மரியாயின் வியாகுல பக்தி நமது திவ்விய ஆண்டவருக்கு மிகவும் பிரியமானதாக இருப்பதால், அது ஏராளமான வரப் பிரசாதங்களின் ஊற்றாக உள்ளது.
பல ஞான ஆசிரியர்கள் கூறுவதுபோல, தான் அனுபவித்த கஷ்டங்களின் மூலம் மாதாவுக்குத் தன் மைந்தன்மீது ஒரு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. எதை அவரிடம் மாதா கேட்டாலும், அவர்களுக்கு அதை சேசு மறுப்பதில்லை.
சேசுவின் தாயான மாதாவின் வியாகுலங்களின் மீது நாம் இரக்கம் கொள்ளும்போது சேசுவை நம்மிடம் ஈர்த்துக் கொள்கிறோம்.
அர்ச். பெர்நார்து கூறுவது போல, “சேசு அவரது தாயின் வியாகுலங்களை பக்தியுடன் தியானிப்பவர்களிடம் தம்மையே கொடுத்துள்ளார்.”
வண. பினாஸ்கோ வெரோணிக்காவிடம் ஒரு தடவை சேசு, “என் மகளே, என்னுடைய பாடுகளின் நிமித்தம் நீ இரக்கப்பட்டு சிந்தும் கண்ணீர் எனக்கு உகந்ததாக உள்ளது. இதை உன் மனதில் வை. என் தாய் மாமரியின் மீது நான் கொண்டுள்ள அளவற்ற நேசத்தால், என் தாயின் வியாகுலங்களின் மீது நீ இரக்கம் கொண்டு சிந்தும் கண்ணீர் எனக்கு இன்னும் அதிக மதிப்புமிக்கதாக உள்ளது” என்றார்.
நிச்சயமாக சில பக்தி முயற்சிகளுக்கு நமது இரட்சகர் பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார். இந்த பக்தி முயற்சி அவற்றில் சிறந்த ஒன்றாய் உள்ளது. ஏனென்றால் இது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாய் உள்ளது.