நரகத்தின் இந்தக் குறிப்பிட்ட வேதனை பற்றி நம் ஆண்டவரே அர்ச். சியென்னா கத்தரீனம்மாளுக்குக் கூறிய வார்த்தைகளைக் கேளுங்கள்:
“நரக வேதனைகளில் முதன்மையானது, என் காட்சி தங்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதை அவர்கள் அறிந் திருப்பதாகும். இது எந்த அளவுக்கு அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய தண்டனையாக இருக்கிறது என்றால், அவர்களுக்கு நான் இரண்டு வாய்ப்புகள் தருவதாகக் கற்பனை செய்து கொள்.
ஒன்றில் அவர்கள் நரகத்தின் எல்லா வகையான கொடிய வேதனைகளுக்கும் மத்தியில் என்னை எப்போதும் தரிசிக்கலாம், அல்லது அவர்கள் வேறு எந்த விதமான நரக வேதனைகளும் இல்லாமலிருக்கலாம். ஆனால் என் தேவ காட்சியும் அவர்களுக்குக் கிடைக்காது.
இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்து கொள்ளும்படி நான் அவர்களுக்கு வாய்ப்புத் தருவேன் என்றால், மிக உறுதியாக அவர்கள் இந்த முதலாவது வாய்ப்பைத்தான் தேர்ந்து கொள்வார்கள்.”
இறுதி வரை இந்தக் கொடூர வாதையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஆத்துமம் மெய்யாகவே பாக்கியம் பெற்றது!
கிறீஸ்தவனே! பரலோக இராச்சியத்தில் உன் தேவனாகிய ஆண்டவரோடும், உன் திருமாதாவோடும், சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர்களோடும் நித்திய காலமும் நீ பேரின்ப பாக்கியம் அனுபவிப்பதற்காகவே இவ்வுலகில் விடப்பட்டிருக்கிறாய்.
இதுவே கடவுளின் சித்தம்.
ஆனால் நீ உன் சித்தப்படி வாழ்ந்து, நரகத்தில் உன்னையே வீழ்த்திக் கொள்வாய் என்றால், அதற்குரிய குற்றவாளி நீ மட்டுமே.