ஆசை நன்மை!

அன்பான கத்தோலிக்க மக்களே ! முடிந்தவரை நாளைத் திருப்பலியில் கலந்து கொள்ள முயற்சிப்போம் 7 மணிக்கு முன்னதாக… கண்டிப்பாக நம் பங்குத்தந்தையர்கள் நமக்காக… நம் நாட்டுக்காக… இந்த உலகத்திற்காக திருப்பலி நிறைவேற்றுவார்கள்.. அனைவருக்கும் விடுமுறை அளிக்கும் கடவுளுக்கு நம் பரிசுத்த தெய்வத்திற்கு ஒரு போதும் விடுமுறை அல்ல.

கண்ணை இமை போல காக்கும் தெய்வம் நம் தெய்வம்…ஏனென்றால் அந்த இமைப் பொழுதில் கூட நமக்கு துன்பம் வந்துவிடாமல் தடுக்க இமை கூட மூடாமல் எப்போதும் விழித்துக்கொண்டே இருப்பவர் அவர்.. அவருக்கு விடுமுறை கிடையாது.. அவருக்கு நாம் விடுமுறை கொடுக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.. அது இருக்கட்டும்…

இந்த மாதிரியான நேரத்தில் திருப்பலி ஜெபங்களைச் சொல்லி ( இதற்கு என்று தனிச் செபங்கள் உள்ளது… அதாவது திருப்பலியில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் இந்த திருப்பலி ஜெபங்களைச் சொல்லி ஆசை நன்மை வாங்கினால்.. திருப்பலியில் பங்கேற்ற பலன் கிடைக்கும்.. இந்த ஜெபங்களையும் அதற்குண்டான பலன்களையும் நம் திருச்சபைதான் தந்துள்ளது.. டி.வி.யில் பார்ப்பதை விட இந்த ஜெபங்கள் அதிக பலன் உள்ளது.. டி.வி.யில் திருப்பலி பாருங்கள்.. வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால் இந்த பூசை ஜெபங்களுக்கும் ஆசை நன்மைக்கும் பலன் அதிகம்…

அது என்ன ஆசை நன்மை ?

 நாம் முங்காலில் இருந்து (முடியாதவர்கள் பரவாயில்லை) கற்பனையாக நம் ஆண்டவரை நாவில் பெற்று இருதயத்திற்குள் அவரை அமர வைப்பதே ஆசை நன்மை.. நான் வழக்கமாக ஆண்டவரை நாவில் பெற்று எப்படி ஆராதிப்போமோ.. அதைப் போல கற்பனையாக.. அதாவது ஆசையாக நம் நாவில் வந்த ஆண்டவரை அதைப்போல ஏன் அதைவிட அதிகமாகவே ஆராதிப்போம்… வணங்குவோம்… நன்றி கூறுவோம்… நம் தேவைகளைக் கேட்போம்… அதற்கு உண்டான ஜெபங்களை சொல்லி நாம் ஆசை நன்மை வாங்குவோம்..

அதைப்போல் சில நேரங்களில் அந்த ஜெபங்கள் சொல்லாமல் கூட நம் மனதிற்குள் ஆசை  நன்மை வாங்கிக் கொண்டே இருக்க முடியும்… ஒரு நாளைக்கு ஆயிரம் தடவைகூட ஆசை நன்மைகள் வாங்கலாம்.. நம் ஆண்டவரை விட்டு ஒரு நொடிப்பொழுது கூட அவரை விட்டு பிரியாமல் இருக்க முடியும்… அதுதான் நம் தாய்திருச்சபை… மக்களுக்கு என்ன என்ன சூழ்நிலைகள் வரலாம்…அப்போது கூட அவர்களை எப்படிப் பாதுகாப்பது என்று பார்த்து பார்த்து வகுத்துள்ளது… அருட்சாதனங்களை பொழிந்துள்ளது.. ஒரு கத்தோலிக்கன் நரகம் போனால் அவனுடைய இருமாப்பும், தலைக்கணமும், அவனும் மட்டுமே காரணமாக இருப்பான்…

அந்த பூசை ஜெபங்கள் அல்லது அந்த லிங்குகள் அனுப்பி வைக்கப்படும்… கிடைத்தவர்கள் நேரடித் திருப்பலி… கிடைக்காதவர்கள் ஆசைத் திருப்பலி மற்றும் ஆசை நன்மையை வாங்கி

“ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறது “ என்ற  நம்முடைய கிறிஸ்தவ கடமையைச் செய்வோம்..

ஆசை நன்மை ஜெபம் :

என் சேசுவே! தேவரீர் மெய்யாகவே நற்கருணையில் இருக்கிறீரென்று நான் விசுவசிக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக உம்மை நான் நேசிக்கிறேன். என் ஆத்துமத்திலே உம்மைக் கொண்டிருக்க நான் மிகவும் ஆசிக்கிறேன். இப்பொழுது நான் தேவதிரவிய அனுமானத்தின் வழியாக உம்மை உட்கொள்ள முடியாமலிருப்பதால், என் ஆண்டவரே! ஞான விதமாய் என் இருதயத்தில் எழுந்தருளி வாரும்... ஆண்டவரே! நீர் என்னுள்ளத்தில் வந்திருக்கிறீர் என்று நான் நம்புகிறேன். என்னை முழுவதும் உம்முடன் ஒன்றிக்கிறேன். என்னை உம்மை விட்டு ஒருபோதும் பிரிய விடாதேயும் சேசுவே! ஆமென்.

நமதாண்டவராகிய சேசுவின் சரீரமும் இரத்தமும் என் ஆத்துமத்தை நித்திய சீவியத்துக்குக் காப்பாற்றுவதாக. (மூன்று தடவை).

ஆமென்.

எங்கள் திவ்ய நற்கருணை ஆண்டவரே ! தயவு செய்து இந்த வரட்சியை சீக்கிரத்தில் போக்கி விடுங்கள்..

பாவிகளின் ஏக நம்பிக்கையே ! எங்கள் பரிசுத்த திருமாதாவே… இந்தியாவின் பாதுகாவலியே ( ஒரு போப் ஆண்டவர் ஏற்கனவே அறிவித்ததுதான்) வெகு தூரத்திலிருந்த உணவை எங்களுக்கு கொண்டுவந்த கப்பலே !  ( நீதி மொழி 31:13) இப்போதும் தூரத்திலிருக்கும் உம் திருமகன் என்னும் உணவை எங்களுக்கு சீக்கிரம் அருகில் கொண்டு வந்து தாருங்கள் அம்மா… பிள்ளைகளுக்கு உணவைத் தருவதுதானே ஒரு தாயின் கடமை.. உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்… எங்களுக்கு கடவுள் சாப்பாடு போடுங்கள் அம்மா…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !