“நானே உயிர் தரும் உணவு” – அருளப்பர் (யோவான்) 6 : 48
“நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே." – அருளப்பர் 6 :51
“என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.”
“என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம் “ – அருளப்பர் 6 : 54-55.
கடவுள் கொடுத்த உயிர்தானே ? கடவுளை அறிக்கையிடாமல் அந்த உயிர் இருந்து என்ன பயன்..?
கடவுளுக்கு சாட்சி சொல்லத்தானே இந்த வாழ்க்கை? கடவுளுக்கு சாட்சியாய் வாழத்தானே இந்த வாழ்க்கை..
அவருக்கு சாட்சி சொல்லாமல் வாழும் வாழ்க்கையால் என்ன பயன்?
“என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்” என்று சொல்லிய பின்பும் நம்முடைய விசுவாசம் செத்துப்போனால் இப்போது இருப்பது பினம்தானே..
அன்று பூசைக்காக ஒடினார்கள்… பூசை வைக்க ஓடினார்கள்… காட்டுக்குள் முடங்கினார்கள்…குகைக்குள் முடங்கினார்கள்.. வீட்டுக்குள் முடங்கினார்கள் கடவுளுக்காக.. அன்று விசுவாசம் வாழ்ந்தது… வளர்த்தது.. திருச்சபை வளர்ந்தது..
யாரும் உயிருக்கு பயப்படவில்லை.. மிரட்டுவோரை எதிர்த்து நின்றார்கள்..
வாளுக்கு அஞ்சவில்லை… கொதிக்கும் தார் எண்ணெய்க்கு அஞ்சவில்லை… உறுமும் சிங்கத்திற்கு அஞ்சவில்லை…. நெருப்புக்கு அஞ்சவில்லை.. அரசனின் உருட்டலுக்கு அஞ்சவில்லை… மிரட்டலுக்கு அஞ்சவில்லை.. எதற்கும் அஞ்சவில்லை..
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் போல தியோபரஸாக அதாவது உயிருள்ள கடவுளை கொண்டிருப்பவர்களாக துணிந்து நின்றார்கள்.. தீமையை எதிர்த்து நின்றார்கள்..
இப்போது கொரோனாவம்ல… அது கடவுளை விட பெரிசாம்ல.. அதைக் கடவுளால ஒன்னும் செய்ய முடியாதாம்ல..( கடவுளால் கொராவை மட்டும் அல்ல அவன் அப்பனையும் சேர்த்து அழிக்க முடியும்) கடவுளாக நம்மிடம் வந்தாலும்.. நமக்கு நோயை பரப்பி விட்டுவாரம்ல..
என்ன தைரியம்.. ? எவ்வளவு பெரிய துரோகம் ? உயிருக்கு பயம்.. அவ்வளவு பயம்… ஓடு.. ஓடு.. ஆண்டவரைப் பார்த்து பயந்து ஓடு.. பயம்… பயம்.. பயம்.. உயிருக்கு அவ்வளவு பயம்..
“ இப்போது கொரோனா வந்துருக்கிறதுனால் நாங்க கையில மட்டும்தான் கொடுப்போம்.. அதுவும் நொட்டாங்கையில கொடுப்போம்.. அதுவும் யாரை வேனாலும் ( பொது நிலையினரையும்) வச்சி கொடுப்போம்.. புதுசா புதுநன்மை எடுக்கும் குழந்தைகளுக்கும் நாங்க நொட்டாங்கையிலதான் கொடுப்போம்”
ஏன் நோய்க்கு பயப்படும் அளவுக்கு கடவுளுக்கு பயப்படுவதில்லை.. கடவுள் பயம் எங்கே போனது.. கடவுள் பயமே ஞானத்தின் தொடக்கம்.. நமக்கு ஞானம் வேண்டாம்.. உயிர் மட்டும் போதும்..
கத்தோலிக்க கிறிஸ்துவத்தின் விசுவாச மையம் திவ்ய நற்கருணை.. ஏன் கிறிஸ்தவமே திவ்ய நற்கருணை ஆண்டவரில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.. திவ்ய நற்கருணை இல்லையென்றால் கிறிஸ்தவமே இல்லை.. அப்படியிருக்க நற்கருணை ஆண்டவரை விசுவசிக்காமல்.. அவரை நம்பாமல்.. அவரை யாரிடம் வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்துவிட்டு.. அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டு என்ன சாதித்துக்கொண்டிருக்கிறீர்கள்.. எதை சாதிக்கப்போகிறீர்கள்?
நம் நித்திய தலைமைக் குருவை தொட ஒரு குருவானவருக்குத்தான் தகுதி உண்டு.. அருகதை இருக்கிறது.. யாருக்கும் அல்ல.. எவருக்கும் அல்ல.. யார் வேண்டுமாலும் அல்ல..
