1862, பிப்ரவரி 27 அன்று, தமது இருபத்து நான்காம் வயதில் மரித்த அர்ச். கபிரியேல் பொஸ்ஸெந்த்தி, எவ்வளவு விரைவாக வியாகுல மாதா தனது பக்தர்களை அர்ச்சியசிஷ்ட தனத்திற்கு வழிநடத்துகிறார்கள் என்பதை வெளிப்படுத்து கிறார். இந்த அர்ச்சியசிஷ்டவரின் ஆரம்பகால வாழ்வில் எந்த விதமான அர்ச்சியசிஷ்டதனமும் வெளிப்படவில்லை. ஏனென்றால் சிறிது காலமாக, தமக்குத் தரப்பட்ட துறவற அழைத்தலின் வரப்பிரசாதத்தை அவர் எதிர்த்துக் கொண் டிருந்தார். அப்படியிருந்தாலும் தேவ அன்னையால் அவர் திருப்பாடுகளின் சபை என்ற துறவற சபைக்கு அழைக்கப் பட்டவுடன், அதுவரை உலக இன்பங்களின் மீது நாட்டம் கொண்டிருந்த இந்த இளைஞர் தாழ்ச்சியுள்ள, ஒறுத்தல் வாழ்வை நேசிக்கிற, வியாகுல அன்னையின் கபிரியேலாக மாற்றப்பட்டார்.
அவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தின் முக்கியமான ஆதாரங்களில் ஒன்று அவருடைய கனிந்த, நேசப்பற்றுத லுள்ள வியாகுல மாதா பக்தியேயாகும். இந்த பக்தி மீது அவருக்கு இருந்த விசேஷ நேசமே துறவற வாழ்வில் இந்தப் பெயரை அவர் தேர்ந்து கொள்ளக் காரணமாக இருந்தது. வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட மரியாயின் மாசற்ற இருதயமே அவருடைய தியானங்களின் கருப்பொருளாக இருந்தது. தன் எல்லாச் செயல்களுக்கும் மாமரியின் சம்மதத்தைப் பெறுவது அவருடைய இடைவிடாத ஆசை யாக இருந்தது. அவருடைய புண்ணியங்கள் அனைத்தும் மரியாயின்மீது அவர் கொண்டிருந்த பக்தியால் உடுத்தப் பட்டிருந்தன. அது ஒரு மிகக் குறுகிய காலத்தில் துறவற உத்தமதனத்தின் சிகரத்திற்கு அவரை அழைத்துச் சென்றது. இந்த நம் அர்ச்சியசிஷ்டவர் மிக அடிக்கடி அவர்களுடைய வியாகுலங்களைப் பற்றிப் பேசுவார். அவர்களே அவரை ஆக்கிரமித்திருந்த சிந்தனையாகவும், அவருடைய இருதய மாகவும், அவருடைய சகலமுமாகவும் இருந்தார்கள். “என் நேசமிகு மாதாவின் வியாகுலம் மிகுந்த இருதயமே என் மோட்சம்!” என அவர் அடிக்கடி கூறுவார்.
தம் நண்பர்கள் மத்தியில் இந்த பக்தியைப் பரப்ப அவர் தம்மாலான எல்லா வழிகளிலும் முயன்று வந்தார். “நம் அலுவலிலிருந்து எப்போதெல்லாம் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு கிடைக்குமோ, அப்போதெல்லாம் நம் நேச அன்னை பட்ட துன்பங்களை தியானித்து உருகி, அவர்கள் மீது பரிதாபப்பட்டு, அதனால் அவர்களுக்கு ஆறுதல் தர நாம் முயற்சி செய்வோம்” என்று அவர் அவர்களிடம் கூறுவார். பகல் பொழுதில் சற்று ஓய்வு நேரம் கிடைத்தாலும், இந்தப் பயிற்சிக்காகவே அந்நேரத்தை அவர் எப்போதும் பயன் படுத்தினார். “மாதாவின் வேதனைகளை நாம் மறக்கக் கூடாது. நம் மரண வேளையில் அவர்களே நமக்கு ஆறுதல் தந்து, நம்மைத் தேற்றுவார்கள்” என அவர் சொல்வார். அவருடைய இந்த நம்பிக்கை வீணாகவில்லை. வீரத்துவமுள்ள பொறுமையோடு அவர் தாங்கிக்கொண்ட தமது கடைசி வியாதியின்போது, தன் வியாகுல மாதாவின்பேரில் தமக்கிருந்த பாசத்தின் நெகிழ்ச்சி தரும் அடையாளங்களை அவர் வெளிப்படுத்தினார். அடிக்கடி அவர் மாதாவின் படத்தை வறண்டு வெடித்த தம் உதடுகளால் முத்தமிடுவார். வியாகுலமுள்ள திருக்கன்னிகையின் படம் ஒன்றைத் தம் இருத யத்தின்மீது வைத்து அணைத்துக் கொண்டு, பரலோகத்தை நோக்கித் தம் கண்களை ஏறெடுத்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத நம்பிக்கையோடும், நேசத்தோடும், “ஓ என் அன்னையே, விரைந்து வாருங்கள்!” என்று கூக்குரலிட்டதே மரிப்பதற்கு முன் அவர் செய்த கடைசிச் செயலாக இருந்தது. - சம்மனசுக்கு ஒத்த இந்த இளைஞரின் முன்மாதிரிகையான மரணத்தைக் கண்ட அவரது சக துறவி ஒருவர், “இவ்வளவு குறுகிய காலத்தில் இவர் ஓர் அர்ச்சியசிஷ்டவராகி விட்டார். எப்பேர்ப்பட்ட பாக்கியமான மரணத்தை இவர் பெற்றுக் கொண்டார்!” என்று வியந்தபடி கூறினார். உண்மையாகவே வியாகுல மாதா அவருடைய வழிகாட்டியாக இருந்தார்கள். உத்தமதனம் என்னும் மலையின் சிகரத்திற்கு அவர்கள் அவரை விரைவாக இட்டுச் சென்றார்கள். மேலும் அவரு டைய சமாதானமுள்ள மரணத்தின்போது, அவர்கள் தன் காயப்பட்ட மாசற்ற இருதயமாகிய தேவாலயத்தின் பாதுகாவலுக்குள் அவரை ஏற்றுக் கொண்டார்கள்.
வழக்கத்திற்கு மாறாக, இந்த அர்ச்சியசிஷ்ட இளைஞர், தமது மரணத்திற்குப் பின் பதினைந்தே வருடங்களில் முத்திப்பேறு பட்டம் பெற்றார். 1920 மே 13 அன்று அவருக்கு அர்ச்சியசிஷ்டபட்டமும் வழங்கப்பட்டது.