உலகெங்கும் போய் சத்தியம் முழுவதையும் மக்களினங்களுக்குப் போதிக்குமாறு கிறீஸ்துநாதர் தம் அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிட்டார். இதன் காரணமாக, விசுவாசத் திரட்டு, அல்லது கிறீஸ்துநாதரால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களின் முழுத் தொகுப்பு கடைசி அப்போஸ்தலரின் மரணத்தோடு நிறைவு பெற்று விட்டது.
ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் நாம் தேடும்போது, அப்போஸ்தலர்களில் பலர் மிகக் கொஞ்சமே எழுதியிருக்கிறார்கள், அல்லது எதுவுமே எழுதவில்லை என்று காண்கிறோம். இதன் விளைவாக, உலகெங்கும் போய், சகல மக்களினங்களுக்கும் சுவிசேஷத்தைப் போதிக்கும்படி கிறீஸ்துநாதர் கட்டளையிடும்போது, அதில் ஒரு முக்கியமான உண்மையை நாம் காண முடிகிறது.
பின்னாட்களில் அர்ச். சின்னப்பர் பின்வரும் வார்த்தைகளைத் தெசலோனிக்கேயருக்கு எழுதுகிறார்: ''ஆகையால் சகோதரரே, எங்கள் பிரசங்கத்தினாலாவது, நிருபத்தினாலாவது நீங்கள் கற்றுக்கொண்ட போதக முறைகளைக் கடைபிடித்து நிற்பீர்களாக" (2 தெச. 2 :14). இதிலிருந்து, அப்போஸ்தலிக்க காலங்களில் தொடங்கி, வேதாகமத்தில் ஒருபோதும் பதிவு செய்யப்படாத பல வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள் வாய்மொழியாகப் போதிக்கப்பட்டு வந்தன என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். இதையே நாம் தெய்வீகப் பாரம்பரியம் என்கிறோம்.
கேட்டினின்றும், தப்பறையினின்றும் நம்மைப் பாதுகாக்கும்படி, பரிசுத்த வேதாகமத்தைப் போலவே இந்தப் பாரம்பரியமும் அப்போஸ்தலர்களாலும், அவர்களது ஸ்தானாதிபதிகளாலும் பாதுகாத்துப் போதிக்கப்படுமாறு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆகவே, பரிசுத்த வேதாகமத்தைக் கடவுளின் வார்த்தை என்று நாம் மதிக்கும் அதே வேளையில் இன்னும் ஒரு படி மேலே சென்று, வேறு பலர் வாதிடுவது போல, வேதாகமம் மட்டுமே விசுவாசத்தின் ஏக விதி அல்ல, மாறாக, திருச்சபையின் ஞான மேய்ப்பர்களின் போதனையும் அதன் சட்டமாக இருக்கிறது என்று நாம் அறிக்கையிடுகிறோம்.