ஜெபமாலையின் அடிப்படையாக, அதில் முதல் இடம் வகிக்கும் ஜெபங்கள் கர்த்தர் கற்பித்த ஜெபமும், மங்கள வார்த்தை ஜெபமுமே. அதாவது பரலோக மந்திரமும், அருள் நிறை மந்திரமும். இந்த இரண்டு ஜெபங்கள்தான் விசுவாசிகளின் முதல் பக்தி முயற்சிகளாயிருந்தன. இவைகள்தான் அப்போஸ்தலர்களின் காலம் முதல் இன்று வரை உபயோகத்தில் இருந்தும் வருகின்றன. அவையே விசுவாசிகளின் முதல் ஜெபம் என்றி ஐயத்திற்கிடமின்றி கூறலாம்.
ஆயினும், 1214-ஆண்டில்தான் ஜெபமாலை இன்று நாம் கொண்டிருக்கும் வடிவத்திலும் முறைப்படியும் தாயாகிய திருச்சபை பெற்றுக்கொண்டது. ஆல்பிஜென்ஸ் என்ற பதிதத்தைப் பின் சென்றவர்களையும், பாவங்களில் உழன்றவர்களையும், மனந்திருப்பும் வல்லமையுள்ள கருவியாக அர்ச். சாமி நாதர் தேவதாயிடமிருந்து இதைப் பெற்று திருச்சபைக்கு அளித்தார்.
அர்ச். சாமி நாதர் எவ்வாறு ஜெபமாலையைப் பெற்றுக் கொண்டார் என்பதை இப்போது கூறுகிறேன். ஆல்பிஜென்ஸியர் மனந்திரும்புவதற்கு இடையூறாக இருந்தது மக்களின் பாவங்களே என்பதை உணர்ந்த புனித சாமி நாதர், தூலூஸ் என்ற பட்டணத்தருகே இருந்த காட்டுக்குள் சென்று மூன்று நாட்கள் இரவும், பகலும் இடைவிடாது மன்றாடினார். அம்மூன்று நாளும் அவர் தேவ கோபத்தை அமர்த்த கடின தவ முயற்சிகளை செய்தும், அழுது மன்றாடுவதுமாகவே இருந்தார். சாட்டையால் அவர் தம்மையே எவ்வளவு அடித்துக் கொண்டார் என்றால் அவர் உடல் முழுவதும் புண்ணாகி இறுதியில் மயக்கமுற்று விழுந்தார்.
அப்போது தேவ அன்னை மூன்று சம்மனசுக்களுடன் அவருக்குத் தோன்றினார்கள்.
“ சாமி நாதா, எந்த ஆயுதத்தைக் கொண்டு உலகத்தைச் சீர்திருத்த பரிசுத்த தமத்திருத்துவம் விரும்புகின்றது என்பதை அறிவாயா? “ என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் மறு மொழியாக,
“ ஓ என் அன்னையே! என்னைவிட உங்களுக்கே இது நன்றாகத் தெறியும். ஏனென்றால், உம் திருக்குமாரான சேசு கிறிஸ்துவுக்குப்பின் எங்கள் இரட்சண்ய கருவியாய் நீங்களல்லவா இருக்கிறீர்கள் “ என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த தேவ அன்னை,
“ இந்த வகையான போராட்டத்தில் கபிரியேல் தூதன் கூறிய மங்கள வார்த்தைதான் வெற்றி தரும் கருவியாக உள்ளது. புதிய ஏற்பாட்டின் அடித்தளக்கல் அதுவே. எனவே இந்தக் கடினப்பட்ட ஆன்மாக்களை அனுகி அவர்களைக் கடவுள் பக்கம் திருப்ப வேண்டுமானால் என்னுடைய ஜெபமாலையைப் பிரசங்கி “ என்று கூறினார்கள்.
அர்ச். சாமி நாதர் எழுந்தார். ஆறுதல் பெற்றார். அந்தப் பிரதேசத்திலுள்ள மக்களை மனந்திருப்பும் ஆவலால் பற்றி எரிந்தவராய் நேரே பட்டணத்திலுள்ள மேற்றிரசன ஆலயத்துக்குச் சென்றார்..
உடனே கண்காணா வான தூதர்கள் மக்களைக் கூட்டுவதற்காக ஆலய மணிகளை ஒலிக்கச் செய்தார்கள். மக்கள் திரண்டனர். சாமி நாதர் பிரங்கிக்க ஆரம்பித்தார். அவர் பிரசங்கம் ஆரம்பித்ததும் ஒரு பயங்கர புயற்காற்று எழும்பியது. பூமி குலுங்கியது. கதிரவன் மங்கியது. பெரிய இடிமுழக்கமும் மின்னலும் காணப்பட்டது. எல்லோரும் மிகவும் அஞ்சினார்கள். அவ்வாலயத்தில் ஒரு முக்கிய இடத்தில் வைக்கப்பட்டுருந்த மாதாவின் படத்தைப் பார்த்த மக்கள் முன்னை விட அதிகம் பயந்தார்கள்.
மாதாவின் அந்தப்படம் தன் கரத்தை வான் நோக்கி மூன்று முறை உயர்த்தி அவர்கள் மனந்திருந்தி வாழ்க்கையைத் திருத்தி அமைத்து தேவ அன்னையின் பாதுகாப்பைத் தேடாவிட்டால் அவர்களைத் தண்டிக்குமாறு தேவ நீதியை அழைத்தது.
இயற்கைக்கு மேலான இந்நிகழ்ச்சிகளின் மூலமாக ஜெபமாலை என்னும் புதிய பக்திமுயற்சிகளைப் பரப்பவும், அதை மிகப் பரவலாக எல்லோரும் அறியச் செய்யவும் இறைவன் சித்தங்கொண்டார்.
இறுதியில் அர்ச்.சாமி நாதரின் வேண்டுதலால் புயல் அமர்ந்தது. அவர் தம் பிரசங்கத்தைத் தொடர்ந்தார். ஜெபமாலையில் முக்கியத்துவத்தையும் பலனையும் அவர் எவ்வளவு உருக்கத்துடனும், வலிமையுடனும் விவரித்துக் கூறினார் என்றால், ஏறக்குறைய தூலூஸ் நகர விசுவாசிகள் அனைவரும் ஜெபமாலையை ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் தவறானக் கருத்துக்களை மாற்றிக் கொண்டார்கள்.
வெகு துரிதத்தில் பட்டணத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. மக்கள் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள். தங்கள் பழைய துர்ப்பழக்கத்தை விட்டுவிட்டார்கள்.
நன்றி : மாதா புனிதர் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்
ஜெபமாலை என்ற வலிமையான ஆயுதத்தை கையில் எடுப்போம்…
“அலகைத் தலையை உருட்ட நாமே அணியைத் திரட்டுவோம்.. ஜெபமாலை.. மணியை உருட்டி பேயை விரட்டுவோம்… “
ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை… ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !