மகா பரிசுத்த கன்னிமாமரியின் ஏழு வியாகுலங்களுக்குத் தோத்திரமாக செய்யப்படும் ஏழு ஜெபங்கள்!

 (பாப்பரசர் ஏழாம் பத்திநாதரால் 1815-ல் அங்கீகரிக்கப்பட்டது.)

ஜெபத்தைத் தொடங்கும் விதம்: 

முதல்வர் : சர்வேசுரா, எனக்கு உதவியாக வாரும். 

துணைவர் : கர்த்தாவே, எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும். 

முதல்வர் : பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் மகிமை உண்டாவதாக. 

துணைவர் : ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும், எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். 

குறிப்பு: ஒவ்வொரு வியாகுல ஜெபத்திற்குப் பிறகும் ஒரு தடவையாக மொத்தம் ஏழு தடவைகள் அருள்நிறை மந்திரம் ஜெபிக்கப்பட வேண்டும்.


முதல் வியாகுலம்

சிமியோனின் தீர்க்கதரிசனம்

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, பரிசுத்தரும், வயோதிபருமான சிமியோனின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டு உம்முடைய மென்மையான இருதயம் பட்ட வியாகுலத்தை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகமாகத் துயருற்ற உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்குத் தாழ்ச்சி என்ற புண்ணியத் தையும், தெய்வ பயம் என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.


இரண்டாம் வியாகுலம்

திருக்குடும்பம் எகிப்துக்கு ஓடிப் போதல் 

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, எகிப்துக்கு ஓடிச் சென்ற போதும், அங்கே தங்கியிருந்தபோதும், மகா நேசமுள்ள உம்முடைய மாசற்ற இருதயம் அனுபவித்த வேதனையை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப் படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகக் கலக்கத்திற்கு உள்ளான உம்முடைய திரு இருதயத்தின் மூலமாக, உதாரம் என்னும் புண்ணியத்தையும், தேவபக்தி என்னும் பரிசுத்த கொடையையும் எனக்குப் பெற்றுத் தந்தருளும். 1 அரு. 


மூன்றாம் வியாகுலம்

சேசுபாலன் தேவாலயத்தில் காணாமல் போனது 

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, உம்முடைய பிரியமுள்ள சேசு காணாமல் போனபோது உம்முடைய கலக்கமுற்ற இருதயத்தை வாதித்த ஏக்கமுள்ள கவலைகளை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகமாகத் துயருற்ற உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்குப் பரிசுத்த கற்பு என்ற புண்ணியத்தையும், அறிவு என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.


நான்காம் வியாகுலம்

மாதா கல்வாரிப் பாதையில் சேசுவைச் சந்திக்கிறார்கள். 

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, சேசுநாதர் சிலுவை சுமந்து வருகையில் தேவரீர் அவரைச் சந்தித்தபோது, உம்முடைய மென்மையான இருதயம் பட்ட வியாகுலத்தை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகமாகத் துயருற்ற உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்குப் பொறுமை என்ற புண்ணியத்தையும், திடம் என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.


ஐந்தாம் வியாகுலம்

சேசு சிலுவையில் மரிக்கிறார்

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, சேசுவின் மரண அவஸ்தையின்போது அவருக்கருகில் நின்று கொண்டிருப் பதில் உம்முடைய தாராளமுள்ள இருதயம் அனுபவித்த வேதசாட்சிய வேதனையை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகமாகத் துயருற்ற உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்கு மட்டுத்திட்டம் என்ற புண்ணியத்தையும், விமரிசை என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.


ஆறாம் வியாகுலம்

மரித்த சேசுவின் திருச்சரீரத்தை மாதா தன் திருக்கரங்களில் பெற்றுக்கொள்கிறார்கள்.

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, அவரது திருவிலா ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்டு, அவரது திரு இருதயம் ஊடுருவப்பட்டபோதும், அவருடைய திருச் சரீரம் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு உமது திருமடியில் வளர்த்தப் பட்டபோதும், உத்தம அன்பினால் பரிதபித்த உம்முடைய இருதயம் பட்ட காயத்தை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகமாகத் துயருற்ற உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்குப் பிறர்சிநேகம் என்ற புண்ணியத்தையும், புத்தி என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.


ஏழாம் வியாகுலம்

சேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார். 

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, சேசுநாதருடைய திருச்சரீரம் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதைக் கண்டு, உம்முடைய மகா நேசமுள்ள திரு இருதயம் அனுபவித்த மிகக் கொடிய வியாகுலத்தை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இத்தகைய கைவிடப்படுதலின் கசப்பினுள் அமிழ்த்தப்பட்ட உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்கு விழிப்பாயிருத்தல் என்ற புண்ணியத்தையும், ஞானம் என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.) மு: சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு இந் நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, து: மிகவும் வியாகுலம் நிறைந்த கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


ஜெபிப்போமாக

ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவே, உமது கசப்பான திருப் . பாடுகளின் நேரத்தில் வியாகுல வாளால் தன் மகா பரிசுத்த ஆத்துமத்தில் ஊடுருவப்பட்ட உமது திருத்தாயாராகிய மகா பரிசுத்த கன்னிமாமரி, உமது கிருபாசனத்திற்கு முன்பாக, இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காகப் பரிந்து பேச வரமருளும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும்  ஜீவிக்கிறவரும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமான உலக இரட்சகருமாகிய உம் வழியாக இந்த வரத்தை மன்றாடிக் கேட்கிறோம். ஆமென்.