அப்படியென்றால் குருத்துவத்தின் மகத்துவம் என்ன? அதன் புனிதத்துவம் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? யார் வேண்டுமானாலும் ஆண்டவரைத் தொடலாம் என்றால் குருத்துவம் எதற்கு ? குருவானவர் எதற்கு? ஒரு குருவானவர் எதை வேண்டுமாலும் விட்டுக்கொடுக்கலாம்.. ஆனால் ஆண்டவரைத் தொடும் அதிகாரத்தை மட்டும் விட்டுக் கொடுக்கவே கூடாது..
பொது நிலையினர் எந்த மமதையோடு ஆண்டவரைத்தொடுகிறார்கள்.. ? உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது யார்? உனக்கு அந்த தகுதி இருக்கா? நீ அவ்வளவு பெரிய ஆளா? எந்த தைரியத்தோடு.. ஆண்டவரை.. கடவுளைத் தொடுகிறாய்?
திவ்ய நற்கருணை ஆண்டவரின் மேல் உள்ள உயிருள்ள விசுவாசம் அசைக்கப்பட்டால்.. தடம்புரண்டால்.. சுருக்கமாக சொல்லப்போனால் திவ்ய நற்கருணை ஆண்டவர் மேல் கை வைத்தால்..வைக்கப்பட்டால்.. அவ்வளவுதான்.. அதன் பின்,
“இல்லை.. இல்லை “ என்ற ஒன்று மட்டுமே இருக்குமே தவிர..
“இருக்கு.. இருக்கு “ என்ற ஒன்று இருக்கவே.. இருக்காது..
யோசிப்போம்.. சிந்திப்போம்.. அடுத்தவர் எப்படி இருக்கிறார்கள்.. என்ன செய்கிறார்கள்.. என்பது முக்கியமல்ல.. நாம் நம்முடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்கிறோமா ? நம் கடவுளுக்கு பிரமானிக்கமாய் இருக்கிறோமா? என்பதுதான் முக்கியம்..
நமக்கு முன்னால் போகிறவர் என்ன செய்கிறார்? நமக்கு பின்னால் வருபவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்? என்பது எல்லாம் முக்கியமில்லை.. நாம் எப்படி இருக்கிறோம்..நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
என் கடவுள் முன் நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? என்னைக் காப்பாற்றும் கடவுள் முன் நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? முன்னால் உள்ளவரைப்பற்றியும், பின்னால் வருபவரைப் பற்றியும் நான் ஏன் யோசிக்க வேண்டும்? வெட்கப்பட வேண்டும்..
வெட்கப்பட்டால்.. கடவுள் என்ன செய்வார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்.. அவரும் நம்மைக் குறித்து வெட்கப்படுவார்.. மேலும் அவர் சொல்லிய ஒரு கடினமான வார்த்தை “ உங்களை எனக்குத் தெரியாது”
நான் என் கடவுள் முன் முழங்காலிடாமல் வேறு யார் முன் முழங்காலிடுவேன்.. என்னுடைய தலை என் கடவுளுக்கு வணங்காமல் யாருக்கு வணங்கப்போகிறது?
நான் குருவானவர் அல்லவே.. பின் நான் எப்படி ஆண்டவரை தொட நினைக்க வேண்டும்? தொட ஆசைப்பட வேண்டும்.. வேண்டாம்… வேண்டவே வேண்டாம்..
நம் ஆண்டவரைப் பெற முதலில் நம்மை தகுதியுள்ளவர்களாக்குவோம்.. நம்மை தயாரிப்போம்.. அதன் பின் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் ஆண்டவரைத் தேடிச்சென்று முழங்காலில் நின்று பக்தியோடு நாவில் மட்டுமே வாங்குவோம்.. நமக்கு நம் ஆண்டவர் நாவில் தரப்படவில்லை என்றால் ஆசை நன்மை வாங்கி எழுந்து நம் இடம் வந்து நம்மிடம் வந்த இயேசுவிடம் ஒரு பதினைந்து நிமிடமாவது பேசுவோம்.. உறவாடுவோம்.. அவரை ஆராதிப்போம்.. நன்றி கூறுவோம்.. நம் தேவைகளைக் கேட்போம்..
நாவில் தரப்பட்டாலும் இதையே செய்வோம்.. தகுதியான உள்ளத்தோடு அவரை வாங்கினால் என்ன நன்மை செய்வாரோ.. அதையே அவர் ஆசை நன்மை வழியாகவும் செய்வார்.. ஏனெனில்..
“ கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை “ – லூக்காஸ் 1: 37
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !