நரக நெருப்பு எவ்வளவு அகோரமானது என்றால், ஓ என் ஆத்துமமே, வேதபாரகர்கள் கூறுகிறபடி, அதன் ஒரேயொரு பொறி இந்தப் பூமியின்மீது விழுந்தால், ஒரே நொடியில் அது பூமியை எரித்து சாம்பலாக்கி விடும்!"
ஆத்துமத்தை நரகத்தில் தள்ள வல்லதாயிருக்கிற பாவத்தைக் குறித்து அர்ச். ஜெனோவா கத்தரீனம்மாள் பேசும் போது, "கடவுளுக்கு எதிரான ஒரே ஒரு அற்பப் பாவமும் கூட எவ்வளவு பெரிதான அசுத்தக் கறையைக் கொண்டிருக்கிறது என்பதை நான் ஒரு காட்சியில் கண்டபோது, இன்னும் நான் எப்படி சாகாமலிருக்கிறேன் என்று எனக்குப் புரிய வில்லை .
“நரகம் இவ்வளவு பயங்கரமானதாக இருப்பதைப் பற்றி நான் இனி அதிசயிக்க மாட்டேன். ஏனெனில் அது பாவத்திற்காகவே உண்டாக்கப்பட்டுள்ளது. உண்மையில் பாவத்தின் மகா கொடூரத் தன்மையோடு ஒப்பிடும்போது நரகம் அதற்குத் தகுந்த அளவுக்கு கொடூரமாய் இருப்பதாக நான் நினைக்கவில்லை . நரகத்திலும் கூட கடவுள் இரக்க முள்ளவராய் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஏனெனில் ஒரேயொரு அற்பப் பாவத்தின் கனாகனத்தைத் தான் நான் கண்டேன். அதனோடு ஒப்பிடும்போது, சாவான பாவம் எவ்வளவு அதிக பயங்கரமுள்ளதாயிருக்கிறது! அதுவும் ஓர் ஆன்மா தன் வாழ்நாளில் கட்டிக் கொள்ளும் ஏராள மான சாவான பாவங்களை ஒப்பிடும்போது, நரகமும் கூட அவற்றிற்குப் போதுமான தண்டனை அல்ல!” என்கிறாள்.
மேலும், தொன் போஸ்கோ தாம் கண்ட நரகக் கனவில், சிவந்த தீச்சுவாலைகளால் ஒளிர்விக்கப்படும் பிசுபிசுப்பான, பச்சை நிறமுள்ள புகை, மலைகளை விட உயரமாய் எழுந்து நின்ற பிரமாண்டமான நரகச் சுவர்களுக்குப் பின்னா லிருந்து எழுந்ததைத் தாம் கண்டதாகக் கூறுகிறார்.
இந்த நரகக் கனவின்போது, தமது காவல் தூதரின் கட்டாயத்தின்பேரில் வெண்கலத்தால் ஆன, மிகப் பரும னான ஆயிரம் சுற்றுச் சுவர்களைக் கடந்து சென்று, அதனுள் இருந்த பெரும் நெருப்புக் கடலாகிய நரகத்தையும், அதில் மூழ்கியிருந்த பசாசுக்களையும், சகல விதமான வாதைகளை அனுபவித்துக் கொண்டிருந்த பரிதாபத்திற்குரிய ஆன்மாக் களையும் பார்த்தபின், தொன்போஸ்கோ தம் தூதருடன் மீண்டும் அந்த ஆயிரம் சுவர்களின் கதவுகளைத் தாண்டி வெளியே வந்து கடைசிக் கதவுக்கு முன்பாக வந்து நின்றார்.
அப்போது, தொன் போஸ்கோ அந்தக் கடைசிக் கதவைத் தொட்டு உணர வேண்டும் என்று அவருடைய தூதர் அவரை வற்புறுத்தினார். இனி தொன் போஸ்கோவே கூறுவதைக் கேட்போம்: "ஆயினும் எனக்கு போதிய தைரியமில்லை. ஆகவே நான் பின்வாங்க முயன்றபோது, அவர் என்னைப் பிடித்துக் கொண்டார். “முயற்சி செய்து பாரும்” என்று அவர் வற்புறுத்தினார். என் கைகளை உறுதியாகப் பற்றிக் கொண்டு அவர் என்னை சுவரை நோக்கி இழுத்தார். “ஒரே ஒரு முறை தொடும், அப்போதுதான் நித்திய துன்பத்தின் சுவர்களைப் பார்த்ததாகவும், அவற்றைத் தொட்டதாகவும் நீர் சொல்லிக் கொள்ளலாம். மேலும், முதல் சுவரே இந்த அளவுக்கு தாங்க முடியாததாக இருந்தால், கடைசிச் சுவர் எப்படி இருக்கும் என்பதை நீர் புரிந்துகொள்ளவும் செய்யலாம். இந்தச் சுவரைப் பாரும்!” என்றார் அவர்.
நானும் அதைக் கூர்ந்து பார்த்தேன். அது நம்ப முடியாத அளவுக்கு பருமனாக இருந்தது. “இந்தச் சுவருக்கும், நிஜ மான நரக நெருப்புக்கும் இடையில் ஆயிரம் சுவர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சுவரும் ஓராயிரம் அளவீடுகள் பருமனானது, அடுத்த சுவரிலிருந்து சம அளவு தூரத்தில் இருப்பது. ஒரு அளவீடு என்பது ஆயிரம் மைல்கள். ஆகவே இந்தச் சுவர் நிஜமான நரக நெருப்பிலிருந்து பல கோடி மைல்கள் தொலைவில் இருக்கிறது. இது நரகத்தின் ஒரு மிகத் தொலைவான வெளி வளையம் மட்டுமே” என்று அவர் விளக்கினார்.
அவர் இதைச் சொன்ன போது, நான் ஓர் உள்ளுணர்வின் காரணமாகப் பின்னோக்கி நகர்ந்தேன். ஆனால் அவர் என் கையைப் பற்றிப் பிடித்து, அதைக் வலுக்கட்டாயமாகத் திறந்து, அந்த ஆயிரம் சுவர்களில் முதலாவது சுவரின் மீது வைத்து அழுத்தினார். அந்த உணர்ச்சி எவ்வளவு கொடூர வேதனை தருவதாக இருந்தது என்றால், நான் ஓர் அலறலோடு பின்நோக்கித் துள்ளிக் குதித்தேன். அதே கணத்தில் என் படுக்கையில் உட்கார்ந்திருப்பதை நான் உணர்ந்தேன்.
தேள் கொட்டியது போல என் கை வலித்துக் கொண்டிருந்தது. வலியைத் தணிப்பதற்காக நான் அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தேன். காலையில் நான் கண் விழித்தபோது, அது பயங்கரமாக வீங்கியிருந்ததைக் கவனித்தேன். கனவில்தான் அந்தச் சுவரில் என் கரம் வைத்து அழுத்தப் பட்டது என்றாலும், அதை நான் எவ்வளவு நிஜமாக உணர்ந்தேன் என்றால், என் உள்ளங்கையின் தோல் உரிந்து வந்து விட்டது” என்று தொன் போஸ்கோ தமது இந்த பயங்கர அனுபவத்தை விவரிக்கிறார்.
உண்மையான நரகத்திலிருந்து கோடிக்கணக்கான மைல்கள் தூரம் விலகியிருந்த அதன் கடைசிக் கதவைத் தொட்டதும் கூட இந்த அளவுக்கு வேதனை தரும் என்றால், நரக நெருப்பின் பயங்கரத்தைப் பற்றி எந்த வார்த்தைகளைக் கொண்டு விளக்க முடியும்!
எல்லாவற்றிற்கும் மேலாக, தேவதாய் கன்னி மாமரி பாத்திமாவில் குழந்தைகளுக்குக் காண்பித்த நரகக் காட்சி பற்றி சகோதரி லூஸியா தனது மூன்றாவது நினைவுக் குறிப்புப் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:
"தேவமாதா தன் கரங்களை விரித்தார்கள். அவர்களது கரங்களிலிருந்து பாய்ந்த ஒளி பூமியைப் பிளப்பது போலத் தோன்றியது. அங்கே ஒரு நெருப்புக் கடலை நாங்கள் கண்டோம். அந்த நெருப்பினுள் பசாசுக்களும், மனித உருவத்தில் ஆத்துமங்களும் அமிழ்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் பழுக்கச் சிவந்து ஊடுருவிப் பார்க்கக் கூடிய தீக்கங்குகள் போன்றிருந்தனர். சிலர் கறுத்துப் போயும், பித்தளை நிறமாகவும் இருந்தனர். மேகம் போன்ற கறுத்த புகையுடன் அவர்கள் தங்களுக்குள் இருந்தே பீறிட்டுக் கிளம்பிய தீச்சுவாலைகளால் அங்குமிங்குமாகத் தூக்கி வீசப்பட்டனர்.
பெரும் நெருப்புகளிலிருந்து வெடித்துச் சிதறும் தீப்பொறிகளைப் போல எவ்விதப் பாரமும் நடுநிலையுமின்றி எல்லாப் பக்கங்களிலும் சிதறி விழுந்தனர்.”