“ ஆகவே, இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர், மேழுலகோர் அனைவரும் மண்டியிட ‘ இயேசுகிறிஸ்து ஆண்டவர் ’ என்று தந்தையாகிய கடவுளுடைய மகிமைக்காக எல்லா நாவுமே அறிக்கையிடும் “
பிலிப்பியர் 2 :11
ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கே விண்ணவரும், மண்ணவரும், மூவுலகோரும் மண்டியிட வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்கிறது.. கற்றுத்தருகிறது..
ஆனால் இங்கே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவே மண்டியிடாத முடக்கு வாதம் பிடித்த முழங்கால்களை தேவாலயங்களில் சர்வ சாதாரனமாக பார்க்க முடிகிறது..
தெய்வீகத் திருப்பலி என்பது எப்பேர்பட்ட மகத்துவம் நிறைந்தது; உயர்ந்தது; உன்னதமானது; தெய்வீகமானது; மான்புமிக்கது..
அந்த திருப்பலியில் பங்கேற்க நமக்கு முதலில் தகுதியிருக்கிறதா? இல்லை.. இருந்தும் அத்தகைய வரப்பிரசாதங்கள் நிறைந்த அரியகொடை நமக்குத் தரப்படுகிறது என்றால்.. அதை நாம் ஒழுங்காக பயன்படுத்துகிறோமா?
அதில் எவ்வளவு பயபக்தியோடு நாம் பங்கேற்க வேண்டும்.. கண்டிப்பாக இப்பேர்பட்ட வரப்பிரசாதம் புனிதம் நிறைந்த பொக்கிஷம் வேறு எந்த மதத்திற்காகவது கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் நம்மை விட ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு அதிகமாக புனிதத்தை கடைப்பிடிப்பார்கள்.. கடவுளைக் கொண்டாடுவார்கள்..
இப்போது அவர்கள் கோவிலில் கடைப்பிடிப்பதைக் கூட நாம் கடைப்பிடிப்பதில்லை என்பது வேதனை..
கோவிலில் அவர்கள் செருப்போடு நுழைவதில்லை.. பிரசாதத்தை அவர்கள் இடக்கையில் வாங்குவதில்ல்லை.. கோவிலுக்குள் இருந்து கொண்டு யாரிடமும் பேசுவதில்லை.. அவர்கள் சாமி கும்பிடுவது ஒரு சில நிமிடங்களாக இருந்தாலும் பயபக்தியோடு கும்பிட்டு விட்டு செல்கிறார்கள்.. அங்கே அவர்கள் ஒரு ஒழுங்கை கடைப்பிடிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.. அங்கே இருக்கும் ஒழுங்கு கூட நம் ஆலயங்களில் கடைப்பிடிக்கப்படுவதில்லை..
ஞாயிறு திருப்பலிக்கு எந்த வித தயாரிப்புமில்லாமல் கடமைக்காக திருப்பலிக்கு செல்வது.. அதில் கவனமின்றி, அக்கரையின்றி திருப்பலியில் பங்கேற்பது, வாசகங்களுக்கும், நற்செய்திக்கும், பிரசங்கத்திற்கும் காது கொடுக்காமல் சிந்தனையை எங்கோ அலைய விட்டுவிட்டு பங்கேற்பது..
முக்கியமான நடுப்பூசை நேரத்தில் கூட (எழுந்தேற்றத்தின் போது) அசமந்தமாக, சோம்பலாக, சவுரியமாக, எதற்கு முழங்கால் போட வேண்டும் என்று இதுதான் வசதியாக இருக்கிறது என்று உட்கார்ந்திருப்பது எதைக்குறிக்கிறது என்றால்.. கடவுளுக்கு கொடுக்கும் 100 சதவீத அவமரியாதையும், உனக்குள் இருக்கும் அகங்காரத்தையும், ஆணவத்தையும், சோம்பேரித்தனத்தையும், அசமந்ததனத்தையும் காட்டுகிறது..
( இதில் முழங்காலில் இருக்க இயலாத நோயாளிகளை குறிப்பிடவில்லை)
அங்கே எழுந்தருளியிருப்பது உன்னையும், என்னையும் படைத்த கடவுள், பாதுகாக்கும் கடவுள், பராமரிக்கும் கடவுள், பரிசுத்தமும் வல்லமையும் நிரம்பி இருக்கும் கடவுள், மூவுலகையும் ஆட்சி செய்யும் கடவுள்..
அவர் மட்டும் வெறும் கோபக்கார கடவுளாக இருந்தால்..
இந்த வீம்பு பிடித்த முடக்குவாதக்காரர்களை அந்த இடத்திலேயே.. ஒரு நொடிப்பொழுதில் அழித்துவிட்டு அதற்குப்பதிலாக வேறு யாரையோ அல்லது வேறு புதிய படைப்பையோ படைத்திருப்பார்..
அவர் தாழ்ச்சியும், நீடித்த பொறுமையும், அளவில்லா அன்பும் நிறைந்தவராக இருப்பதால் உன்னையும், என்னையும் மன்னித்து ‘இருந்துவிட்டு போகட்டும்’ என்று விட்டுக்கொண்டிருக்கிறார்..
ஆனால் அதையே அட்வாண்டேஜாக எடுத்துக்கொடுத்துக்கொண்டு தெனாவெட்டாக இருக்கும் இந்த இந்த முடக்குவாதகாரர்கள் அதாவது காலிலும், கழுத்திலும் முடக்குவாதம் பிடித்தவர்களை என்னவென்று சொல்வது..
அதே முடக்குவாதங்கள் பாதரின் இறுதி ஆசீருக்கோ, அல்லது விசேச ஆசீர்வாதத்திற்கோ உடனே முழங்கால் போடுவதையும் பார்க்க முடிகிறது..
இது முழு சுய நலத்திற்காக.. அது ‘ அவர் நம் கடவுள்தான்.. இருந்தாலும் அவருக்கு இது போதும்.. நல்லா சப்புன்னு உட்கார்ந்து கொண்டு தலையை லைட்டா குனிஞ்சா போதும்’ என்ற நினைப்பு மற்று மிதப்பு..
இப்போது பொறுமையோடு இருக்கும் கடவுள் ஒரு நாள் கோபத்தோடு நம்மைப் பார்த்து கேள்வி கேட்கத்தான் போகிறார்..
ஆனால் அந்த நாள் மிகக் கொடிய நாளாக நமக்கு இருக்கும்..
திருப்பலி என்றால் என்ன? திருப்பலியில் என்ன நடக்கிறது? எதற்காக திருப்பலி நடத்தப்படுகிறது? நாம் யார் ? நம்முடைய தகுதி என்ன? இருந்தும் நமக்கு திருப்பலி கொடுக்கப்படுகிறது என்றால் அதை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்?
என்ற அறிவும் இல்லை.. கடவுளைப் பற்றிய அச்சமும் இல்லை..
அன்று அந்த முடக்கு வாதம் பிடித்தவரைப்பார்த்து “ எழுந்து உன் படுக்கையை தூக்கிக்கொண்டு நட “ என்று சொன்னார்..
இன்று இந்த ‘இறுமாப்பு’ என்ற முடக்குவாதக்காரர்களையும் பார்த்து, “ முதல்ல எழுந்து முழங்கால் போடு “ என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்.. ஆனால் அவர்கள் காதில்தான் விழவில்லை.. ஆண்டவரின் அன்பு மொழி..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !