வியாகுல மாதாவே, சேசுவின் திருச்சிலுவையினடியில் நின்றபோது தேவரீர் அனுபவித்த கொடிய வேதனையையும், சேசுவின் மீது நீர் கொண்டிருந்த அளவற்ற நேசத்தையும் பார்த்து, என் கடைசி அவஸ்தையில் என் அருகிலிருக்கத் தயை செய்வீராக. என் வாழ்வின் கடைசி மூன்று மணி நேரத்தை உமது தாய்க்குரிய இருதயத்திடம் நான் ஒப்படைக் கிறேன். நம் மகா பிரியத்திற்குரிய ஆண்டவரின் மரண அவஸ்தையோடு இந்த நேரத்தையும் ஒன்றித்து, நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுப்பீராக. என் மரணத்திற்கு முன்பாக உத்தமமான சிநேகத்தோடும், மனஸ்தாபத்தோடும் திவ்விய நன்மை உட்கொள்ளும் வரப்பிரசாதத்தையும், சேசுவின் மெய்யான பிரசன்னத்தில் என் ஆத்துமம் என் உடலை விட்டுப் புறப்படும் வரப்பிரசாதத்தையும் எனக்குப் பெற்றுத் தரும்படியாக, கல்வாரியின்மீது உம்முடைய கண்ணீரோடு ஒன்றாகக் கலக்கப்பட்ட சேசுவின் விலைமதியாத திரு இரத்தத்தை என் பாவங்களுக்குப் பரிகாரமாக நித்திய பிதா வுக்கு அடிக்கடி ஒப்புக்கொடுக்கும்படி உம்மை இரந்து மன்றாடுகிறேன்.
பரிபூரண அன்புக்குப் பாத்திரமான மாதாவே, என் மரண வேளை நெருங்கி வரும்போது, என்னை உம்முடைய குழந்தையாக சேசுவிடம் சமர்ப்பித்து, என் சார்பாக அவரிடம், “மகனே, இவனை மன்னியும், ஏனெனில் தான் செய்தது இன்னதென்று இவன் அறியாதிருந்தான். இன்று இவனை உம்முடைய இராச்சியத்திற்குள் ஏற்றுக்கொள்ளும்” என்று சொல்வீராக. ஆமென்.