வந்த அருட்சாதனங்களை அவர்கள் பெற விடாமல் செய்து.. தடுத்து திவ்ய நற்கருணை ஆண்டவரிடமிருந்து அவர்கள் ஆசீர்வாதத்தை தடுத்து, மாதாவிடமிருந்து பிரித்து அவர்கள் பாதுகாப்பை இல்லாமல் செய்து மொத்தத்தில் கத்தோலிக்கர் மோட்சமோ, உத்தரிக்கும் ஸ்தலமோ சென்று நரகத்திலிருந்து தப்பிக்கும் அனைத்து வழிகளையும் அடைத்து அவர்களை பின் வாசல் வழியாக அழைத்துச் செல்லும் நீங்கள் விக்கிரக ஆராதனைக் காரர்கள்தானே? நீங்கள் செய்வதற்கு என்ன பெயர்?
நீங்கள் இந்துக்களிடமும், முஸ்லீம்களிடமா போய் நற்செய்தியை அறிவிக்கிறீர்கள்?
ஏற்கனவே ஒரு குடும்பத்தில் இருப்பவர்களை.. தாய் திருச்சபையில் இருப்பவர்களை குடியைக் கெடுத்து பிரித்து செல்லும் செயல் என்ன செயல்? உங்களுக்கு என்ன பெயர்?
மேலும் தேவ தாயை யார் பழிக்கிறார்கள்.. இந்துவா? அல்லது முஸ்லீமா? அல்ல அவர்கள் தேவதாய் மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார்கள்..
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட கடவுளின் தாயைப் பழிக்க மாட்டான்..
ஆனால் தமத்திருத்துவம் வாழும் கோவிலை… பரிசுத்த ஆவியின் ஆலயத்தை.. புதிய உடன்படிக்கைப் பேழையை, புதிய ஏவாளை.. கடவுளின் தாயை யார் பழிக்கிறார்கள்..?
கடவுளையோ கடவுளைச் சார்ந்தவர்களையோ ஒருவனால் மட்டும்தான் பழிக்க முடியும்…சாத்தனால்தான் அந்த செயலைச் செய்ய முடியும். ஆனால் அவன் செய்யும் அதே செயலை நீங்களும் செய்துகொண்டு நாங்கள் ஆண்டவர் இயேசுவைத்தான் கும்பிடுகிறோம்.. பரிசுத்த ஆவியானவர் எங்களிடம் வருவார் என்று சொல்கிறீர்களே .. இது எப்பேர்பட்ட பொய். உங்களிடம் வருவது எந்த ஆவி..?
யார் என்ன சொன்னாலும், எல்லாத்தையும் நம்பி அவர் பின்னால் செல்லும் கத்தோலிக்கரை என்ன சொல்வது.. ஆனால் கத்தோலிக்க விசுவாசத்தை மறுதலித்து பிரிவினை சபையினர் பின்னால் செல்லும் கத்தோலிக்கர் செய்வதும் சிலை வழிபாடே.. அதுவும் விபச்சாரமே..
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !